JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 3

JB

Administrator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 3

"மிஸ்டர் ஃபெங்க் ஹியூவி. இன்னும் கொஞ்ச நேரத்துல வருண் வந்துடுவார். அதற்குப் பிறகு நாம் மேற்கொண்டு பேசிக்கலாம்."

கூறிய ஆரியனை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்த அந்தச் சீனாக்காரர் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஐரோப்பியரின் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க,

"சாரி மிஸ்டர் ஆரியன். நான் இன்றே எங்க நாட்டுக்குத் திரும்பணும். இங்க நாங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்கு ஆபத்து. ஏற்கனவே எங்களுடைய சப்ஸிடரி கம்பெனிகளுக்கு இடையில் பெரிய சலசலப்பு உருவாக ஆரம்பிச்சிடுச்சு. இதில் போட்டிக் கம்பெனிகளும் எங்களைத் தீவிரமா கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு அடி மிஸ் ஆனாலும் எங்க கவர்ன்மென்ட் எங்களுக்கு எதிரா ஸ்டெப்ஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆகையால் சீக்கிரமே நாம் பேசி முடிச்சிட்டுக் கிளம்பறது நல்லது.." என்றார் தீவிரமாக அந்த ஐரோப்பியர்.

பரபரத்துக் காணப்படும் அவர்களின் உடல் மொழிகளிலேயே தெரிந்தது எந்நேரமும் தங்களுக்கு இடையில் சிக்கல்கள் பிறக்கலாம் என்று.

அவர்களைச் சமாளிக்கும் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தோல்வியைத் தழுவி கொண்டிருந்த ஆர்யனின் மனம் எரிச்சலில் மூழ்கத் துவங்கியது.

இவ்வாறு பொறுமையை இழந்து கொண்டிருக்கும் நேரம் அவன் வழக்கமாகச் செய்யும் செய்கையில் ஒன்று அவனது விருப்பமான சிகாரை [Gurkha His Majesty's Reserve Cigar] புகைப்பது.

அமர்ந்திருந்த நாற்காலியில் மேலும் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவாறே மேஜையின் மேல் வைத்திருந்த அடர் பிரவுன் நிற பெட்டியில் இருந்து தனது சிகாரை எடுத்தவன் வாயில் வைக்க, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஐரோப்பிய வர்த்தகர் லைட்டரை உயிர்ப்பித்து அதனைப் பற்ற வைத்தார்.

ஒவ்வொரு முறை புகையை வெளியிடும் நேரமும் அவனது மனப்புகைச்சல் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.

நிமிடங்கள் சில கடந்து கொண்டிருந்ததில் அமைதியைத் தொலைத்த வெளிநாட்டுக் கூட்டாளர்களும் இதற்கு மேலும் இங்கு அமர்ந்திருப்பதில் பயனில்லை என்று எண்ணியவர்களாய் எழுந்த நேரம், ஏறக்குறைய 70,000 சதுரடியில் அமைந்துள்ள ஆரியனின் வைப்பர் இண்டஸ்ட்ரீஸின் பெரிய வளாகத்திற்குள் வருணின் சிகப்பு நிற மாசராட்டி அசுரகதியில் நுழைந்தது.

அவனது வருகை ஆரியனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

"ஹி இஸ் ஹியர்.. நீங்க உட்காருங்க.."

ஆரியன் கூறியும் அமராது எழுந்து நின்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கையில் சுமந்திருந்த சிறிய பிரீஃப்கேஸுடன் அறைக்குள் அட்டகாசமாய் நுழைந்தவனைக் கண்டு அவர்களையும் அறியாது அமர்ந்தனர் ஐவரும்.

கருப்பு நிற சட்டையும் கருப்பு நிறத்தில் கோட்டும் அதே நிறத்தில் பேண்டும் உடுத்தியிருந்தவனாய் எதிரில் வந்து நின்றவனின் ராஜ கம்பீரத் தோற்றம் அவர்களுக்குள் ஒரு பணிவைக் கிளப்பியது என்றால், பிரீஃப்கேஸை பிடித்திருந்தவனின் கரத்தில் கட்டப்பட்டிருந்த ரோஸ் கோல்டில் செய்த கருப்பு நிறத்திலான லூயி மொனெட் (Louis Moinet Meteoris Black and Rose Gold) கைக்கடிகாரம் அவனின் ஆளுமையை உறுதிப்படுத்தியது.

உலகில் வெகு சிலரே சொந்தமாக்கிக் கொண்டிருந்த பல லட்ச ரூபாய் பெருமான கைக்கடிகாரங்களில் ஒன்று அது.

அவர்களின் பார்வையில் விரவியிருந்த திகைப்பும் கலக்கமும் வருணின் இதழ்கோடியில் குறுநகையை வரவழைத்தது.

"உங்களை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனோ?"

கூறியவாறே தான் கொண்டு வந்திருக்கும் பிரீஃப்கேஸை மேஜையின் மேல் வைத்த வருண் அதனைத் திறந்தவன், அதில் இருந்து காகிதங்கள் சிலவற்றை எடுத்தவனாய் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாய் கொடுக்க, அது என்ன என்பது போல் விழித்தவர்கள் அதனப் படிக்கத் துவங்கியதுமே விருட்டென்று சொல்லி வைத்தார் போன்று நிமிர்ந்து வருணைப் பார்த்தனர்.

"மிஸ்டர் வருண், என்னது இது?"

"ஆவ்கோர் கம்பெனியை ஆரம்பிக்கும் முன் நீங்க எல்லாரும் கையெழுத்து போட்ட டாக்குமெண்ட்ஸ்.."

"இந்த மாதிரி ஒரு டாக்குமெண்டை நாங்க பார்த்த மாதிரி நியாபகமே இல்லையே.."

"நீங்க மறந்துட்டீங்கன்னா அதுக்கு நான் என்ன செய்யறது மிஸ்டர் லீ பார்க்?"

வெகு கூலாகச் சொன்னவனின் ஆணவத்தில் உள்ளுக்குள் பொறுமினாலும் செய்ய வழியற்றுத் திகைத்து அமர்ந்து இருந்தனர் ஐவரும்.

காரணம் என்ன தான் ஆரியனே இந்த 'ஆவ்கோர்' நிறுவனத்தின் 100 சதவீத பயனாளியாக இருந்தாலும், அதன் மறைமுக நிர்வாகி வருணே.

ஆக, அவர்கள் எழுவரில் வருணின் சம்மதம் இல்லாது ஆர்யனோ, சீனர்களோ அல்லது ஐரோப்பியர்களோ நிறுவனத்தை விட்டு வெளியேற முடியாதளவிற்கான ஒப்பந்தப் பத்திரமே அது.

மத்திய அமைச்சராகப் பதவியில் இருக்கும் ஆர்யன் இது போன்ற நிறுவனங்களை வெளி நாடுகளில் துவங்கி பணம் ஈட்டக்கூடாது என்ற சட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வருண் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றியிருந்த திட்டமே அந்த ‘ஆவ்கோர்’ என்கிற நிறுவனம்.

"இப்போ எங்கக்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க மிஸ்டர் வருண்?"

"மிஸ்டர் லீ, இது வரை எப்படி இந்தப் பிஸினஸஸ் நடந்துட்டு வந்ததோ அதே போல் இனியும் தொடர்ந்து நடக்கணும். உங்களுடைய நாட்டில் என்ன சிக்கல் வந்தாலும் அதை நீங்க தான் சமாளிக்கணும். பல லட்சம் கோடி வருமானம் வரும் பிஸ்னஸ் பண்ணும் போது இந்தளவுக்குக் கூடப் பிரச்சனைகள் வராமல் இருக்குமா? இதெல்லாம் தெரிஞ்சுத்தானே எங்க கூடக் கூட்டணி வச்சிக்கிட்டீங்க? ஸோ, உங்க பிரச்சனைகளை நீங்க பார்த்துக்கங்க, எங்க பிரச்சனைகளை நாங்க பார்த்துக்குறோம்.."

கூறியவன் முடிக்கவும் மீண்டும் ஆர்யனின் அலைபேசிக்கு தகவல் வந்தது.

'SSP ஷிவ நந்தன் இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சிருக்கான்.'

தகவலைப் படித்த ஆர்யன், "ஷிட்.. இவன் எதுக்கு இப்ப இங்க வந்திருக்கான்?" என்றவனாய் வருணைப் பார்க்க ஆர்யன் தெரிவிக்காமலேயே அது யார் என்பதைப் புரிந்து கொண்ட வருணின் புருவங்கள் லேசான மறுப்பில் சற்றே ஏறி இறங்கின.

"ஆர்யன், டில்லி கான்ஃப்ரன்ஸில் இவனுடைய மேரேஜைப் பத்தி இவன் பேசிட்டு இருந்ததை நாம ரெண்டு பேருமே கேட்டோம். கல்யாணப் பொண்ணுக்கு என்ன கலரில் புடவை எடுக்கணும்னு பேசிட்டு இருந்தவன் இவன். ஆனால் இப்போ இவனே இவனுடைய மேரேஜைத் தள்ளிப் போட்டிருக்கிறதா நான் கேள்விப்பட்டேன். அப்படின்னா நிச்சயமா ஏதோ ப்ளானோட தான் இவன் அப்படிச் செஞ்சிருப்பான். மும்பையை விட்டு வெளியேறக் கூடாதுன்னு தான் தன்னுடைய மேரேஜையே அவன் இப்போதைக்குக் கேன்சல் பண்ணிருக்கான். ஸோ, இவன் விஷயத்தில் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது"

கூறியவனாய் சட்டென்று நாற்காலியில் இருந்த எழுந்தவன் வெளிநாட்டு கூட்டாளிகளின் புறம் திரும்பினான்.

"நீங்க கிளம்பலாம். திரும்ப எப்போ, எங்க மீட் பண்ணனும்னு நான் சொல்றேன், அது வரை இந்தியா பக்கம் வராதீங்க.. அப்படியும் வந்தீங்கன்னா அதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பல்ல.."

ஏறக்குறைய எச்சரிக்கும் தொனியில் கட்டளையிடுவது போல் கூறியவாறே அவர்களின் முன் விரிக்கப்பட்டிருந்த காகிதங்களை நிதானமாக ப்ரீஃப்கேஸிற்குள் எடுத்து வைத்தவனாய் அறையை விட்டு வெளியேறிய நேரம், ஷிவாவின் ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் ஆர்யனின் அலுவலகம் இருந்த கட்டிடத்தின் வாயில் முன் கிறீச்சென்ற சத்தத்துடன் பிரேக்கிட்டு நின்றது.

அதற்குள் சீனர்களும் ஐரோப்பியர்களும் ஆர்யன் காட்டிய பாதையில் நடந்தவர்கள் கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்த வாயிலின் வழியாக வெளியேற, நடக்கக் கூடாதது எதுவோ நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கை மணி ஆர்யனின் மூளைக்குள் அதி அழுத்தமாய் அடித்தது.

அதற்குள் கட்டிடத்தின் முன்வாயிலின் வழியாகவே தைரியமாக வெளியேறிய வருண் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் மாசராட்டியை நோக்கி நடக்க, சொல்லி வைத்தார் போல் அவன் முன் வந்து நின்றான் ஷிவ நந்தன்.

"ஹலோ வருண், அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?

"வெல்கம் ஷிவா. என்ன திடீர் விஜயம்?"

"எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லத்தானே போறேன். Come on, come inside."

கூறியவாறே கண்களைச் சற்றே மூடி, அணிந்திருக்கும் சட்டையின் இடப்பக்க காலரை இலேசாக இழுத்துவிட்டவாறே கழுத்தை வலப்பக்கமாகச் சாய்த்து நிமிர்ந்த ஷிவாவின் தோற்றம் அந்நேரத்திலும் வருணின் கவனத்தை ஈர்த்தது.

சில நாட்களுக்கு முன் ஷிவ நந்தனின் மும்பை இடமாற்றத்தை அறிந்து அவனைப் பற்றிய காணொளிக்காட்சிகளைப் பார்த்திருந்ததில், இவ்வாறு செய்வது இவனது மேனரிசம் என்பதை அறிந்திருந்தான் வருண்.

ஆக என்னைச் சந்திப்பது இவனுக்கு ஏதோ ஒரு அசௌகரியத்தையோ அல்லது கோபத்தையே வரவழைக்கின்றது!

புரிந்துக் கொண்டவனாய், “நீங்க ஆர்யனைத்தானே பார்க்க வந்தீங்க ஷிவா.. அவர் உள்ளத்தான் இருக்காரு, போய்ப் பாருங்க." என்றான்.

"வருண், உங்க ரெண்டு பேரையும் தனித்தனியா சந்திக்கிறதே ரொம்பக் கஷ்டம்னு சொல்றாங்க.. இப்போ ஒண்ணா வேற இருக்கீங்க. நேத்துக் கான்ஃபரன்ஸில் சரியா பேச முடியலை. ஸோ, ஒரு ஐஞ்சு நிமிஷம் வந்துட்டுப் போங்க."

"சாரி ஷிவா, பெர்ஸ்னல் விஷயமா உடனே போகணும். See ya.."

கூறியவன் சட்டையில் சொருகியிருக்கும் சன்கிளாசை எடுத்து மாட்ட, அவனது கண்களில் தெறிக்கும் அனலை மறைக்கத்தான் கண்ணாடி எடுத்து அணிந்து கொள்கின்றான் என்பதைப் புரிந்து கொண்ட ஷிவாவின் இதழ்கோடியில் ஒரு புன்னகை நெளிந்தது.

அவனது நக்கல் சிரிப்பை உணர்ந்துக் கொண்டதில் வழக்கம் போல் கழுத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவனாய் இடது கன்னத்தின் உட்புறத்தைக் கடித்தவாறே [bite the inside of his cheek] காருக்குள் ஏறிய வருண் மாசராட்டியை சீறிக் கிளப்பினான்.

அவனது செய்கையைக் கண்டு தானும் புன்னகைத்த ஷிவா, 'அடுத்தது நீ தான் வருண்' என்று மனத்திற்குள் கங்கணம் கட்டிக்கொண்டவனாய் ஆர்யனின் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

******************************************************************

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தெற்கு மும்பையில் உள்ள, பல கோடீஸ்வர தொழில் அதிபர்கள், திரையுலகப் பிரமுகர்கள், மில்லியனர்களின் தாயகமாகும் மலைப்பகுதி, மலபார் ஹில் [Malabār Hill].

உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 பகுதிகளில் ஒன்றாகும் மலபார் மலைப்பகுதியில் அரபிக்கடலை பார்த்தவாறே அமைந்திருந்தது, அடர் ப்ரவுன் நிறமும் செந்நிறமும் கலந்த கற்களால் கட்டப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கோட்டை [castle].

கோட்டையின் வெளியே பச்சை நிற மரகதக்கற்களைத் தூவிவிட்டது போல் பரந்து விரிந்திருக்கும் தோட்டத்தைச் சுற்றிலும் பல வர்ண அழகிய மலர்களைச் சுமந்திருக்கும் செடிகள் வளர்ந்திருக்க, பல தசாப்தங்களாக அந்தக் கோட்டைக்கே உயிர் கொடுப்பதைப் போல் செழித்து வளர்ந்திருந்தன ஓங்கி உயர்ந்திருக்கும் மரங்கள்.

தோட்டத்தின் முன்புறம் அழகிய குளம் ஒன்று கட்டப்பட்டிருக்க, அமைதியின் சொர்க்கம் போல் கண்கொள்ளாக் காட்சியாய் தோற்றமளிக்கும் அந்தக் குளம் பல வண்ண மீன்களுக்கும் வெண்ணிற அன்ன பறவைகளுக்கும் சுவர்க்கமாகிப் போயிருந்தது என்றால் அது மிகையல்ல.

கடந்த காலப் பெருமைகளை நினைவூட்டுவது போல் ஆங்காங்கு முன்னோர்கள் மற்றும் சில அரசர்களின் சிலைகளும் அங்கு அலங்காரமாய் உருவாக்கப்பட்டிருந்ததில் அவ்விடத்தின் கம்பீரம் பல நூறு மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது.

கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு இதுவே ஒரே வழி என்பதைப் பறைசாற்றும் வகையில் வலிமையான இரும்புக் கதவுகள் அந்தக் கோட்டையின் மிகப்பெரிய வெளிவாயிலில் அமைக்கப்பட்டிருக்க, சீறும் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் சிகப்பு நிற மாசராட்டியைக் கண்டதுமே சப்தம் என்பதே இல்லாத அளவிற்குப் பிரம்மாண்டமான அந்தக் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன.

"மினிஸ்டர் வந்திருக்காரா?"

கோட்டை வாயிலில் நின்று கொண்டிருக்கும் காவலர்களிடம் கேட்ட வருண் அவர்கள் கூறிய பதிலில் வந்த வேகத்தில் மீண்டும் காரை செலுத்தி உள்ளே புக, அங்குக் கோட்டைக்குள் திருமணப் பேச்சு வார்த்தையைத் துவங்கியிருந்தார், அமைச்சர் முகேஷ் சௌஹான்.

"உங்கள் மகன் வருண் தேஸாயிக்கு என் மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஒரு வருடமாகிடுச்சு, ஆனால் இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கவில்லை. அதான் அதைப் பற்றிப் பேசலாம்னு வந்தோம். இன்றைக்கே நிச்சயதார்த்த தேதியையும் முடிவு செய்துட்டால் நல்லதுன்னு என் மனைவி நினைக்கறாங்க.."

கூறியவரைப் பார்த்தவாறே அவருக்கு எதிரில் இருந்த ஸோஃபாவில் அமர்ந்திருந்த சஞ்சீவ் தேஸாயின் கண்கள், பெற்றோருக்கு அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் மீது நகர்ந்தன.

25 வயதை சில நாட்களுக்கு முன் எட்டியிருந்த சிதாரா சௌஹான்.

பேரழகு என்ற வார்த்தைக்குப் பொருத்தமான எழிலுருவம் கொண்ட தேவதை.

அரச மைந்தர்கள், ஆட்சி புரியத் தக்கவர்கள் என்ற அர்த்தங்கள் கொண்ட ராஜ்புத் அல்லது ராஜபுத்திரர்கள் என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள், முகேஷ் சௌஹானும் அவரது மனைவி ஸ்மித்தா சௌஹானும்.

ஒரு நாட்டின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் சில வம்சத்தினர் சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருப்பார்கள்.

சில வம்சத்தினர் வலிமையான நாட்டை உருவாக்கியிருப்பார்கள். இதில் ராஜபுத்திரர்கள் இரண்டாவது வகை.

இந்திய வரலாற்றில் மிகவும் வலிமை மிக்கக் காலகட்டமாக இருந்தது ராஜபுத்திரர்கள் காலம்தான்.

ராஜபுத்திரர்கள் இனத்தின் பெண்களின் அழகு நமது சரித்திரத்தில் பல இடங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக ராஜபுத்திர வம்சத்தில் பிறந்து இன்றளவும் இந்திய சரித்திரத்தில் அழியா இடம் பிடித்திருக்கும் அழகி ‘ராணி பத்மினி’.

12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில், இஸ்லாம் துருக்கி நாடோடி படையெடுப்பாளர்களால் நிறுவப்பட்ட டெல்லி சுல்தானகம், அதிகாரத்தில் பெரிதும் வளர்ந்து வந்தது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தென்-மத்திய பகுதியில் உள்ள ஒரு பகுதியான மேவார் மீது மீண்டும் மீண்டும் சுல்தான்கள் தாக்குதல்களை நடத்தினர்.

அப்பொழுது சுல்தான் அலாவுதீன் கில்ஜி பேரழகியான ராணி பத்மினியைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

அவளை அடையும் நோக்கோடு மேவாரை அடைந்த சுல்தான் அலாவுதீன் கில்ஜி ராஜ்யத்திற்கு விருந்தினராக ராணி பத்மினியைச் சந்திக்க விருப்பப்பட்டார்.

சுல்தான் அவளைப் பார்த்ததும் அவள் அழகைக் கண்டு மதிமயங்கியதில் பத்மினியை அடைந்தே தீர வேண்டும் என்று சத்தியம் செய்தார். அரசனைக் கொன்றால் ராணியை அடைந்துவிடலாம் என்று நம்பிய சுல்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூர்கர் மீது தாக்குதல் நடத்தவும் முடிவு செய்தார்.

அப்பொழுது நடந்த போரில் ராஜபுத்திரர்கள் வீரத்துடன் போரிட்டனர், ஆனால் தோற்றுப் போயினர். அன்று ராணி பத்மினி நெருப்பிற்கு (Jauhar (also spelled jowhar) தன்னைத்தானே வார்த்துக்கொண்டாள்.

ராஜபுத்திரியான ராணி பத்மினியைப் பற்றியும் அவளின் அழகைப் பற்றியும் இன்றும் சரித்திரம் கூறுகின்றது.

அப்பேற்பட்டவளின் வம்சத்தில் பிறந்தவள் சிதாரா சௌஹான்.

இப்பூமியில் தரித்ததில் இருந்தே செல்வச் செழிப்போடு வேறு வளர்ந்திருந்ததில் மெருகூட்டப்பட்ட கவர்ச்சியான மேனியுடன், செதுக்கி வைத்த செந்நிறச்சிற்பம் போல் அமர்ந்திருந்தவளின் பார்வையோ ஒரு நிலையில் இல்லாது தவிப்பாய் அலைந்து கொண்டிருந்தது.

காரணம் அவளை மணமுடிக்க அவர்கள் பேசிக் கொண்டிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் இளம் தொழிலதிபனாயிற்றே.

அதுவும் இல்லாது அவனது வலுவான ஆளுமையும், திமிரும், கடுமையான குணமும் தேசம் முழுவதுமே பிரபலம்.

அவளோ அவனுக்கு அப்படியே நேர்மாறான குணாதிசியத்தைக் கொண்டவள். அடக்கமான இயல்பு வாழ்க்கையை விரும்புபவள்.

இவனைத் திருமணம் செய்து கொண்டால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?

ஆனால் இந்தத் திருமணத்திற்குப் பின் இருப்பது நேசமோ காதலோ அல்லது இரு இளம் உள்ளங்களை இணைக்கும் அழகிய பந்தத்திற்கான அடையாளமுமோ இல்லையே.

அரசியல், ஆதாயம், லாபம், வருமானம், அனுகூலம்.. இவையே இந்த மணப்பந்தத்திற்குக் காரணம்! இப்படி இருக்க எங்கிருந்து மகிழ்ச்சி வருவது?

வருங்கால மாமனாரான சஞ்சீவ் தேஸாயின் பார்வையைச் சந்தித்தவள் மெல்லிய புன்முறுவலை சிந்திவிட்டு தலைக்கவிழ,

"முகேஷ், நானே உங்கக்கிட்ட இதைப்பற்றிப் பேசுணும் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லலாம்னு இருந்தேன். நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க. உங்க பொண்ணுக்கும் என் பையனுக்கும் கல்யாணம் முடிக்கலாம்னு நாம் பேசிய போது இருந்த சூழ்நிலை வேற முகேஷ். ஆனால் இப்ப இருக்கிற சூழ்நிலை வேற. அதனால் கல்யாணத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போடலாம்னு எனக்குத் தோனுது.." என்று கூறிய நேரம், கோட்டையின் நடுவறைக்குள் நுழைந்தான் வருண்.

அவன் உள்ளே வந்த வேகமும் அவனது ஆறடி மூன்ற அங்குல உயரத்திற்கு நிமிர்ந்து நின்ற தோரணையும் சிதாராவுக்கு இனம்புரியாத ஒரு திகைப்பையே கொடுக்க அவளையும் அறியாது மெல்ல எழுந்து நின்றாள்.

"வாங்க."

முகேஷ் சௌஹானையும் அவரது மனைவியையும் பொதுவாய் பார்த்து வரவேற்றவன் தன் வருங்கால மனைவியைப் பார்த்து தலையை மட்டும் அசைத்தவாறே அவர்களுக்கு எதிரில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு ஸ்டையிலாக அமர்ந்ததுமே, "அப்போ இருந்த சூழ்நிலைக்கும், இப்ப இருக்கிற சூழ்நிலைக்கும் என்ன டாட் [dad] வித்தியாசம்? ஏன் மேரேஜைத் தள்ளிப் போடணும்னு சொல்றீங்க?" என்றான், அவரது உள் நோக்கம் புரிந்தவனாக.

"ஐ மீன், உங்க திருமணம் பற்றிப் பேச நாங்க ஆரம்பிச்சப் போது நீ நம்ம கம்பெனிஸுக்குச் சி.இ.ஒ கிடையாது வருண். ஆனால் இப்ப அப்படி இல்லையே. நம்முடைய எல்லாப் பிஸினஸையும் நீ மட்டும் தான் தனியாளாப் பார்த்துட்டு இருக்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியதும் நிறைய இருக்கலாம். இப்போ திருமணம் நடந்தால் உன்னால் சிதாரா கூட நேரம் ஸ்பெண்ட் பண்ண முடியாமலும் போகலாம், அதான் தள்ளிப் போட சொன்னேன்."

அவர் பேசுவது எவ்வளவு அபத்தமாக இருக்கின்றது என்று அவருக்கும் புரியத்தான் செய்தது!

ஆயினும் இப்பொழுது இருக்கும் சூழலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விபரீத வேளையில் இந்தச் சின்னப்பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்கச் சஞ்சீவ் தேஸாயிக்கு மனம் வரவில்லை.

"டாட்.. பெர்ஸ்னல் லைஃப் வேற பிஸ்னஸ் லைஃப் வேற.. இரண்டுக்கும் சரியா நேரத்தைப் பிரிச்சு செலவழிக்க முடியாதளவுக்கு விவரம் தெரியாதவனா நான்? எதை எப்போ செய்யணும்னு எனக்குத் தெரியும் டாட். அதுவும் இல்லாமல் நீங்க எதை மனசுல வச்சிக்கிட்டு எங்க மேரேஜை கேன்சல் பண்ண..” என்றவன் ஒரு விநாடி நிறுத்தி, “ஐ மீன் தள்ளிப் போட நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியுது. பட் நீங்க அதைப்பற்றிக் கவலைப்படாமல் எங்க மேரேஜுக்கு வந்தால் மட்டும் போதும்." என்று முடித்தான்.

சிறிது புன்னகையுடன் கூறியவனின் கண்களில் தோன்றிய பளபளப்பு சிதாராவின் நெஞ்சுக்கூட்டில் அச்சத்தைக் கிளப்பவே செய்தது.

ஆனால் இந்தத் திருமணம் நடந்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் தந்தையின் சொற்களை மீறவும் வழியில்லை.

அவரது அரசியல் விளையாட்டுகளுக்கு வருண் தேஸாயின் உதவி தேவை. அதே போல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக இருக்கும் முகேஷ் சௌஹானின் அரசியல் பின்புலம் வருண் தேஸாய் தற்பொழுது ஏறக்குறைய இரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு வர்த்தகத்திற்குத் தேவை.

ஆக அக்காலத்தில் அண்டை நாட்டினருடன் திருமணத் தொடர்பு வைத்துக் கொள்ளும் அரசர்கள் கொண்டிருந்த அதே நோக்கமே இந்தத் திருமணத்திற்குமான அடிப்படைக் காரணம்.

"வருண் சொல்வதும் சரிதான் சஞ்சீவ். ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் எப்ப திருமணம் நடக்கும் இந்தியாவே எதிர்பார்த்துட்டு இருக்குது. இதில் இன்னும் தள்ளிப் போட்டால் பிறகு வேற ஏதாவது தப்பான பேச்சு எழவும் வாய்ப்பு இருக்கு. அதனால் கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தை வைச்சு முடிச்சிடுவோம். அதுக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தையும் நடத்திடுவோம்."

"யெஸ், நீங்க என்கேஜ்மெண்டுக்கான டேட்ஸைப் பார்த்துட்டு சொல்லுங்க. அதில் எது எனக்குக் கம்ஃபர்டபில்லோ அதை நான் சூஸ் பண்றேன்."

கூறிய வருண் இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்பது போல் எழுந்தவன் இரண்டாவது மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கிச் செல்ல, சட்டென்று எதையோ நினைத்தவராக, "வருண், ஒரு நிமிஷம்.." என்றார் அவனது தந்தை சஞ்சீவ் தேஸாய்.

'ம்ப்ச்..' மனதிற்குள் சலித்துக் கொண்டவனாக. "யெஸ் டாட்.." என்றவாறே நிதானமாய் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

"இது வரை நீயும் சிதாராவும் மனம் விட்டு பேசியிருக்கீங்களான்னு தெரியலை. நிச்சயதார்த்தத்துக்கு முன்னரே ஒருத்தருக்கொருத்தர் மனம் திறந்து பேசினீங்கன்னா நல்லா இருக்கும். நீ வேணா சிதாராவை உன் ரூமுக்குக் கூட்டிட்டு போ. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு வாங்க."

என்ன நினைச்சிட்டு இப்படி எல்லாம் செய்யறாரு என்று எண்ணியவனாய், வார்த்தைகளால் கூறாது வா என்று தலையை மட்டும் அசைத்தவன் அவள் வருகிறாளா என்று கூடப் பாராது விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏற, ஐயோ என்றாகிப் போனாது சிதாராவிற்கு.

"அங்கில், நானும் அவரும் ஏற்கனவே பேசியிருக்கோம் அங்கில்.. திரும்பவும் எதுக்கு அவரைத் தொந்தரவு பண்ணிட்டு.."

"இதுல என்னம்மா தொந்தரவு? திருமணம் முடிச்சு வாழ்நாள் முழுசும் அவனுடன் தானே இருக்கப் போற. இப்ப கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டு இருக்கிறதுல அவனுக்கு என்ன தொந்தரவு?"

விடமாட்டாரா என்று எண்ணியவளாக வேறு வழியின்றி அவன் செல்லும் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்க, அவனது அகன்ற முதுகு ஏறக்குறைய மாடியில் ஒரு வளைவில் மறைந்து கொண்டிருந்தது.

விடுவிடுவென்று ஓடியவள் அணிந்திருந்த புடவையின் முந்தானையை இறுக்கப் பற்றிக் கொண்டு மாடிப்படிகளில் ஏற, அதற்குள் மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்த வேலையாள் ஒருவர், "என் பின்னாடி வாங்கம்மா. நான் சாரோட ரூமைக் காட்டுறேன்.." என்றவாறே மீண்டும் மாடியை நோக்கி ஏறினார்.

"சொல்லி அனுப்பிச்சிருப்பான் போல.. ஏன் நான் வரும் வரை கொஞ்சம் நிற்கக் கூடாதா? இவனைக் கல்யாணம் பண்ணிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ?"

பணியாளருக்குக் கேட்காத வகையில் மெல்லிய குரலில் முனகியவள் அவர் காட்டிய அறையின் வாயிலிற்கு அருகில் செல்ல, அவள் கதவைத் தட்டாமலேயே, "டோர் ஓப்பன் ஆகித்தான் இருக்கு, கம்மின்.." என்றது வருணின் கம்பீரக் குரல்.

மெள்ளக் கதவைத் திறந்தவள் உள்ளே அடி எடுத்து வைக்க, அங்குத் தன் அலைபேசியில் எதனையோ தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தவன், "Look Sithara, I don't have much time to talk right now.. சீக்கிரம் வா.." என்று கூறியவனாய் தனது உள்ளறைக்குள் புகுந்துக் கொண்டவனைக் கண்டு திகைத்துப் போனாள்.

'என்ன இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பேசுறான். எதிர்த்துப் பேசறத் தைரியம் எனக்கு இல்லைன்னு நினைச்சானா?'

நினைக்கத்தான் முடிந்தது, அவனைக் கேட்பதற்கு ஏது துணிச்சல்? அதுவும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்ட மானால் அதனின் ஆக்ரோஷத்தை அடக்க இயலுமா?

வேக வேகமாக அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் தனது பிரத்யேகமான அறைக்குள் நுழைய, "பேசுறதுக்கு நேரம் இல்லைன்னு சொன்னீங்க.. இங்கேயே பேசலாமே.." என்றவளின் சாரீரம் அவன் திரும்பியதுமே மெள்ள உள்ளே போனது.

"உனக்காக நான் இங்க வரலை.. எனக்குக் கம்யூட்டரில் கொஞ்சம் செக் பண்ண வேண்டியிருக்கு. கமான்.."

வீட்டில் இருக்கும் நேரம் வேலை செய்வதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் அவனது விசாலமான அலுவலக அறைக்குள் நுழைந்தவன் தனது நாற்காலியில் அமர்ந்ததுமே கணினியை உயிர்ப்பித்து அதனில் மூழ்க, "சரி நான் வேனா கீழே போறேன். அங்கில் கேட்டால் நாம் பேசிட்டோம்னு சொல்றேன்.." என்றவளின் கோபம் படீரென்று வார்த்தைகளில் வெளிவந்தது.

அவளது எரிச்சலும் கோபமும் புரிந்தது.. இருந்தும் கணினியின் திரையில் இருந்து முகத்தை அகற்றினான் இல்லை அவன்.

"சிதாரா, ஒரு முக்கியமான விஷயத்தை எதிர்பார்த்துட்டு இருக்கேன்.. அதான் உன்கூடப் பேச நேரம் இல்லைன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் பொறுமையா இரு.."

கூறியவன் முடிப்பதற்குள் அவனது அலைபேசி அலறியது.

எடுத்துக் காதில் வைத்தவன் மறுமுனையில் என்ன கூறினரோ அதிரடியாய் நாற்காலியில் இருந்து எழுந்தவாறே, "ஷிட், ஹவ் இஸ் தெட் பாஸிபிள்.." என்று உரத்தக் குரலில் சத்தமிட்டதில், அவனது ஆங்காரத்தில் அரண்டவளாய் சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள் அவனது வருங்கால மனைவி.

"என்ன ஆர்யன் இவ்வளவு கேர்லஸா இருந்திருக்கீங்க? நான் லாஸ்ட் நைட்டே உங்களுக்குச் சென்னேனே? அன்ட் ஆல்ஸோ அவன் அவனுடைய மேரேஜையே தள்ளி வச்சிருக்கானா, அதற்குக் காரணம் ஒண்ணு உங்களைப் பிடிக்கிறதுக்கு.. இல்லை என் மேல கை வைக்கிறதக்குன்னு இன்னைக்குக் கூட எச்சரிக்கை செஞ்சிருந்தேனே?"

"யெஸ் வருண். அதனால் தான் பார்ட்னர்ஸைக் கூட வேக வேகமா ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைச்சேன், ஆனால் அவன் இங்க வருவதற்கு முன்னாடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வச்சிட்டு தான் வந்திருப்பான் போல் இருக்கு.."

"ஒகே ஆர்யன்.. என் மேலே கை வைக்கிறதா இருந்தா அவன் இன்னைக்கு உங்க இண்டஸ்ட்ரியில் என்னைப் பார்த்தப்பவே கை வச்சிருப்பான். இப்போதைக்கு அவன் டார்கெட் நீங்க மட்டும் தான். ஸோ, அவன் என்ன சொல்றானோ அதை அப்படியே நீங்க செய்யுங்க.. அவனை எதிர்த்து எதுவும் பேசாதீங்க. இதில் இருந்து உங்களை எப்படி வெளியில் கொண்டு வரதுன்னு நான் பார்த்துக்கிறேன்.."

"வருண். ஆவ்கோர் உன் பெயரி.." என்ற ஆர்யனை முடிக்கவிடாது, "ஆர்யன், இந்நேரம் உங்க ஃபோனை அவன் டாப் [Tapp] செய்திருப்பான். இதுக்கு மேல நாம் எதுவும் பேச வேண்டாம்." என்றவனாய் அலைபேசியை அணைத்தவாறே அதை மேஜையின் மேல் வீசி எறிந்தான்.

அவன் தூக்கி வீசியதில் மேஜையின் மீது படீரென்று விழுந்த அலைபேசியின் சத்தத்தில் பெண்ணவளின் தேகம் தூக்கிவாரிப்போட்டது.

"நான் போகட்டுமா?"

எழும்பாத குரலில் கேட்டவளை ஏறிட்டு நோக்கியவன் தனது கழுத்தை அழுந்தித் தடவியவனாகப் 'போ' என்பது போல் தலையசைத்துச் சைகை செய்ய, விட்டால் போதும் என்று அறையைவிட்டு வெளியேறியவளுக்குக் கீழே வந்ததும் தான் அடைத்திருந்த மூச்சு வெளியேறியது.

"என்னம்மா அதுக்குள்ள வந்துட்ட?"

"நா..நாங்க பேசிட்டு இருக்கும் போது அவருக்கு ஃபோன் கால் வந்துடுச்சு அங்கில். முக்கியமான கால் போல. பேசிட்டு இருந்தார். அதான் டி… டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு நான் வந்துட்டேன்."

அவளது தடுமாற்றமும் வெளிரிப்போன முகமும் பறைசாற்றியது தன் மகன் ஏதோ செய்யக்கூடாதை செய்திருக்கின்றான் என்று.

“என்ன ஃபோன் காலோ? கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட பேசக்கூட நேரமில்லாம..”

எரிச்சலுடன் சஞ்சீவ் தேஸாய் கூறிக் கொண்டிருந்த நேரம் அவரது அலைபேசியும் முகேஷ் சௌஹானின் அலைபேசியும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தார் போல் ஓசை எழுப்பின.

எடுத்துப் பேசியவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.

மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷ் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இதுவே அலைபேசி மூலம் அவர்களிடம் பகிரப்பட்ட தகவல்.

அதிர்ந்து போன சஞ்சீவ் தேஸாய் தனக்கருகில் இருந்த சிறிய மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க,

'சரக்குப் பரிமாற்றம் இல்லாமல் போலி நிறுவனங்களைத் துவங்கி அதில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலமாகவும், போலியான அறக்கட்டளைகளைத் துவங்கி அதன் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பணபரிமாற்றம் செய்து ஏறக்குறைய எண்பதாயிரம் கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷ் கைது' என்ற செய்தி வாசிக்கப்பட்டதில் முகேஷ் சௌஹானிற்கு வியர்க்கத் துவங்கியது.

வருணுக்கும் ஆர்யனுக்கும் இருக்கும் தொடர்பு அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலமாயிற்றே.

இதில் கடந்த இரு வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து ஏதோ சில மறைமுகச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், இருவரில் ஒருவர் சிக்கினாலும் மற்றவருக்குப் பெரும் அடிதான் என்றும் அவரின் செவிகளுக்கு வந்த இரகசியத் தகவல்.

ஆயினும் வருணின் செல்வாக்கின் மீதும் சாதுரியத்தின் மேலும் அளாதி நம்பிக்கைக் கொண்டிருந்ததினால் தன் மகளை அவனுக்கு மணமுடிக்க ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தார் முகேஷ் சௌஹான்.

ஆனால் ஆனானப்பட்ட ஆர்ய விக்னேஷே கைது செய்யப்பட்டிருக்கின்றான் என்றால்?

ஒரு வேளை வருணும் கைது செய்யப்பட்டால்?

யோசித்தவராய், "சஞ்சீவ், நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்துட்டு நாங்க ஃபோன் பண்றோம்.." என்றவர் அடுத்த வார்த்தைப் பேசுவதற்குள், "அடுத்து வரும் முகூர்த்தத்தில் எனக்கும் சிதாராவுக்கும் எங்கேஜ்மெண்ட் நடக்கணும் மிஸ்டர். முகேஷ்.." என்று கேட்டக் குரலில் விதிர்விதிர்த்துப் போனார்.

"வருண்.. ஆர்யன் அரெஸ்ட் ஆகியிருக்கார்.."

"ஸோ வாட்?"

"நீங்களும் ஆர்யனும்.."

"யெஸ், ஆர்யனும் நானும் சில பிஸ்னஸ்களில் பார்ட்னர்ஸ். ஆனால் அதற்காக அவர் செய்த ஊழல்களில் எல்லாம் எனக்கும் பங்கு இருக்கனும்மா, என்ன?"

"அப்போ நிச்சயர்தார்த்தம்.."

இழுத்தவரை கூர்ந்து நோக்கியவன் அழுத்தமான குரலில்,

"இப்போ நான் சொன்னது போல் கூடிய சீக்கிரம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கலைன்னா பிறகு நீங்க இந்தக் கல்யாணப் பேச்சை எடுக்கவே கூடாது.." என்று கூறியவாறே அறையைவிட்டு வெளியேற, அவர்களையே பார்த்திருந்த சஞ்சீவ் தேஸாய்க்குப் பரிதாபமாகிப் போனது.

"முகேஷ், நான் சொல்றது போல் நீங்க கொஞ்சம் யோசிச்சு எதையும் செய்யுங்க.."

"இல்லை சஞ்சீவ், எனக்கு வருண் மேல நம்பிக்கை இருக்கு. நாங்க டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு கண்டிப்பா உங்களைக் கூப்பிடுறோம்."

அவரது பதிலில் அறையின் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்த வருணின் உதடுகளில் இலேசான வெற்றி நகைப்புப் படர்ந்தது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..

References

 
Awww… Sithara Chauhan…
Aanal ivalukku Varunai pidikkala polaye… Coz, usual ah Herovai kanda heroine ku varum spark inge missing… Varun kooda edho materialistic madiri irukkan.. 🫤🫤🫤

Yahoo… Shiv paiyan thannoda velaiya aarambichittan polave.. Aryan is arrested… Varun avanai kapatha varuwana??? Illai matti viduwana???

Sithara yar jodi??? Kandipp Varum jodi illai… Shiv??? Aarya??? 🤔🤔🤔
 

Vidhushini

New member
Sithara pic superb @JB sis...

As you already mentioned in teaser I think, the war between the men, loss and regret to the women... poor girls....

Interesting epi @JB sis.
 

saru

Member
Ennaduuu 3vadu epo la arrest agirukaga
Sivuuu kalakura
Aryan ah maativida porana Varun
Ponnunga tan paaavam
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top