JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 5

JB

Administrator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 5

ஆர்ய விக்னேஷ் பெயிலில் விடுதலையாகி இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது.

இப்பொழுது தான் கண் விழித்திருக்கும் சூரியனின் ஒளி ஜன்னலை மெல்லமாய்க் கிழித்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து கொண்டிருக்கும் பிரம்ம முகூர்த்த நேரம், தன் படுக்கையறையில் கட்டிலில் இடது கையைத் தலைக்குக் கீழ் கொடுத்துப் படுத்திருந்த ஷிவ நந்தனின் மூளை பல்வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

'இந்நேரம் ஆர்யன் அவனுடைய திட்டத்தைத் தீட்டி முடிச்சிருப்பான். அதற்கு நிச்சயம் அந்த வருணும் பக்கபலமா இருப்பான். ஏன்னா பிடிப்பட்டது ஆர்யன் அப்படின்னாலும், இதுல வருணும் பாதிக்கப்பட்டிருக்கானே. இவனுங்க ரெண்டு பேருல ஒருத்தரைப் பகைச்சிக்கிட்டாலே பெரிய சிக்கல். இதுல ரெண்டு பேரும் சேர்ந்துல்ல இந்நேரம் இருப்பானுங்க. உனக்குத்தான் பயங்கிறதே இல்லை, ஆனால் துர்காவும் அவங்க அம்மாவும் அப்படியா? இந்தச் சூழ்நிலையில் அவசியம் கல்யாணத்தை வச்சிக்கணுமா ஷிவா?'

நேற்றைய இரவு அலைபேசியில் அழைத்திருந்த ஷிவ நந்தனின் உற்ற நண்பன் அஷோக் கூறியது நியாபகத்தில் படர்ந்தது.

ஆயினும் அவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஏனோ திருமணத்தைத் தள்ளிப் போடுவதில் மட்டும் ஷிவா நந்தனிற்கு விருப்பம் இல்லை.

“ஏற்கனவே ஒரு முறை தள்ளிப் போட்டாச்சு அஷோக். அதுக்கே அத்தை ரொம்ப வருத்தப்பட்டாங்க. இப்ப திரும்பவும் தள்ளிப் போட்டால் அவங்க தாங்க மாட்டாங்க..”

“புரியுது ஷிவா, ஆனால் ஆர்யன் அரெஸ்ட் ஆகி ஒரு வாரமாகியும் அவன் எந்த வித ஆக்ஷெனும் எடுக்கலை. வருணும் அளவுக்கதிகமாகவே அமைதியா இருக்கான். அப்படின்னா ஏதோ பெரிய திட்டம் போட்டுட்டு இருக்கானுங்க ரெண்டு பேரும் அப்படித்தானே அர்த்தம். அது மட்டும் தான் இப்போ என் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு, ஏதோ ஒரு எச்சரிக்கை மணியும் அடிச்சிட்டே இருக்கு. பி கேர்ஃபுல் ஷிவா..”

“எதுவானாலும் சந்திக்கத் தயாரா இருப்போமுன்னு சத்தியம் செஞ்சிட்டு தானே அஷோக் நாம் ஐபிஎஸ் படிக்கணும்னு முடிவே செய்தோம். இது மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரையா நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன். 83 க்ரிமினில்ஸை என்கவுன்டரில் சுட்டுக் கொன்னவன் நான். இப்படிப் பயந்திருந்தா இன்னும் அவனுங்க எல்லாம் இந்தப் பூமியில் உலா வந்துட்டு தான இருந்திருப்பானுங்க..”

“அவங்க வேற இவனுங்க வேற ஷிவா?”

“என்னைப் பொறுத்தவரை க்ரிமினில்ஸ் எல்லாருமே ஒண்ணு தான் அஷோக். ஒருத்தன் ஒரு கொலை செஞ்சால் என்ன பத்துக் கொலை செஞ்சால் என்ன? அவனுக்கு ஒருதரம் தூக்கு இவனுக்குப் பத்துத் தரம் தூக்கா போட முடியும்? கொலைகாரன் கொலைகாரன் தான்.”

“யெஸ், புரியுது.. ஆனாலும்?”

“ஆனால் என்ன அஷோக்? அப்படி அவனுங்களால் என்னை என்ன செய்துட முடியும்?”

“உனக்கு வேணா எதுவும் ஆகாம இருக்கலாம், ஆனால் துர்கா..”

“துர்கா என் வருங்கால மனைவி மட்டுமல்ல அஷோக். எப்போ அவ பிறந்தாளோ அப்பவே என் கையில் அவளை அத்தைக் கொடுத்தாங்க. அன்னையில் இருந்து அவளுக்கு நான் தான் பாதுகாப்பு அஷோக். அவளுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க என்னால் முடியும்.”

நண்பனிற்குத் திமிராய் உரைத்த தனது பதில் மீண்டும் அதன் போக்கில் மனதினில் ஒலித்துக் கொண்டே இருக்க, ஆயினும் ஷிவ நந்தனின் புலன்கள் மட்டும் ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனே விழித்துக் கொண்டிருந்தது.

காரணம் ஆர்ய விக்னேஷின் அதிரடி ஆட்டங்களைப் பல ஆண்டுகளாகக் கேள்விப்பட்டிருந்ததன் விளைவு, அவனை எதிர்த்தோர் ஒருவரும் இதுவரை உயிருடன் இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்ததினால்.

மெள்ள கட்டிலில் இருந்து எழுந்தவன் குளியல் அறைக்குள் புக, வழக்கமாய்க் குளிர்ந்த நீர் உடலில் பட்டதுமே எழும்பும் உற்சாகம் கூட இன்று தோன்றாதது போலவே இருந்தது ஷிவ நந்தனுக்கு.

'என்ன ஆச்சு எனக்கு? நிச்சயமா என் உயிரையோ, எனக்கு அவனுங்களால் வரப் போகும் ஆபத்தையோ மனசு நினைச்சுக் குழம்பவில்லை. அப்படிப்பட்ட பயம் பிறந்ததில் இருந்தே எனக்கு இருந்ததும் இல்லை. ஆனால் துர்கா? ஒரு வேளை என் கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு ஏதாவது நடந்ததுன்னா பிறகு துர்காவின் நிலை. அது தான் இப்ப என் மனசு இருக்கிற நிலைக்குக் காரணமா? அஷோக் சொன்னது போல் எதுவும் நடந்துடுங்கிற பயமும் எனக்குள்ள எனக்குத் தெரியாமலேயே உருவாகிட்டு இருக்கா?”

மீண்டும் கேள்விக் குடைய சில நிமிடங்களிலேயே குளித்து முடித்தவன் கையில் காபிக் கோப்பையுடன் தோட்டத்தைப் பார்த்தவாறே அமைக்கப்பட்டிருக்கும் பால்கனிக்கு வர, காவலர்கள் குடியிருப்பு முழுவதையுமே அலங்கரித்திருக்கும் பல வர்ண மலர்களின் தோட்டம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்ததில் ஷிவ நந்தனின் உள்ளமும் சற்று அமைதி அடைந்தது போன்று இருந்தது.

கையில் பிடித்திருந்த காபி கோப்பையில் இருந்து ஒவ்வொரு சொட்டாகக் காபியை ரசித்துக் குடித்தவன் ஆர்யனையும் வருணையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க, அறைக்குள் அடித்த அலைபேசி அவனது சிந்தனையைக் கலைத்தது.

அழைத்தது துர்கா.

"மாமா.."

"என்ன துர்கா இந்நேரத்துல கூப்பிடற?"

"நம்ம கல்யாணத்தை வர முகூர்த்தத்திலேயே வச்சிக்கலாம்னு நீங்க சொன்னதால இங்க எல்லா வேலையையும் திரும்பவும் ஆரம்பிச்சாச்சு மாமா. நம்ம குடும்பம் மொத்தமுமே பரபரப்பா இருக்கு."

"ம்ம்ம், அதுக்கு என்ன இப்ப?"

"ஆனால் இன்னமும் நீங்க சென்னைக்கு வரலை, அதான். எப்ப வர்றீங்கன்னு அம்மா கேட்க சொன்னாங்க."

"சரியா கல்யாணத்துக்கு அங்க இருப்பேன் போதுமா?"

"இப்படிச் சலிச்சிக்கிட்டா நான் என்ன மாமா செய்யறது?"

"பின்ன என்னடி? இங்க மும்பையில் அஞ்சு மணின்னா அங்கேயும் அதே தான? இந்த நேரத்துல ஃபோன் பண்ணி எப்ப வர்றீங்கன்னு கேட்டால் நான் என்ன பதில் சொல்றது?"

"நேத்து நைட்டே ஃபோன் செய்யலாம்னு தான் இருந்தேன், ஆனால் எங்க இங்க எல்லாரும் சீக்கிரம் தூங்கிறாங்க? கல்யாணம் பண்ணிக்கப் போற உங்களைவிட இங்க இருக்கிறவங்களுக்குதான் ரொம்பப் பரபரப்பா இருக்கு.. அவங்க எல்லாரும் தூங்கறதுக்குள்ள நான் தூங்கிப் போயிட்டேன். இப்ப தான் முழிச்சேன், அதான் மற்றவங்க முழிக்கிறதுக்குள்ள உங்கக்கிட்ட இதைப் பற்றிக் கேட்டுடணும்னு கூப்பிட்டேன்."

"சரி, உன் கழுத்துல தாலிக் கட்டுறதுக்கு நான் அங்க இருப்பேன் போதுமா?"

“மாமா?”

“இன்னும் என்னடி?”

“ஒண்ணுமில்லை..”

ஏதோ சொல்ல வாயெடுத்தவள் கூறாது விட்டுவிட அவளின் அச்சமும் கலக்கமும் புரிந்தவனாய்,

“துர்கா. உன் கழுத்துல ஏறுற தாலி என்னுடையதா தான் இருக்கும். அதுவும் நாம குறிச்ச நாளில, நான் நினைச்ச நேரத்தில. புரியுதா? மத்தவங்க என்ன சொன்னாலும் நீ தைரியமா இருக்கணும்.” என்றான்.

அவன் அத்தனை உறுதியாய் கூறினாலும் மறுமுனையில் பதில் இல்லை.

"என்ன துர்கா? என் மேல நம்பிக்கை இல்லையா? இந்த முறையும் கல்யாணத்தைத் தள்ளிப் போட சொல்லிடுவேன்னு பயப்படுறியா?"

"இல்ல மாமா, கொஞ்ச நாளா எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் அந்த மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷைப் பத்தித் தான் காட்டிட்டே இருக்கிறாங்க. அவரைப் பத்தி சொல்லும் போதெல்லாம் உங்க பேரும் அடிபடுது. அதான் அம்மா வேற கொஞ்சம் பயந்துப் போயிருக்கறதால எப்பவும் பரபரப்பாவே இருக்காங்க."

"துர்கா. அத்தையோட மனசு எனக்குப் புரியுது. ஏற்கனவே அவங்க நம்ம கல்யாணத்தை நினைச்சுக் கொஞ்சம் பயந்திருக்காங்க, இதுல இந்த மினிஸ்டர் கேஸ் வேற.. ஆனாலும் நீ அவங்களுக்கு ஆறுதல் சொல்லு. அந்த ஆர்யன் இல்லை, அவனைப் படைச்சவனே வந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது.."

“மாமா..”

“ம்ப்ச்.. சொல்லு..”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி நானும் அவரோட பேட்டியை ஒரு சேனலில் பார்த்தேன் மாமா. உங்களைப் பத்தி அவங்க அவர்கிட்ட கேள்வி கேட்டாங்க. ஆனால் அவர் எந்தப் பதிலும் சொல்லலை, அதுக்குப் பதில அமைதியா சிரிச்சிட்டு இதோட பேட்டி போதும்னு சட்டுன்னு எழுந்துப் போயிட்டார். அவர் சிரிப்ப பார்த்தாலே எனக்கு ரொம்பப் பயமா இருக்கு மாமா..”

“ஏன் அவன் என்னை எதுவும் செஞ்சிடுவானோன்னு நினைக்கிறியா? அப்புறம் உன் கல்யாணம் நின்னு போயிடுமுன்னு பயப்படுறியா?”

“என்ன மாமா?”

“துர்கா. அந்தக் கடவுளே வந்தாலும் நம்ம கல்யாணம் தடைப்படாது.. நான் சொன்னது மாதிரி உன் கழுத்துல என் கையால தான் தாலி ஏறும்.”

ததாஸ்து தேவதை - நமது வார்த்தைகள் பலித்துவிடும் என்று பெரியவர்கள் கூறுவது போல் 'ததாஸ்து' என்ற வார்த்தைக்கான அர்த்தம் 'அப்படியே ஆகட்டும்' என்பதே. நம் கண்ணிற்குத் தெரியாமல் நம்மிடையே தேவதைகள் உலவுகிறார்கள் என்றும், அவற்றில் ததாஸ்து தேவதைகள் நாம் விரும்பியது போலவே ஆகட்டும் என்று வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் என்றும் நம்பப்படுகின்றது.

ஆனால் அப்படிப்பட்ட ததாஸ்து தேவதை ஏனோ அன்று ஷிவ நந்தனை விட்டு வெகு தூரம் சென்றிருந்தது போல் பின்னாட்களில் காட்சிகளும் காரியங்களும் நிறைவேறின.

அவற்றை அவனும் அன்று அறியவில்லை. அவனது அத்தை மகளும் அறிந்தாள் இல்லை!!

ஷிவ நந்தனின் வாயில் இருந்து இவ்வார்த்தைகள் வெளி வந்து கொண்டிருக்கும் நேரம் அவனது தலையெழுத்து அவன் கனவிலும் எண்ணாத வகையில் தடம் புரள ஆரம்பித்திருந்தது.

*********************************

காலை மணி பத்து..

NDTV, Zee News, DD News, BBC India News, CNN News18, India Today ஆகிய சேனல்களில் அலறிக் கொண்டிருந்தது ஒரே விஷயம்.

அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பரபரப்புடன் ஒளிப்பரப்பப் பட்டுக்கொண்டிருந்த செய்தியின் சாராம்சம் இது தான்.

Breaking News

'உயர் மற்றும் சக்தி வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் இருவர் பெரும் குற்றங்களில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். D.G.P நீரவ் பிரகாஷ் மற்றும் S.S.P ஷிவ நந்தன் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் புகழ்பெற்ற காவல் அதிகாரிகள். ஆனால் உண்மையில் இவர்கள் யாதவ் மிர்சா மற்றும் கலானி மிர்சாவிற்குக் கீழ் நடக்கும் "மிர்சா கேங்" என்ற பிரபலமான மாஃபியா குழுவிற்கு மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.'

'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் படுகொலைப் பிரிவின் உறுப்பினராக இருக்கும் நீரவ் பிரகாஷும், தனது 10 வருட வாழ்க்கையில் இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்தைப் பிடிப்பதில் தீவரமாக ஈடுப்பட்டிருக்கும் ஷிவ நந்தனும், தற்பொழுது பிடிப்பட்டிருப்பது நம் தேசத்தையே அதிரச் செய்யும் வழக்குகளில் முதன்மை வகிக்கின்றது.'

'குற்றவாளிகளைக் கண்டுப்பிடித்து அழிப்பதே எங்களது தலையாயப் பணி என்று மார்த்தட்டிக் கொண்டிருந்தவர்கள் இவ்விருவரும். அதே நேரத்தில் மாஃபியா சகோதரர்கள் யாதவ் மிர்சா மற்றும் கலானி மிர்சா ஆகியோருடன் கைகோர்த்து தங்களது சொந்த போதைப்பொருள் கேங்கை [Gang] நடத்தி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டதில் மும்பை காவல் துறையே பேரதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றது.'

'இன்னும் சில நாட்களில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் சதி மற்றும் மோசடி உட்பட பத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்படுவார்கள் என்று நமக்கு வந்த தலைப்பு செய்தி அறிவிக்கின்றது.’

‘மேலும், பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஷிவ நந்தன் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இல்லாத 6 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்றிருக்கின்றார் என்ற தகவலும் நம்பகமான இடத்தில் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக அந்த 6 பேரும் குற்றவாளிகள் என்பதற்காகக் கொலை செய்யப்படவில்லை. மாறாக மாஃபியா சகோதரர்கள் யாதவ் மிர்சா, கலானி மிர்சா ஆகியோருக்கு எதிராகச் செயல்படத் துணிந்தார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் ஃபோலிஸ் இன்ஃபார்மர் [police informer] என்றும் தெரிய வந்திருக்கின்றது.'

'அப்படி என்றால் இது வரை 83 மனிதர்களை (குற்றவாளிகளை) என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்திருக்கும் ஷிவ நந்தன் உண்மையில் யார்? காவல்துறையில் சீனியர் சூப்பிரண்டென்ட் ஆஃப் போலிஸ் என்ற முக்கியப் பொறுப்பு வகிக்கும் இவர் செய்திருக்கும் குற்றங்கள் என்ன? என்கவுண்டர் என்ற பெயரில் ஷிவ நந்தனால் கொலை செய்யப்பட்டிருக்கும் அனைவருமே குற்றவாளிகள் தானா அல்லது மிர்சா கேங்க் போன்றவர்களுக்கு எதிரியாகிப் போன அப்பாவி மனிதர்களா?’

‘இத்தகைய சந்தேகங்கள் காவல்துறையினருக்கு மட்டும் அல்ல, இந்திய மக்கள் பிரதிநிகளுக்குள்ளும் எழுந்திருக்கின்றது. இப்பேற்பட்ட குற்றவாளிகளை வெளியில் நடமாடவிடுவது மிகவும் ஆபத்தானது. ஷிவ நந்தனின் மீது உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், கட்சிகளில் இருந்தும் கூக்குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.'

பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த செய்தியால் நாடு முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கிப் போனது.

‘இதனிடையில் S.S.P ஷிவ நந்தனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் அனைவரைப் பற்றியான அறிக்கைகளை உடனடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஹோம் செக்கரட்டரி நாராயண விஷ்ணு அறிவித்திருந்ததில் அன்று மதியமே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் ஷிவ நந்தனும், D.G.P நீரவ் பிரகாஷும்.’

பல்லாயிரம் கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்திய தேசம் முழுவதிலும் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஷிவ நந்தனையும் நீரவ் பிரகாஷையும் பற்றிய அவலமான செய்திகள் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம் தனது சிகப்பு நிற மாசராட்டியை மும்பை போக்குவரத்து நெரிசலிலும் வெகு இலாவகமாய் ஓட்டிக் கொண்டிருந்த வருணின் தலை இடம் வலமாக அசைந்தது.

"என்ன வருண்?"

"இதே நியூசை எத்தனை சேனலில் தான் ஒளிபரப்புவாங்க.. அவங்களுக்கே போர் அடிக்காதா?"

"வாட்! என்னை அரெஸ்ட் பண்ணியதில் இருந்து இவ்வளவு நாளா சென்ட்ரல் மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ் கைதுன்னு இந்த நாடு முழுக்க அலற விட்டுட்டு இருந்தானுங்க இந்த நியூஸ் சேனல்ஸ். அப்ப எல்லாம் உனக்குப் போரடிக்கலை. ஒரே ஒரு நாள் ஒரு பத்துச் சேனலில் அந்த ஷிவாவை பற்றிச் சொன்னதில் உனக்குப் போரடிக்குதா?"

ஆர்யனின் வார்த்தைகளில் அவனைத் திரும்பிப் பார்த்தவன் வேறு ஒரு சேனலுக்குத் தனது காரின் ஆடியோ சிஸ்டத்தை மாற்ற,

"A top and powerful police officers’ arrested for being involved in a crime. D.G.P Neerav Prakash and S.S.P Shiv Nandhan worked for the Police Department of Mumbai, Maharashtra, but in reality, they worked for the famous mafia group called ‘Mirza Gang‘. Neerav Prakash was a member of the Organized Crime Homicide Unit investigating the very people he was working for. Shiva Nandhan for most of his 10 year career would run the Mumbai Gangs Unit, while running his own drug gang at the same time, he was an ally of Mafia brothers Yadhav Mirza and Kalaani Mirza. He would be convicted of 10 counts including drug conspiracy and racketeering in 2024. Adding more to it, the famous encounter specialist Shiv Nandan has killed 6 people who do not have any connection with drug dealers but they were killed only because they were not allies of Mirza brothers."

இவ்வாறு ஆங்கிலத்தில் ஒளிபரப்பட்ட அதே செய்தியில் சற்று உரக்கச் சிரித்து வைத்தான் ஆர்ய விக்னேஷ்.

"நீ எந்தச் சேனலை மாற்றினாலும் இந்த நியூஸ் தான் இனி ஒரு மாசத்துக்கு வருண்.."

"அப்படித்தான்னு நினைக்கிறேன்.."

"ஏன் இப்படிச் சலிச்சிக்கிற வருண்? இதுக்குப் பதில் என்னைப் பாராட்டலாமில்ல?

உதட்டோரம் தோன்றிய இளஞ்சிரிப்புடன் ஆர்யன் கூற, அந்தச் சிரிப்பு இப்பொழுது வருணின் உதடுகளிலும் ஏனோ கடமையென்று உட்கார்ந்து கொண்டது.

ஆனால் இது உண்மையான சிரிப்பு அல்ல என்பது ஆர்யனுக்கும் தெரியும். சிரிக்கும் வருணுக்கும் தெரியும்.

காரணம் ஆர்யன் சிக்க வைத்திருக்கும் இளைஞன் சாமான்யன் அல்ல. அவன் எந்த விதத்திலும் தங்களுக்குச் சளைத்தவனும் அல்ல.

“நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை வருண். இது தான் முதல் தடவையா நீ சிரிச்சு நான் பார்க்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ இது உண்மையான சிரிப்பு இல்லையோன்னு கூடத் தோனுது.”

“ஆர்யன்.. There is an old Indian proverb.. ‘If the mother (a tigress) leaps/jumps eight feet forward, its cub would leap/jump sixteen feet ahead’. இதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“அதாவது இந்தப் பழமொழிக்கேற்றவன் தான் இந்த ஷிவ நந்தன்னு சொல்ல வர்ற, ரைட்?”

“யெஸ்!”

“ஆக, நாம ஓரடி பாய்ந்தால் அவன் ஒன்பது அடி பாய்வான்னு சொல்றியா வருண்?”

"யெஸ்.. இருந்தாலும் நான் உங்களைப் பாராட்டுறேன் ஆர்யன். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு பெரிய புகழோட மார்த்தட்டிக் கொண்டிருந்தவனை அந்தப் பேரைக் கொண்டே அழிக்கத் திட்டம் போட்ட உங்களை நான் பாராட்டாமல் இருந்தால் தான் தப்பு.."

"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்"

"நான் வசிஷ்டர்ன்னு சொல்றீங்களா இல்லை நீங்க பிரம்மரிஷின்னு சொல்றீங்களா?"

வருணது கேள்விக்குப் பதில் கூறாது மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான் ஆர்ய விக்னேஷ்.

ஏனெனில் அவர்கள் இருவருக்குமே நன்கு தெரியும். வருண் தேஸாய் வசிஷ்டரும் இல்லை, ஆர்ய விக்னேஷ் பிரம்மரிஷியும் இல்லை என்று.

ஆனால் அவர்கள் வாயாலேயே வந்த சொல் அது.

இவர்கள் ஓரடி பாய்ந்தால் ஓராயிரம் அடிகள் பாயும் அரிமா ஷிவ நந்தன். அவன் ஓராயிரம் அடிகள் பாய்ந்தால் இருபதாயிரம் அடிகள் பாயும் அரிமாக்கள் இவர்கள் இருவரும்!

ஆக இவர்கள் மூவரின் பாதங்களும் ஒன்றோடு ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

அப்படி என்றால் தங்களுக்குள் நடக்கும் யுத்தத்தில் வெற்றிப் பெறப் போவது யார் என்று மூவரில் எவருமே அறியாத போர் அது என்று மூன்று அரிமாக்களுமே புரிந்து வைத்திருந்தார்கள்!

மீண்டும் ஒரு குருக்ஷேத்திரப்போர். அதனில் இது தர்ம யுத்தம்!

******************************************


"அண்ணா, என்னண்னா இது? இப்போ மாப்பிள்ளையையும் அரெஸ்ட் பண்ணிருக்காங்களாமே?"

"ஆமாம் ஸ்ரீமதி. எல்லாம் அந்தச் சென்ட்ரல் மினிஸ்டரோட வேலை தான்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் என்ன பண்றது? அவனுடைய பவர் அப்படி இருக்கே?"

"மாப்பிள்ளையோட தைரியமும் பிடிவாதமும் நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். நீங்களாவது அந்த மினிஸ்டர் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லிருக்கக் கூடாதாண்ணா?"

"யாரு உன் மாப்பிள்ளைக்கிட்ட? அவன் என்னைக்கு இது மாதிரி விஷயத்தில நான் சொல்றதைக் கேட்டுருக்கான்? ஏற்கனவே என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுன்னு பேர் வேற. அதை வச்சே அந்த மினிஸ்டர் அவன் வேலையைக் காட்டிட்டான்.."

"இப்போ என்ன அண்ணா பண்றது?"

"ஷிவா துர்கா கல்யாணத்தைப் பற்றிச் சொல்றியா?"

அவரது கேள்விக்கு ஸ்ரீமதியின் மௌனமே பதில் கூறியது.

ஆழ இழுத்து பெருமூச்சுவிட்டவராய்,

"ஸ்ரீமதி மா, இதெல்லாம் எதிர்பார்க்காம ஷிவா அந்த ஆர்யனுடைய விஷயத்தில ஈடுபட்டிருக்க மாட்டான். ஆனால் அவன் இந்தளவுக்குப் போவான்னு எதிர்பார்த்திருக்க மாட்டான்னு தான் இப்போ எனக்குத் தோணுது. இல்லைன்னா கல்யாணத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு வேணா சொல்லிருப்பானே ஒழிய அடுத்த முகூர்த்தத்திலேயே நடத்துங்கன்னு சொல்லிருக்க மாட்டான். ஆனாலும் நம்ம ஷிவா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுவும் இல்லாமல் ஷிவாவுடன் சேர்த்து அரெஸ்ட் ஆகியிருக்கது D.G.P நீரவ் பிரகாஷ். அவரைப் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். எப்படியும் அவங்க ரெண்டு பேருமே சீக்கிரம் இந்தச் சிக்கலில் இருந்து வெளி வந்துடுவாங்க. அதனால் நீ எதையும் நினைச்சு மனசப் போட்டுக் குழப்பிக்காம இரு. நீ தான் துர்காவையும் திடமா இருக்கச் சொல்லி ஆறுதல் சொல்லணும், என்ன புரியுதா?" என்றவருக்கு உண்மையில் தனக்கு யார் ஆறுதல் கூறுவார் என்றிருந்தது.

ஏனெனில் ஷிவ நந்தனின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு அவ்வளவு சாதாரணமானதா?

ஏற்கனவே மிர்சா சகோதரர்களுக்கு அவன் மேல் தீராத பகை.

தென்னிந்தியா பக்கம் எஸ்.பி -யாக [Superintendent of police] இருந்த பொழுது அங்கு ஒரு மாநிலத்தில் சதிராடிக் கொண்டிருந்த போதை மருந்துக் கூட்டத்தை அடியோடு அழித்ததில் புகழ் பெற்றவன் ஷிவ நந்தன்.

அவனது ஆக்ரோஷ ஆட்டத்தில் அந்த மாஃபியாவைச் சார்ந்த ஒவ்வொருத்தராக அழியத் துவங்கியதும் சிலர் பிற மாநிலங்களுக்கு ஓடி மறைந்துக்கொள்ள, அக்கூட்டத்தில் மீதம் இருந்தவர்கள் திகிலில் உறைந்துப் போயிருந்ததில் தங்களைத் தற்காத்து கொள்வதற்காக மற்றுமொரு மாஃபியாவில் இணைந்தனர்.

அதன் விளைவு ஷிவ நந்தனை கொன்று புதைத்திட இரு மாஃபியா கூட்டங்களும் ஒன்று கூடி திட்டங்கள் தீட்ட, அதனை அறிந்துக் கொண்டவன் வெகு புத்திசாலித்தனமாய் வியூகங்கள் அமைத்து அனைவரையும் ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்தான்.

ஷிவ நந்தன் என்ற ஒரே மனிதனின் உத்தரவு படி ஏறக்குறைய ஐம்பதிற்கும் மேற்படப் போதை மருந்து உற்பத்தி மற்றும் கடத்தலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், காவலர்களால் அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.

அது அன்றைய நாளில் தமிழகத்தை மட்டும் அல்ல, இந்திய தேசத்தையே கிடுகிடுக்கச் செய்த செய்தி.

ஆயினும் இம்மாதிரியான மாஃபியா கும்பல்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டுப் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகி அநியாயத்திற்குப் பலியான பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகளின் குடும்பங்கள், இதற்கு ஒரு நியாயம் கிடைக்காதா என்று அழுதுக் கரைந்து கொண்டிருந்த வேளையில் ஷிவ நந்தனின் அகோர ஆட்டம் அவர்களின் உள்ளங்களில் ஒரு அமைதியை வரவழைத்தது.

பலியான இளைஞர்களில் பெரும் பிரபலங்களின் பிள்ளைகள், அரசியல்வாதிகள் தொழிலதிபர்களின் வாரிசுகளும் அடக்கம் என்பதால் அரசாங்கமும் மறைவில், தனிப்பட்ட முறையில் ஷிவ நந்தனை பாராட்டிவிட்டு அத்துடன் அந்த வழக்குகளைக் கைவிட்டது.

அப்படியான ஷிவ நந்தனின் கரங்களில் ஒரு முறை ஆறு பேர் என்கவுண்டர் என்ற முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் யார்? அவர்களுக்கும் மிர்சா சகோதரர்களுக்கும் என்ன தொடர்பு?

இந்திய தேசத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் வசிக்கும் மனிதர்கள் உட்படப் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த என்கவுண்டர் அது.

அப்படி என்றால் அந்த என்கவுண்டரில் சம்பந்தப்பட்டிருக்கும் ஷிவ நந்தன் யார்? அவனால் பலிக்கொடுக்கப்பட்ட இளைஞர்கள் அறுவரும் வட நாட்டைச் சார்ந்த மாஃபியா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

அந்த மாஃபியா கூட்டத்தின் தலைவர்கள்? மிர்சா சகோதரர்கள்!!

அவர்கள் யார்?

அவர்களுக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஷிவ நந்தனிற்கும் என்ன சம்பந்தம்?

கோடிக்கணக்கான மக்களின் மூளையைக் குடைந்தெடுத்த கேள்விகள் இவை.

யாதவ் மிர்சா.. சிறு வயது முதலே மும்பை மாநகரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த, 'டி-கம்பெனி' என்ற குற்றவாளி அமைப்பின் தலைவனான, இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவனான தாவூத் இப்ராஹிமைப் போன்று தான் வர வேண்டும் என்ற கனவுக் கொண்டவன்.

2003-இல் அமெரிக்க அரசு தாவூத் இப்ராஹிமை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து அவனது பணம், சொத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்குக் கோரிக்கை செய்த நேரம், அடுத்தத் தாவூத்தாகத் தான் வர வேண்டும் என்று தன் முதல் படியைத் துவங்கினான் யாதவ் மிர்சா.

இந்தியர்களின் மத்தியில் சில மனிதர்களின் பெயரைக் கேட்டாலே அவர்களின் இதயத்தை அச்சம் ஆட்கொள்ளும்.

'From a Mumbai slum, he built his ‘D Company’ into the country’s biggest and most feared mafia. Today he still remains at large..'

இவ்வாறு பெயர் எடுத்திருக்கும் தாவூத் இப்ராகிமையே தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்கியது யாதவ் மிர்சாவின் அரக்க ஆட்டம்.

ஆனால் அவனது ஆட்டம் தாவூத் இப்ராகிமை ஒத்தது அல்ல! அதனையும் விட வித்தியாசமானது! கொடூரமானது!

பிலால் மற்றும் மஸ்தான் ஆகிய இரு டான்களுக்கு இடையேயான போரில் சாமர்த்தியமாய் உட்புகுந்து இருவரையும் கொன்றுப் போட்ட யாதவ் மிர்சாவின் பெயர் மும்பையின் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு மூலையிலும் பிரபலமானது.

மிகவும் புத்திசாலியான யாதவ் மிர்சா படிப்பிலும் குறைவானவன் இல்லை.

ஆங்கிலம் மற்றும் அரசியல் அறிவியலில் எம்.எ முடித்தவன் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் மகளைக் கடத்தி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தத் தேசத்தின் உயர் பாதுகாப்பான நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

ஆனால் சில நாட்களிலேயே வெகு சாமர்த்தியமாகத் திட்டங்கள் தீட்டி, மேலும் பிற கைதிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு நாக்பூர் மத்திய சிறையில் இருந்து தப்பினான். அந்நாட்களில் அச்செய்தியே தேசத்தை அலறச் செய்தது.

அப்படிப்பட்ட யாதவ் மிர்சாவின் வலது கை, அவனது தம்பி கலானி.. கலானி மிர்சா.

யாதவ் மிர்சா போன்று புத்திசாலியோ சாணக்கியனோ இல்லை கலானி.. ஆயினும் இரத்தம் என்பது அவனுக்குப் பல் துலக்கும் போது தேவைப்படும் தண்ணீரைப் போன்றது!

அதாவது தண்ணீருக்கும் மனிதனின் இரத்தத்துக்கும் வித்தியாசமே தெரியாதவன் அவன்!

யாதவ் மிர்சாவின் தளபதி அவன். குரூரத்திற்கும் கொடூரத்திற்கும் பெயர் பெற்றவன்!

ஆகக் கொடூரமான ‘டான்’கள் என்று பெயரெடுத்திருக்கும் இப்பேற்பட்ட மிர்சா சகோதரர்களுக்கு, மும்பைக்கு மாற்றலாகி வந்திருக்கும் ஷிவ நந்தனை எப்பொழுது சமயம் கிடைக்குமோ அப்பொழுதுக் கொன்றுப் போடலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்பு வரப் பிரசாதம் அல்லவா?

ஷிவ நந்தனின் கைதிற்குப் பிறகு மிர்சா கூட்டத்தில் இருந்து சாட்சியங்களாக வந்து சேர்ந்தனர் இரு கைதிகள்.

"ஆமா, ஷிவ நந்தன் ஆறு அப்பாவி மனிதர்களை எங்களின் கண்முன்னே சுட்டுக் கொன்றார், அதுவும் என்கவுண்டரில். அது ஷிவ நந்தனுக்கு நல்லாவே தெரியும். அவர்களுடன் எங்களையும் சேர்த்து தான் போலிஸ் வேனில் [van] கூட்டிட்டுப் போனாங்க. மிர்சா க்ரூப்பைச் சேர்ந்தவங்கன்னு அவங்களைச் சொன்னாங்க, ஆனால் கிட்டத்தட்ட பதினெட்டு வயசில் இருந்தே மிர்சா க்ரூப்பில் இருக்கும் எங்களுக்குத் தெரியாதா, அவங்க எங்க கேங்கைச் சேர்ந்தவங்களா இல்லையான்னு.”

“மிர்சா க்ரூப் மும்பையில் இருக்காங்க. நீங்க தென்னிந்தியாவில் இருக்கீங்க. மிர்சாவிற்கும் அந்த என்கவுண்டருக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரியே தெரியலையே..”

வழக்கறிஞரின் கேள்விக்கு, “அந்தச் சந்தேகம் எங்களுக்கும் வந்துச்சு சார். ஆனால் மிர்சா க்ரூப்பு தயார் பண்ணும் போதை மருந்துக்களைத் தென்னிந்தியாவில் விநியோகம் செய்யும் க்ரூப்பைச் சேர்ந்தவங்க இந்த ஆறு பேரும் அப்படின்னு எஸ்.பி ஷிவ நந்தன் சொல்லி நாங்க கேட்டோம். உண்மையில் அந்த வேலையைச் செய்துட்டு வந்தது நாங்க தான். எங்களுக்குத் தெரியாமலேயே எப்படிப் புதுசா ஆறு பேர் அந்த வேலையைச் செய்ய முடியும்? நிச்சயமா அவங்களுக்கும் மிர்சா க்ரூப்பிற்கும் சம்பந்தமே இல்லை. ” என்று சத்தியம் அடித்துக் கூறினான் அந்த இருவரில் ஒருவன்.

மற்றவன் அதனை ஆமோதிப்பதாய் கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“உண்மையில் அவங்க குற்றவாளிகள் மாதிரியே எங்களுக்குத் தெரியலை. ஏதோ சொந்தக் காரணத்துக்காகத் தான் அவங்களை ஷிவ நந்தன் கைது செய்த மாதிரி எங்களுக்குத் தெரிஞ்சது. அதே போல நாங்க நினைச்சது மாதிரியே எங்களை எல்லாம் வேனில் இருந்து இறக்கியதுமே 'இந்த இரண்டு கைதிங்களோட உங்களையும் சேர்த்து சுட்டால் நீங்களும் மிர்சா கேங்கைச் சேர்ந்தவங்கன்னு எல்லாரும் நினைச்சுப்பாங்க, ஆனால் எனக்கும் உங்களுக்கும் இடையில் என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியாது, உங்களை நான் ஏன் சுட்டேன்னும் கூட யாருக்கும் தெரியாதுன்னு' சொல்லிட்டு எங்களைச் சுட குறிப்பார்த்தார்.

அப்போ ஏன் சார் இப்படிப் பண்றீங்க? இதுக்கு என்ன காரணமுன்னு அவர் கூட இருந்த ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார். அதுக்கு ஷிவ நந்தனோட பதில், ‘இது மாதிரியான கும்பலை நான் ஒரு முறை அடியோட அழிச்சு இருக்கேன். ஆனால் நான் செய்த ஒரே தவறினால் அவர்களை அழிக்க எனக்குப் பல நாள் எடுத்துச்சுன்னு' சொன்னார்.

அது என்னன்னு அந்த அதிகாரி கேட்டப்போ 'நான் அந்த மாநிலத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்ததுமே நான் யாருன்னு அவர்களுக்குக் காட்டிருக்கணும். அவர்களில் முக்கியமான ஆட்கள் சிலரை இது மாதிரி என்கவுண்டரில் நான் போட்டுத் தள்ளிருக்கணும். அந்த என்கவுண்டர் அவனுங்களுக்கு எச்சரிக்கையாவும் இருந்திருக்கும். அங்க தான் நான் மிஸ் பண்ணிட்டேன். அதோட விளைவு தான் அவர்களை மொத்தமா அழிக்க எனக்கு அவ்வளவு காலம் பிடிச்சது. அதே தவறை நான் இங்கேயும் செய்யக் கூடாது. அதான் இவனுங்களைப் பிடிச்சு என்கவுண்டரில் போட்டுத் தள்ளினா அது மும்பையில் இருக்கும் மிர்சா கேங்குக்கு ஒரு வார்னிங் மெசேஜா போய்ச் சேரும். நான் அவனுங்களை நெருங்குறதுக்கு முன்னாடி ஒண்ணு அவனுங்களே கலைஞ்சிடுவானுங்க, இல்லைன்னா என்கிட்ட சரன்டர் ஆகிடுவாங்கன்னு' சொல்லிட்டே அவங்களைச் சுட்டார்.

அவங்க எல்லாரும் எங்களைக் கொன்னுடாதீங்கன்னு கத்த ஆரம்பிச்சாங்க, அப்பத்தான் அவங்களில் ஒருத்தர் போலிஸ் இன்ஃபார்மர்ன்னு எங்களுக்குத் தெரிஞ்சது. திடீர்னு அவர் ஷிவ நந்தனிடம் இருந்து தப்பிக்கிறதுக்கு ஓட ஆரம்பிச்சார். அவரைத் துரத்திட்டு எல்லாரும் ஓடுற சமயம் பார்த்து நாங்க ரெண்டு பேர் மட்டும் எப்படியோ அங்க இருந்து தப்பிச்சிட்டோம்."

அவர்கள் கூறியவற்றைக் காவல்துறை மட்டும் அல்ல நீதி மன்றமும் நம்பவில்லை தான்.

காரணம் ஷிவ நந்தனின் என்கவுண்டர் திட்டத்தில் இருந்து தப்பித்தவர்கள் ஒருவரும் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

ஆனால் மிர்சா சகோதரர்களால் உருவாக்கப்பட்டிருந்த அந்தச் சாட்சியங்கள் வெகு துல்லியமாய்ப் பொய்களைக் கூறியதும் மட்டுமல்லாது, அன்று ஷிவ நந்தனுடன் இருந்த இரு கடை நிலை காவலர்களும், தலைமைக் காவலரும், உதவி ஆய்வாளர் ஒருவரும் கூட அவர்களுடன் ஒத்தப் போனதில், ஷிவ நந்தனின் மீதும் நீரவ் பிரகாஷின் மீதும் சுமத்தப்பட்ட குற்றங்களின் அடித்தளம் மிகவும் வலுவடைந்தது.

"ஆக, ஷிவா இப்போதைக்கு வெளி வர முடியாது வருண். ஒரு வேளை அவன் ஏதாவது தில்லு முல்லு செஞ்சு வெளி வரத்துக்குள்ள நாம் இழந்ததை மீண்டும் அடைஞ்சிடணும். ஐ மீன், நான் மீண்டும் நம்ம ஈரோப் அண்ட் சைனீஸ் பார்ட்னர்ஸை சந்திச்சு விட்ட இடத்தில் இருந்து 'ஆவ்கோர்' கம்பெனியை நடத்தணும்."

"ஆர்யன், எனக்கு என்னவோ அது சாத்தியமில்லைன்னு தோணுது?"

"ஏன்? அவங்க திரும்பவும் நம்ம கூடச் சேர மாட்டாங்கன்னு நினைக்கிறியா?"

"இல்லை, அதுக்குள்ள அந்த எமகாதகன் ஷிவா வெளியில் வந்துடுவான்னு நினைக்கிறேன்."

"ம்ப்ச் வருண். அவன் எமகாதகன்னா நாம அவனுக்கே எமகாதகர்கள்.."

"அவன் எமனைக் கொல்லக் கூடியவனா இல்லை நாம எமகாதகனையே அழிக்கக் கூடியவர்களான்னு பொறுத்து இருந்து தான் பார்க்கணும் ஆர்யன்."

"வருண், எனக்குக் கொஞ்சம் அதிசயமாத் தான் இருக்கு.."

"வாட்?”

"யாருக்குமே பயப்படாத வருண் தேஸாய், சாதாரண ஒரு போலிஸ் ஆஃபிஸரைப் பார்த்து பயப்படற மாதிரி இருக்கு.."

"இது பயம் இல்லை ஆர்யன். The cautious seldom err.."

"அதனால் வெயிட் பண்ணப் போறியா?"

“யெஸ்.. எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள் தவறு செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த ஷிவ நந்தன் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் நாம கவனமா பரிசீலிக்கணும் ஆர்யன்? Know yourself, know your enemy. A hundred battles a hundred victories. கேள்விப்பட்டதில்லையா நீங்க"

வருண் சொல்ல வருவதன் அர்த்தம் புரிந்ததுமே தனது பாக்கெட்டில் இருந்த சிகாரை [Cigar] எடுத்து பற்ற வைத்த ஆர்யன் அதற்கு மேல் எதுவும் பேசாது காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தான்.

மௌனமே அவ்வாகனம் முழுவதையும் சூழ்ந்திருந்தாலும், அந்த இரு இளைஞர்களின் உள்ளங்களும் அடுத்து நிகழப் போவதை ஒரு வித எச்சரிக்கை உணர்வுகளுடன் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்ததில், சப்தமில்லாத ஆர்ப்பாட்டம் அவர்களின் மனதிற்குள்ளும் நிலவி கொண்டிருந்தது என்னவோ உண்மை.

அதே நேரம் வருண் எதிர்பார்த்தது போல் தன் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து வெளி வந்தான் ஷிவ நந்தன்.

ஆனால் ஷிவ நந்தனே எதிர்பாராத வகையில்!!

ஆர்யனையும் அவனுக்குப் பின்னால் அரண் போல் நிற்கும் வருணையும் கருவறுப்பதே தனது குறிக்கோள் என்ற ஆங்காரத்துடன்.

வாழ்நாளில் அந்நாள்வரை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திராத அந்த இளம் காவலதிகாரி முதன்முறையாக இதயத்தை அதிரச் செய்த அந்தப் பேரதிர்ச்சியான நிகழ்ச்சியைக் கேட்டதும் மானசீகமாகச் சத்தியப்பிரமாணம் எடுத்தான்.

வருண் தேஸாய், ஆர்ய விக்னேஷ் இவர்களே என் வாழ்க்கையில் பரம எதிரிகள் [arch enemies] என்று.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:

Vidhushini

New member
அப்படியே துர்கா கல்யாணம் ஷிவாவுடன் நடக்காமல் வருணுடன் நடந்தால், சித்தாராவின் நிலைமை?

ஷிவாவின் இந்த ஆக்ரோஷமான மாற்றம், 'குருஷேத்திர'ப் போரில் யாருக்கெல்லாம் இழப்புகளை ஏற்படுத்துமோ?

Sema interesting @JB sis🔥
 

saru

Member
Enna nu solla nice update
Durga va enna senjanga
Sivuu ku jodi ila pola
Kadaisila siv encounter la ivanungala poduvandrathu conform
Analum siv nambikaya gazhi panniteengala jb cello
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top