JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 7

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 7


MKM Mahal


Welcome

To the Wedding Of

Shiva Nandhan & Durga Rubini


அழகான உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுற்றுச் சூழலுக்கும், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடக் கலையின் நேர்த்திக்கும், சுமார் 350 பேர் அமரும் அளவிற்குக் கட்டப்பட்டிருக்கும் அரங்கத்திற்கும் பெயர் போன மண்டபம் அது.

சென்னையில் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த வேண்டும் என்று தேவேந்திரன் ஆசைப்பட்டிருக்க, இருக்கும் சூழ்நிலையில் ஆடம்பரம் வேண்டாம் என்று தடுத்த ஷிவ நந்தன், தங்களின் குலதெய்வக் கோவிலுக்கும் அவர்களின் பூர்வீக கிராமமான தாமரைக்குளத்திற்கும் இடையில் இருக்கும் ஒரு ஊரில் கட்டப்பட்டிருந்த இந்த மண்டபத்தையே தேர்ந்தெடுத்திருந்தான்.

அளவில் சிறியதாய் இருந்தாலும் பிரகாசமான மற்றும் ராஜரீகமான அமைப்புடன் அழகியல் தோற்றமும் இணைந்து கம்பீரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது, நகரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு அடுக்குகள் கொண்ட 'MKM Mahal' என்ற நாமம் பொறிக்கப்பட்ட அந்தத் திருமண மண்டபம்.

மறுநாள் நடக்கப் போகும் மண விழாவிற்கென்று அரங்கத்தின் உள்ளும் புறமும் தொங்கவிடப்பட்டிருந்த வண்ண விளக்குகளால் ஜெகஜ்ஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருக்க, அந்த ஆடம்பரமான மண்டபத்தின் வாயிலில் வர்ண மலர்களைக் கொண்டு அழகாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர், மணமக்களின் பெயர்களை.

Shiva Nandhan Weds Durga Rubini

சுப முகூர்த்தம் காலை 7:21 மணிக்கு துவங்குகிறபடியால் அந்நேரமே முகூர்த்த நேரமாகக் குறிக்கப்பட்டிருக்க, மண்டப அரங்கம் முழுவதையும் ஏறக்குறைய ஆரஞ்சும் வயலெட்டும் கலந்த நிறங்களுடைய மலர்களைக் கொண்டு அலங்கரித்துக் கொண்டிருந்தனர், திருமண ஒருங்கினைப்பாளர்கள் அமர்த்தியிருந்த ஆட்கள்.

ஆரஞ்சு நிறத்துடன் சுடர் வடிவ கோழிக்கொண்டைப் பூக்கள் [flame-shaped blooms with intense orange color Cockscomb], வயலட் நிற ஆர்கிட் மலர்கள் [Violet orchid], ஆரஞ்சு வர்ண பிகோனியா பூக்கள் [orange begonia], வயலட் வர்ண செங்கொடிவேலி மலர்கள் [Plumbago rosea], வயலெட்டும் ஆரஞ்சு நிறமும் கலந்த சரக்கொன்றை [Cassia fistula] மலர்கள், பதுமராகம் பூக்கள் [hyacinth], வயலட் வர்ண கருவிளை சங்குப்பூக்கள் [Clitoria], ஆரஞ்சு நிற லில்லி மலர்கள் [orange downward-facing lily] ஆகியவற்றுடன் பல வர்ணத்தில் பூக்கும் கிரிசாந்தமம் பூக்களில் ஆரஞ்சு மற்றும் வயலெட் நிறப் பூக்களை மட்டும் தேர்ந்தெடுத்து [Chrysanthemum] அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த திருமண அரங்கம் கண்களைக் கவர்ந்து இழுப்பதாக இருந்தது.

"என்னங்க, ஒரே ஒரு தடவை நம்ம ஷிவாவை மண்டபம் வரைக்கும் வந்து பார்த்துட்டுப் போகச் சொல்லக் கூடாதா? அவனுக்குப் பிடிச்ச ஆரஞ்சு கலர்லேயும், துர்காவிற்குப் பிடிச்ச வயலெட் கலர்லேயும் தான் எல்லா வகைப் பூவையும் வாங்கி வரணும்னு பிடிவாதமா சொன்னவன், ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போகக் கூடாது?"

"இல்லைம்மா. என்ன தான் அவன் இந்தக் கல்யாணத்துல ஈடுபாடு இருக்கிற மாதிரி நடந்துக்கிட்டான்னாலும், கொஞ்ச நாளாவே அவன் முகமே சரியில்லை. ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரியே இருக்கான். அதான் நிறையப் பேரை அழைக்க வேண்டாம், முக்கியமானவங்க மட்டும் வந்தால் போதும்னு வேற சொன்னான். அதனால் முகூர்த்த நேரத்துக்கு அவன் இங்க வந்தால் போதும், அவனை மேல மேல டென்ஷன் பண்ணாமல் இரு.."

முடித்துக் கொண்டவராய் அலங்காரங்களை மேற்பார்வையிடவென மணமேடையை நோக்கி தேவேந்திரன் நடக்க, "எல்லாம் அந்த வருண்.." என்ற சாவித்திரி முடிக்கவில்லை.

சட்டென நின்றுத் திரும்பிப் பார்த்து முறைத்த கணவனைக் கண்டு வாயை மூடிக்கொண்டவர் தன் வேலையைப் பார்க்கச் செல்ல, ஆனால் அவரது மெல்லிய முணுமுணுப்பு தேவேந்திரனின் செவிகளில் எட்டத்தான் செய்தது.

'கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்படிச் செய்யாத, கல்யாண நேரத்துல ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுதுன்னு சொன்னால் கேட்குறானா? என்னைக்கு இந்தப் போலீஸ் வேலைக்குச் சேர்ந்தானோ அன்னையில் இருந்தே பிரச்சனை தான். இதில் அவனை மாதிரி பெரிய ஆளுங்களோட போராடாதன்னா கேட்குறதே இல்லை. அவன் பெரிய ஆளுன்னா நான் அவனோட பெரிய ஆளுன்னு என் வாயை அடக்க வேண்டியது. எல்லாம் இந்த இள வயசு பண்ற வேலை!’

மனைவியின் ஆதங்கம் தேவேந்திரனுக்கும் புரியத்தான் செய்தது.

இதில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்திருந்த சம்பவங்கள் அவருக்கும் கலக்கத்தையே கொணர்ந்தது.

ஆனால் என்று அவர் மகன் கட்டுப்பட்டிருக்கின்றான், இன்று சொல்பேச்சுக் கேட்டு நடப்பதற்கு.

'என்னவோ, கல்யாணம் நல்லபடியா நடந்தால் சரி!!!'

அவர் மனத்தில் ஓடிய எண்ணம் போலவே, விடிந்தால் திருமணம் எனும் வேளையில், தேனி மாவட்டத்தின் தாமரைக்குளத்தில் தங்களது பூர்வீக இல்லத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் படுக்கையறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த ஷிவ நந்தனின் புத்தியும் யோசனையில் ஆழ்ந்திருந்தன.

'ஏன் இந்த அமைதி? இவ்வளவு நடந்தும் ஒன்றும் செய்யாமல் மௌனமாய் இருப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன? ஒரு வேளை சுனாமி வரும் முன் கடல் தண்ணீர் உள்வாங்குமே, அதைப் போலா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி அனைத்தையும் வாரிச்சுருட்டிக் கொண்டு செல்லும் சூராவளி போன்று தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருப்பதற்கான அடையாளமா?'

பற்பல கேள்விகள் மூளைக்குள் குடைந்தும் விடை மட்டும் தான் பிடிபடவில்லை.

இப்பேற்பட்ட உயர் பதவியில் வகிக்கும் காவல் அதிகாரியான என்னால் கூடக் கண்டு பிடிக்க முடியாதளவிற்குத் திரைக்குப் பின்னால் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வித்தகன், சதுரங்க ஆட்டத்தில் எந்நிமிடம் தனது அடுத்தக் காயை நகர்த்தப் போகின்றான் என்பதை அறிந்து கொள்ள முடியாது வாழ்க்கையில் முதன் முறைக் குழம்பிப் போயிருந்தான் ஷிவ நந்தன்.

"மாமா.."

அறைக்கதவு தட்டப்படும் ஓசையில் தன்ணுணர்விற்கு வந்தவன் சற்றுத் திகைப்புடன் கதவைத் திறக்க, "மாமா, உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா?" என்றாள் துர்கா.

"ஏய். விடிஞ்சா கல்யாணம். இப்போ போய் என் ரூமுக்கு வந்திருக்க. யாராவது பார்த்தா என்னடி பண்றது? வாடி உள்ள."

கோபத்துடன் கூறியவனாய் அவளது கரத்தைப் பற்றி அறைக்குள் இழுத்த விநாடியே கதவை சாத்தினான்.

அவன் பிடித்திருந்த மணிக்கட்டு கன்றிப் போகும் அளவிற்குச் சிவந்து போனதிலேயே தெரிந்தது, பொறுமையாகப் பேசும் நிலையில் தன் மாமன் மகன் நிச்சயமாய் இல்லை என்று.

கையை அவனிடம் இருந்து உதற முற்பட்டவாறே, "உ... உங்கக்கிட்ட கொ.. கொஞ்சம் பேசணும்.." என்றாள் தடுமாறும் குரலில்.

"ம்ப்ச், திக்க ஆரம்பிச்சிட்டியா?'

மெள்ள அவனிடம் இருந்து கையை உறுவிக் கொண்டவள் வலிப் போகத் தேய்த்தவாறே, "என்னைத் திட்டாமல் பேசுங்க, நான் திக்காம பேசுறேன்னு நிறையத் தடவை சொல்லிட்டேன்." என்றாள் அதற்குள்ளாகவே கலங்கிப் போன விழிகளுடன்.

"சரி திட்டலை. மீனாட்சி அத்தை வீட்டில் தானே இருந்த, இங்க எப்போ வந்த?"

"சித்தி வீட்டில இருந்தோம், ஆனா உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தோணுச்சு. அதான் மீனாட்சி சித்திக்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அம்மாக்கு கூடத் தெரியாம சித்தியோட ரகசியமா இங்க வந்தேன்."

அந்தி சாய்ந்த நேரம்..

மறு நாள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்.. இதில் இரகசியமாக வந்தாளா என்ற எரிச்சலில் புருவங்கள் சுருங்க, "என்னது "ரகசியமா வந்தியா?" என்றான் அடித்துவிடுபவன் போல் அவளை மேலும் நெருங்கி.

"ஆ..ஆ..ஆமா"

"திரும்பவும், திக்கு. எதுக்குடி இந்நேரத்தில ரகசியமா வரணும்?"

"அதான் சொன்னேனே உங்கக்கிட்ட பேசணும்னு."

"துர்கா, நானே செம்ம டென்ஷனில் இருக்கேன்.. இதுல நீ வேற புதிர் போடாத. சரி, இங்க வீட்டுல உன்னை யாரும் பார்க்கலையா?"

"இல்லை, அத்தை மாமா எல்லாருமே மண்டபத்துல தான இன்னும் இருக்காங்க. சித்தி விசாரிச்சப்போ நீங்க மட்டும் தான் வீட்டுல இருக்கீங்கன்னு அத்தைச் சொன்னாங்க, அதான் நாங்க ரெண்டு பேரும் இங்க வந்தோம்?"

"ஸ்ரீமதி அத்தை?"

"அம்மாவுக்குத் தெரியாது?"

"துர்கா, நம்ம ரெண்டு பேருக்கும் நாளைக்குக் கல்யாணம் தான், இல்லைன்னு சொல்லலை. ஆனால் அதுக்காக இப்படி நாம ரெண்டு பேரும் நைட் தனியா மீட் பண்றது தப்பு. இது சிட்டி இல்லை, கிராமம். யாராவது பார்த்தால் நல்லா இருக்காது. உடனே கிளம்பு.."

"மாமா. நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டு போயிடுறேன் மாமா."

"அதை ஃபோன்ல சொல்லிருக்கலாம்ல? நேரில் வரணுமா என்ன?"

இதற்கு மேலும் பொறுமையை இழுத்துப்பிடிக்கப் பெண்ணவளாலும் முடியவில்லை.

"சரி, வேணா திரும்பவும் சித்தி வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து ஃபோன் செய்யவா? உங்கக்கிட்ட நேரா பேசணும்னு தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன், நீங்க என்னன்னா பெரிய போலிஸ்காரருன்னு இப்பக்கூட நிரூபிக்கிறீங்க?"

வாழ்க்கையில் முதன் முதலாகத் தன்னை எதிர்த்துப் பேசும் அத்தை மகளை ஆழ்ந்துப் பார்த்தவாறே எகிரிக் கொண்டிருக்கும் கோபத்தை அடக்கியவனாய் ஆழ பெருமூச்சுவிட்டவன், "சரி சொல்லு.." என்றான்.

"மாமா, கொஞ்ச நாளாவே ஏதோ சரியில்லைன்னு மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு மாமா?"

ஷிவ நந்தனின் உள்ளம் அவனையும் அறியாது இலேசாகத் திடுக்கிட்டது.

"என்ன சரியில்லை?"

"நீங்க நேத்து தான கல்யாணத்துக்காகன்னு இங்க தாமரைக்குளத்துக்கு வந்தீங்க. ஆனால் நாங்க எல்லாரும் இங்க மீனாட்சி சித்தி வீட்டுக்கு போன மாசமே வந்துட்டோம் இல்லையா?"

"ம்ம்ம்"

"இங்க நாங்க வந்ததில் இருந்தே ஒண்ணுக் கவனிச்சேன் மாமா?"

அவளது கூற்றில் அவளை இடித்துவிடுவது போல் மூச்சுக்காற்று உரச மேலும் நெருங்கி நின்றவன் பார்வை இடுங்க, "என்னது?" என்று அழுத்தமான குரலில் கூற, "அது.." என்று முடிக்காமல் இழுத்தவளைப் பார்த்து ஷிவ நந்தனிவின் மிச்ச மீதி பொறுமையும் மறையத் துவங்கியது.

"துர்கா, திரும்பவும் சொல்றேன், ஏற்கனவே நான் ஒரு டென்ஷனில் இருக்கேன். இதில் நீயும் வந்து என்னைக் கோபப்படுத்திட்டு இருக்காத, சீக்கிரம் சொல்லு."

அதட்டுவது போல் அதிகாரமாகக் கூறியதும் மீண்டும் வழக்கம் போல் தடுமாற ஆரம்பித்தாள் அவனது அத்தை மகள்.

"அ.. அ.. ஒ.. ஒரு.."

"துர்கா.."

குரலை உயர்த்தியவனை விட்டு சட்டென இரு அடிகள் நகர்ந்தவள் சுவற்றில் மோதி நின்றாள்.

“ம்ப்ச் சரி.. பொறுமையாவே கேக்குறேன். பயப்படாதே.. சொல்லு..”

"நான் கவனிச்சது சரியா தப்பான்னு தெரியலை மாமா.. ஆனால் நாங்க இங்க வந்த ரெண்டு மூணு நாளுல அங்கங்க ஒரு கருப்பு கலர் கார் எங்களைத் தொடர்ந்து வர மாதிரி தெரிஞ்சது மாமா. நான் பார்த்ததுமே ஏதாவது தெருக்குள்ள போய் மறைஞ்சிக்கிற மாதிரியும் தெரிஞ்சது. உங்கக்கிட்ட ஏற்கனவே நான் சொல்லணும்னு நினைச்சேன். ஆனால் நீங்க பல பிரச்சனைகளில் இருந்த மாதிரி மனசுக்கு பட்டுச்சு, அதான் சொல்லாம விட்டுட்டேன்.”

“நான் பிரச்சனையில் இருக்கேன்னு நீயே முடிவு பண்ணிக்கிட்ட..”

“உங்களைப் பற்றி எனக்குத் தெரியாம வேற யாருக்கும் தெரியும் மாமா.”

“சரி மேல சொல்லு..”

“ஏறக்குறைய ஒரு மாசமா என் கண்ணுல அங்க இங்கன்னு பட்டுட்டு இருந்த காரை அதுக்கப்புறம் நான் பார்க்கலை. அதான் சொல்லலாமா வேண்டாமாங்கிற குழப்பத்துல விட்டுட்டேன்.." என்று மடமடவென ஒப்பித்து முடித்தாள்.

"சரி, இப்ப எதுக்குத் திடீர்னு வந்து இதைச் சொல்லணும்னு தோணுச்சு?"

"நேத்துச் சாயந்தரம் நான், அம்மா, சித்தி எல்லாரும் கோவிலுக்குப் போனோம்.. அப்ப அதே காரைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. அதுவா இருக்குமோன்னு நான் சந்தேகப்படும் போதே அந்தக் கார் நாங்க போற இடத்துக்கு எல்லாம் தொடர்ந்து வர மாதிரியே இருந்துச்சு. நாங்க இங்க திரும்பி வீட்டுக்கு வந்தப்பவும் அந்தக் காரைப் பார்த்தேன். அதான் எதுக்கும் உங்கக்கிட்ட சொல்லிடலாம்னு வந்தேன். இதை நீங்க சொல்ற மாதிரி ஃபோன்ல சொல்லிருக்கலாம் தான், ஆனால் என்னவோ நேரில சொல்லணும்னு தோணுச்சு, அதான் வந்தேன்."

"இப்ப இங்க நீ வரும் போது அந்தக் காரை எங்கேயாவது பார்த்தியா?"

"இன்னைக்குப் பார்க்கலை?"

"அதே கார் தான்னு எப்படிச் சொல்ற?"

"முதல்ல கவனிக்கலை, ஆனால் எங்களைத் தொடர்ந்து வரும் போது தான் நம்பர் ப்ளேட் பார்த்தேன் மாமா. அதே கார் தான்.."

"சரி நம்பர் சொல்லு.."

அவள் கூற கூற எவருக்கோ அலைபேசியில் தகவல் அனுப்பியவன்,

"சரி நீ கிளம்பு.. நான் உன் பின்னாலேயே கொஞ்சம் தூரம்விட்டு என் பைக்கில் வரேன். நாளைக்கு மண்டபத்துக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்க மாதிரி நீ எல்லோர் கூடவும் சேர்ந்து வா. நான் இங்க இருந்து வந்திடுறேன்.. அதுவரைக்கும் இப்படிச் சுத்திட்டு இருக்காத."

"நான் ஒண்ணும் சுத்திட்டு இருக்கலை."

"பதிலுக்குப் பதில் பேசாதடி. ஃபோன்ல சொல்ற விஷயத்தை நேர்ல தான் சொல்லணும்னு இந்த நேரத்துல வந்து இங்க நிற்கிற. ஒரு காரில் யாரோ உன்னை ஃபாலோ பண்ணிட்டே இருக்காங்க, அதுவும் ஒரு மாசமா. அட்லீஸ்ட் என்கிட்டேயாவது சொல்லிருக்கலாம்.. அதையும் விட்டுட்ட.. இப்போ இவ்வளவும் தெரிஞ்சும் இந்நேரத்துல இப்படி வந்து நிற்கிற?"

இதற்கு மேல் பேசி இவனிடம் பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவள் கீழறையில் தனக்காகக் காத்திருந்த சித்தி மீனாட்சியுடன் வெளியே செல்ல, அவர்களைத் தொடர்ந்து பெரியவருக்குத் தெரியாது இடைவெளி விட்டு தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த ஷிவ நந்தனின் மூளை கணக்குக்களை இடத்துவங்கியது.

'யாரோ இவளைக் கண்காணிச்சிட்டு இருக்காங்களோ, யாரா இருக்கும்?'

சில மணித்துளிகளிலேயே மீனாட்சியின் வீடு வந்துவிட, துர்கா உள்ளே செல்வதை உறுதிப்படுத்திக் கொண்டு வீடு திரும்பியவன் சிலரை அலைபேசியின் மூலம் அழைக்க ஆரம்பித்தான்.

"சார், சென்னையைச் சேர்ந்த மாலதிங்கிறவங்க பேர்ல அந்தக் கார் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு சார். ஆனால் கார் அவங்க வீட்டுலேயே தான் இருக்கிறதாகவும், அவங்க சென்னையைத் தாண்டி ரீஸண்டா எங்கேயும் போகலைன்னு சொல்றாங்க சார். அவங்க காருடைய நம்பரை யாரோ க்ளோன் [Number plate cloning] பண்ணிருப்பாங்க போலருக்கு சார்."

"நினைச்சேன். சரி நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேளுங்க.."

கூறியவன் காவல்துறையில் பணிபுரியும் தன் நண்பர்களையும் அழைத்து நீண்ட நேரம் ஆலோசனைகளில் ஈடுபட, எந்தவித இடையூறும் இல்லாது திருமணம் நடந்து முடிய வேண்டுமே என்ற ஷிவ நந்தனின் விருப்பத்தை இடையூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டது போல், புத்தம் புதிய கார்கள் மூன்று தேனி மாவட்டத்தை நோக்கி சூராவளியென விரைந்து கொண்டிருந்தது.

********************************************

முகூர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, இரவு முழுவதும் உறங்காது முடிந்தளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து முடித்த ஷிவ நந்தனின் மனம் இன்னமும் தெளிவாகவில்லை.

இது அவனது திருமணம்… அவனது சொந்த விஷயம்.

இதற்காகக் காவல்துறை அதிகாரிகளை அவன் பாதுகாப்பிற்காக அழைக்க முடியாது.

அதுவும் அம்மாவட்டத்தின் District Superintendent of police-ன் புதுக் கட்டளைப்படி எவருடையோ திருமணத்திற்கோ அல்லது சொந்த விஷேஷங்களுக்காகவோ பாதுகாப்புத் தருவதற்கு காவல்துறையினர் செல்லக் கூடாது.

அப்படியே ஒருவரின் வீட்டு விழாவிற்குப் பாதுகாப்பு அவசியம் தேவைப்பட்டால் அவர்கள் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளையும், அனுமதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறான அவரது உத்தரவுகளை ஒரு காவலதிகாரியான தானே மீறுவதும் நல்லதல்ல.

அதுவும் அல்லாது ஷிவ நந்தனின் கட்டளைப்படி நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டுமே தேவேந்திரனும், துர்காவின் அன்னை ஸ்ரீமதியும் திருமணத்திற்கு அழைத்திருந்ததில், விருந்தினர்களும் மிகவும் கூறைவாகவே அத்திருமணத்திற்கு என்று கூடியிருந்தனர்.

இவ்வாறானச் சூழ்நிலையில் என் திருமணத்திற்கு நான் என் சக ஊழியர்களைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணத்தில் அதிகாரிகளை அழைக்காவிடினும், நட்புக்காக என்று தேனி மாவட்டத்தை வந்து அடைந்திருந்த அவனது உற்ற நண்பர்களிடம் ஆலோசனைகள் செய்து கொண்டிருந்த ஷிவ நந்தனிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

அழைத்தது அவனது தந்தை.

"முகூர்த்தத்துக்கு இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ஷிவா. வீட்டுல இருந்து இங்க வரதுக்கே ஒன்றரை மணி நேரத்துக்கு மேலா ஆகிடும். இதுல இன்னும் கிளம்பவே இல்லைன்னா எப்படிப்பா?"

"முகூர்த்தத்திற்கு நான் அங்க இருப்பேன். நீங்க மற்ற வேலையைப் பாருங்க."

"ஊரை விட்டு இவ்வளவு தூரத்துல இருக்கிற மண்டபத்தைப் பிடிச்சிருக்கோம். மண்டபத்துக்கும் வீட்டுக்கும் அலையவே நேரம் சரியா இருக்கும்னு தானே மற்ற வேலைகளைப் பார்க்கிறதுக்காக நாங்க நேற்றே இங்க வந்துட்டோம். ஆனால் நீ நேத்தும் இந்தப் பக்கம் வரலை, இப்பவும் இப்படிச் செஞ்சா என்னப்பா ஆகுறது?"

"முகூர்த்தத்திற்கு நான் அங்க இருப்பேன்னு சொல்லிட்டேன். பின் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்க.."

ஒரேடியாக முடித்துக் கொண்டவன் திருமணத்திற்கு ஆயத்தமாகத் துவங்க, அங்கு விடியற்காலையிலேயே மண்டபத்தை அடைந்துவிட்டவளாய் தன் அறையில் அமர்ந்திருந்த துர்காவின் உள்ளமோ இன்னமும் அமைதி இல்லாமல் தவித்தது.

"இன்னும் கொஞ்ச நேரத்தில உன் மாமன் மகன் கையால தாலி வாங்கப் போற.. அந்தச் சந்தோஷமே முகத்துல இல்லாம இது ஏன் எதுக்கோ கலங்கிப் போன மாதிரி இருக்கத் துர்கா?"

ஷிவ நந்தனின் தங்கை தெய்வாம்பிகை வினவ, "நான் சந்தோஷப்படுற மாதிரியா உன் அண்ணன் செஞ்சிட்டு இருக்காரு தெய்வா?" என்று சலித்துக் கொண்டாள் மணமகள்.

"ஓ, இன்னும் உன் மாமா வரலையேன்னு கவலையில இருக்கியா? இன்னைக்கு ஒரு நாள் தான். நாளையில் இருந்து உன் மாமா உன் கண்ட்ரோலில் தான்.. அவர் எப்போ போகணும் எப்ப வரணும்னு நீயே எல்லா ரூல்ஸையும் செட் பண்ணு.. என்ன? அதுவரை கொஞ்சம் முகத்தைச் சந்தோஷமா வச்சிக்க என் செல்ல துர்கா குட்டி.."

"ம்ப்ச்.. யாரு? உன் அண்ணன்? அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் இந்தக் கிண்டல் தேவையா தெய்வா?"

"நாங்க வேற, நீ வேற துர்கா. நாங்க அவரைப் பார்த்துப் பயப்படலாம், ஆனால் நீ அப்படியா? நீயே பாரு நாளையில் இருந்து அண்ணா நீ சொல்றதை மட்டும் தான் கேட்கப் போறாங்க."

புன்னகை முகமாக தெய்வாம்பிகை கிண்டல் செய்ய, "உங்க அண்ணன் நான் சொல்றதை எல்லாம் அப்படியே கேட்டுட்டுத்தான் மறுவேலைப் பார்ப்போர், போ.. போய் நீ உன் வேலையைப் பாருடியம்மா.." என்றவளாய் எழுந்து மணமகள் அறையின் ஒரு பக்கச் சுவரில் இருந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்.

"அடியே! ஏற்கனவே நான் உன்னை விட வயசுல மூத்தவ.. இதுல இப்போ உன் நார்த்தனாரா வேற ஆகப் போறவ.. என்னை இனி நீ வாடிப்போடின்னு சொல்லக் கூடாது.."

"ம்க்கும், நான் உனக்கு அண்ணியா போறவ.. வயசு வித்தியாசம் பார்க்காம நீ என்னை இனி அண்ணின்னு தான் கூப்பிடணும், அதை மனசுல வச்சிக்க."

விடாது பதிலளித்தவளாய் ஜன்னலை நெருங்கியவள் திரைச்சீலையை விலக்கிப் பார்க்க, ஏறக்குறைய நூற்று ஐம்பது வாகனங்கள் நிறுத்த கூடிய வசதிக் கொண்ட கார் நிறுத்தும் [Parking Lot] இடத்தில் நின்று கொண்டிருந்த பல விதமான வாகனங்களில் அந்தக் கருப்பு நிறக் காரைத் தேடி துர்காவின் விழிகள் துலாவின.

'ஏன்னே தெரியலையே.. மனசுக் கிடந்து இப்படி அடிச்சிக்குதே!'

உள்ளத்திற்குள் பேசிக் கொண்டவள் இன்னமும் திருமண மண்டபத்தை அடையாதிருந்த ஷிவ நந்தனின் வருகையை எதிர்பார்த்திருக்க, முகூர்த்த நேரம் நெருங்குவதற்குள் மண்டபத்தினை அடைந்த ஷிவ நந்தனிற்கு ஏனோ இன்னும் சற்றுப் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கலாமோ என்றே தோன்றியது.

"நேரம் ஆகிடுச்சு ஷிவா."

கூறிய அண்ணையைக் கண்டு 'பொறு' என்பது போல் சைகை செய்தவன் மண்டபத்தின் ஒரு புற வாயில் அருகே நின்று கொண்டிருந்த தனது நெருங்கிய நண்பன் அஷோக்கை நோக்கி விடுவிடுவென்று நடந்தான்.

"எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம் ஷிவா. நீ போய் மணமேடையில் உட்காரு.."

"அஷோக், ஏற்கனவே இந்த மண்டபம் முழுக்கச் சி.சி.டிவி கேமராஸ் பொறுத்தச் சொல்லிருக்கேன். எதுக்கும் அந்தச் சி.சி.டிவி கேமரா மானிட்டர் ரூமில் நம்ம ஆளுல ஒருத்தரை இருக்கச் சொல்லு. சந்தேகப்படற மாதிரி யாராவது இருந்தா உடனே அவங்களைக் கண்காணிக்கச் சொல்லு. விருந்தினர்கள் குறைவா இருந்தாலும் ஒவ்வொருத்தரையும் பாதுகாக்கிறது நம்ம கடமை. அதுவும் இல்லாமல் மண்டபத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட செடி கொடிகள்ன்னு இருக்கு.. இதுல பெரிய மரங்கள் வேற சுற்றிலும் மண்டபத்தையே மறைச்ச மாதிரி வளர்ந்து இருக்கு.. எங்க யாரு மறைஞ்சிருந்தாலும் அவ்வளவு ஈஸியாக் கண்டுப்பிடிக்க முடியாது. ஸோ, பி கேர்ஃபுல்."

"ஏன் ஷிவா இவ்வளவு எச்சரிக்கை? அவன் இங்க வந்து ஏதாவது பண்ணுவான்னு நினைக்கிறியா? எனக்குத் தெரிஞ்சு இது அவன் ஸ்டையில் இல்லை ஷிவா. நேரிடையாத் தான் அவன் மோதுவான்னு நாமத்தான் கேள்விப்பட்டிருக்கோமே. இப்படி மறைமுகமா இருந்து ஆட்களைக் கொண்டு தாக்குதல் நடத்துற ஆள் அவனில்லையே, பிறகு ஏன் இவ்வளவு முற்காப்பு?"

"அவனைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் அஷோக். என்னுடைய போலீஸ் வேலையில் கை வைப்பானே ஒழிய பெர்ஸ்னல் மேட்டரில் அந்த ஆர்ய விக்னேஷைப் போல் குறுக்கிட மாட்டான். ஆனாலும் என்னவோ நேற்று வரை எனக்கு ஒண்ணும் பெருசா தெரியலை.. பட், துர்கா சொன்னதுக்குப் பிறகு கொஞ்சம் சந்தேகமாத் தான் இருக்கு. கூட்டம் ரொம்ப இல்லைன்னாலும், எதுக்கும் நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கச் சொல்லு.."

உற்ற நண்பனான அஷோக்கிடம் பேசி முடித்த ஷிவ நந்தன் மணமேடையை நோக்கிச் செல்ல, அவனது இயற்கைக் குணமான அச்சம் என்பதையே அறியாத துணிவுடனும், ஆனால் அதே சமயம் ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனும், எது நடந்தாலும் அதை எதிர் கொள்ளும் வலிமை எனக்குண்டு என்பதற்போன்றான இறுகிய தேகத்துடனும் மேடையில் ஏறிய மகனைக் கண்டு சாவித்திரிக்கு வயிற்றைப் பிசையத் துவங்கியது.

என்ன தான் மகன் மீது அளவுக்கடந்த பாசம் இருந்தாலும் அவன் எதிரில் நிற்கும் நேரம் அச்சமும் மரியாதையும் கலந்தவாறே அவனுக்குப் பணிவிடை செய்பவர் அவர்.

இதனில் என்று அவன் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெயர் எடுத்திருந்தானோ, எப்பொழுது அவன் இத்தனை குற்றவாளிகளைக் கொன்றிருக்கின்றான் என்று கேள்விப்பட்டாரோ அன்றில் இருந்தே அவன் மீது அவரையும் அறியாது ஒரு பயம் வந்திருந்தது.

இதில் கடந்த சில மாதங்களாக அவன் அவனாகவே இல்லை!

இதில் அவனது மதிப்புப் பெற்ற நீரவ் பிரகாஷின் தற்கொலை முடிவு ஏற்கனவே இறுகிப் போயிருந்த அவனது உள்ளத்தை மேலும் கடினமாக மாற்றியிருந்ததில் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஷிவ நந்தன்.

அவனை நெருங்குவதற்குக் கூட அஞ்சியதினால் தான், சென்னையில் அல்லாது இப்படி ஒரு ஊரில் தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவன் கண்டிப்பாகக் கூறியதும் மறுபேச்சு இல்லாமல் தேவேந்திரனே சம்மத்தித்துவிட்டார்.

"கடவுளே கல்யாணம் நல்லபடியா நடக்கணும்.. அது போதும்பா!"

மனதிற்குள் வேண்டிக்கொண்டவராக மகனைத் தொடர்ந்து தானும் மேடை ஏற, மணமேடையில் அமர்ந்த ஷிவ நந்தனை திருமணச் சடங்குகளும், மங்கள காரியங்களும், ஐயர் கூற ஆரம்பித்த மந்திரங்களும் ஆக்கிரமத்துக் கொண்டன.

ஆயினும் எச்சரிக்கை மணி மூளைக்குள் அடித்துக் கொண்டே இருந்ததில் வாய் மட்டும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டாலும் அவனுடைய கழுகுப்பார்வை விழிகள் விநாடிகளுக்கு ஒரு முறை அந்த அரங்கத்தைச் சுற்றியே வலம் வந்தன.

"ஐயர் சொல்றதை அப்படியே சொல்லுங்க அண்ணா, மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்."

கூறிய தங்கையை ஏறிட்டுப் பார்த்தவனின் பார்வையில் என்ன இருந்ததோ சட்டென்று அடங்கிப் போனவளாய் தெய்வாம்பிகை சற்றுத் தள்ளி நகர்ந்து நின்று கொள்ள, "மணப்பெண்ணை வரச் சொல்லுங்கோ?" என்ற ஐயரின் கூற்றில் மணப்பெண்களுக்கான அறையில் இருந்து வெளிவந்தாள் துர்கா, பேரழகியாய்.

உடல் முழுவதுமே சரிகை இழையோடிக் கிடக்க, மேனியின் சந்தன நிறத்திற்குப் போட்டிப்போடுவது போல் ஷிவ நந்தனிற்குப் பிடித்த ஆரஞ்சு நிறத்தில் வயலெட் கரைப் போட்ட காஞ்சிபுரப் பட்டுடுடத்தி, தேவதையாய் மிளிரும் பெண்ணவளை மேலும் ஜொலிக்கச் செய்யும் வகையில் நகைகள் பூட்டி, தேகத்திற்கு ஏற்றார் போல் அழகாய் பொருந்தும் அங்க லாவண்யங்களுடன், இப்பூவுலகின் ஒட்டு மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்டவளாய் நடந்து வந்தவளின் தோற்றம், அத்திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்களின் உள்ளத்தை இனிமையாய் எகிரவே செய்தது.

ஆயினும் அவளை மணக்கப் போகின்றவனோ எவ்வித மாற்றமும் இல்லாது அரங்கத்தை அளவிடுவது போல் துளையிடும் பார்வையுடன் பார்த்தவாறே அமர்ந்திருக்க, 'இப்பக்கூட அப்படி என்னத்தான் போலிஸ் பார்வையோ.' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார் அவனது அண்ணை.

மெல்ல அவனுக்கு அருகில் அமர்ந்த துர்கா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

யாருக்கோ வைத்த விருந்து என்பது போல் அதுவரை அவளைச் சட்டை செய்யாது அமர்ந்திருந்தவன் அவளது அரவத்தில் திரும்பிப் பார்க்க,

"இப்பவாவது பார்த்தீங்களே மாமா. வேற யாரும் உங்க பக்கத்தில் வந்து உட்கார்ந்தாக் கூடத் திரும்பிப் பார்க்காமலேயே தாலிக் கட்டிடுவீங்களோன்னு நினைச்சேன்." என்று இரகசியக் குரலில் கிசுகிசுத்தவளாய் தலை கவிழ, அதுவரை இறுகி இருந்த ஷிவ நந்தனின் உதடுகளில் சிறிய புன்னகை மிளிரும் நேரம், வெகு தூரத்தில் அந்தச்சத்தம் கேட்டது.

செவிகளைக் கூர்மையாக்கியவன் அது என்ன சத்தம் என்று சிந்திக்க ஆரம்பிக்கும் வேளை அவனது சிந்தனைகளைத் தடைசெய்வது போன்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தாள் அந்த இளம் பெண்.

அவளின் மீது பார்வையைப் படியச் செய்த ஷிவ நந்தனின் புருவங்கள் அவளை அங்கு எதிர்பாராததில் யோசனையில் இடுங்கின.

மணமகளாய் பேரெழில் தேவதையாய் அமர்ந்திருக்கும் துர்காவைக் கண்டு புன்முறுவல் பூத்த அவ்விளம்பெண் விருந்தினர்களுக்கு மத்தியில் மணமக்களைப் பார்த்தவண்ணம் அமர்ந்தாள்.

தன்னை விட்டு ஒரு அடி தள்ளி அமர்ந்திருக்கும் துர்காவின் புறம் சற்றே தலையைச் சாய்த்த ஷிவ நந்தன் இன்னமும் அப்பெண்ணின் மீதே பார்வையைப் பதித்தவாறே, “அந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா?” என்றான் வியப்புடன்.

“ம்ம்.. தெரியும் மாமா.. சின்ன வயசில் இருந்தே எனக்குத் தெரியும்.”

கூறியவள் திருமணச் சடங்கில் கவனம் செலுத்த, ஷிவ நந்தனின் புத்தி பல கோணங்களில் அப்பெண்ணைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கியது.

இவள் எப்படி இங்கு வந்தாள்? ஏன்? மும்பையில் இருப்பவள் இவள். துர்காவோ தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருக்கும் மல்லியக்குறிச்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்.

எப்படி இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு உருவாகியிருக்க முடியும்?

****************************

அவ்வப்பொழுது மண்டபத்தினுள் ஆங்காங்கே நின்றுக் கொண்டிருப்பவர்களையும், எதிரில் அமர்ந்திருக்கும் விருந்தினர்களையும் குறிப்பாகச் அவ்விளம்பெண்ணையும் பார்த்தவண்ணம் திருமணச் சடங்கினில் ஷிவ நந்தன் ஈடுபட்டிருக்க,

அவர்களின் குல வழக்கபப்டி திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்காவும், திருமணத்தின் போது எந்த இடையூறும் நேராமல் இருக்கவும் முன் எச்சரிக்கை சடங்கான, மங்களகரமான சக்தி வாய்ந்த மஞ்சளில் தோய்த்து உரு ஏற்றப்பட்ட, வேதமந்திரங்கள் ஓதிப் பிரார்த்திக்கப்பட்ட மஞ்சள் கயிற்றினை, ஷிவ நந்தனின் வலது மணிக்கட்டில் கட்டினார் ஐயர்.

ஆணுக்கு தெய்வம் காப்பு. பெண்ணுக்கு ஆண் காப்பு. இந்தக் காப்பு கட்டி விட்டால் அதனை அவிழ்க்கும் வரை எந்தத் தீட்டுமோ தீங்குமோ அவர்களைச் சேராது என்ற நம்பிக்கையின் படி அதே போன்ற கயிற்றைத் துர்காவின் இடது கரத்திலும் கட்டினார்.

மங்கல அரிசி வைக்கப்பட்ட தாம்பூலத்தில் தேங்காய் மேல் தாலியைக் கயிற்றோடு வைத்து அனைவரிடமும் காட்டி வாழ்த்துப் பெறுவதற்காக உறவினர் ஒருவர் எடுத்துச் செல்ல, சற்று முன் கேட்ட சத்தத்தைப் பற்றிய எண்ணம் மீண்டும் ஷிவ நந்தனின் புத்திக்குள் எழுந்தது.

சட்டென மணமேடைக்குக் கீழே நின்று கொண்டிருந்த தனது நண்பன் அஷோக்கைக் கண்டு தலையசைத்துச் சைகை செய்தவன், அவன் தன்னை நெருங்கியதும் இரகசியமாய்க் கிசுகிசுத்தான்.

"சரி, நான் பார்த்துக்கிறேன். நீ மேரேஜில் கான்சண்ட்ரேட் பண்ணு.." என்றவனாய் அஷோக் அங்கிருந்து நகர்ந்ததும் மீண்டும் முடிந்தவரைத் திருமணச் சாங்கியங்களில் கவனத்தைச் செலுத்த, ஆனால் நேரம் கடந்தும் அஷோக் திரும்பி வராதது பெரும் சந்தேகத்தை விளைவித்தது.

அதே நேரம் சொல்லி வைத்தார் போன்று நிதானமான வேகத்துடன் மண்டபத்தின் இடப்பக்கமாய், அடர்ந்திருந்த செடிகளுக்கும், நாலாப் பக்கமும் கிளைகளை விரித்துப் பரந்து வளர்ந்திருந்த மரங்களுக்கும் இடையில் வந்து நின்றது, பளபளக்கும் அந்தக் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர், [Range Rover 5.0 LWB SV Autobiography ]

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:
Omg…!!! Edge of the seat laye vechirukkeenga…
Enna than nadanthuthu Varum engagement la???
Varun oda aatkal than Durga va follow pannatha??? 🧐🧐🧐

Marriage ku vandha lady Arya Vignesh pondatti Seethalakshmi thane? Ava thane Durga Shiv friend… aanaal avanukku marandutta.. 🫤🫤🫤

Aww… Varun entry polave… crucial point la thodarum pottuteengale..

Shiv friend Ashok hospital la iruppan pola… 😑😑😑

Kandippa kalyanam nadakakthu for sure
 

saru

Member
Kalyanam nadakuma nadakatha og god
Karupu car mater ivlo late ah va solva durga
Ashok ku enna achu
Varun nerata moduvan ok
Ana ipo nadakratha partha doubt ah iruku
Ennada kuzhamave iruku
Varun engagement enna achu
Aga motham neeya naana tan
 
Last edited:

Vidhushini

New member
ஒவ்வொரு character intro & entry ஏற்கனவே mention பண்ணினாலும், எபி by எபி அந்தமாதிரி scenes வர்றது செம சுவாரசியமா & ஆர்வமா இருக்கு🔥🔥🔥

வருண் தேஸாய் entry ஷிவா-துர்கா வாழ்க்கையில் என்ன திருப்பத்தை ஏற்படுத்துமோ?
inbound5535790307776472047.jpg
ஆர்ய விக்னேஷ் மனைவி சீதா, ஷிவ நந்தன்-துர்கா, வருண் தேஸாய் இந்த மூன்றுபேரும் ஒரே இடத்தில் சந்தித்ததன்/சேர்ந்ததன் விளைவு? 🔥

அடுத்து என்னன்னு வாசிச்சுக்கிட்டே வரும்போது 'தொடரும்' போட்டீங்களே....

Awesome epi @JB sis❤️
 

Wasee

New member
Omg ..sema epi.

Marriage nadakkuma? nadakatha ? Tension la yae padichu irukean.

Pls durga paavam.
2 peraiyum serthu vachudunga.

Yaar antha karuppu car kulla irukura karuppu aadu?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top