JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 23

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 23

சசிதரனின் மரணச் செய்தி ஆர்யனையும் எட்டியது.

ஏற்கனவே வருணின் பாதுகாப்பில் இருந்த துர்கா கடத்தப்பட்டாள் என்று கேள்விப்பட்டதிலும், அதற்குப் பின்னணியில் இருப்பது தான் தான் என்று வருண் சந்தேகப்பட்டதிலும் குழப்பத்துக்கு ஆளாகியிருந்த ஆர்யனை, சசிதரனின் தற்கொலை பெரும் மன உளைச்சலுக்கு ஆழ்த்தியது.

அதுவும் தற்பொழுது அவனது ஆய்வுகள் இரண்டுமே ஏறக்குறைய முக்கால்வாசி முடிந்திருக்கும் சூழ்நிலையில் வருணின் கோபத்திற்கு ஆளானால், என்ன ஆகும்?

எப்படி இருந்தாலும் அவன் தனது ஆராய்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பான் என்றாலும், அவனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் மற்ற தொழிற்களின் கூட்டணிகளால் அவனுக்கு வரும் லாபத்தினை இழக்க விரும்பாமல், தன்னை எதிர்க்காமல் அவன் விட்டுவிடுவான் என்ற பெரிய நம்பிக்கை ஆர்யனுக்கு இருந்து வந்தது.

ஆனால் இது போன்ற சூழ்நிலை உருவானால், அதி நிச்சயமாய்த் தனக்கும் அவனுக்கும் இடையேயான உறவு முறிவடையும்.

ஏனெனில் துர்காவுக்கும் அவனுக்கும் இடையில் இருப்பது அவனது தனிப்பட்ட விஷயம்.

இதனில் தலையிடுவது என்பது தங்களுக்குள் இருக்கும் தொடர்பை வேரோடு நானே வெட்டுவது போன்றாகிவிடும்.

இதனால் தானே துர்காவை தங்களின் பாதையில் இருந்து அகற்றுமாறு நாசுக்காகவும் பண்பட்ட முறையிலும் அவனிடம் கேட்டுக் கொண்டதே.

அதுவும் அல்லாது சிதாராவுக்கும் வருணுக்கும் திருமணம் நடந்தால், அதில் தனக்கும் பெரும் ஆதாயங்கள் இருக்கின்றது.

ஆக, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதுமன்றி, தனக்கும் வருணுக்கும் பெரும் பிளவை உருவாக்கிவிட்டாள் இந்தத் துர்கா என்றிருந்த நிலையில் விரக்தியுடன் தனது வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவன் செல்ல முனைந்தது, அவனது Viper Industrial Park தொழிற்சாலைக்கு.

ஏறக்குறைய தனது கருப்பு நிற லெக்ஸசின் ஜன்னலில் கையை மடித்து வைத்தவனாய் [black Lexus LX] சிகாரை பிடித்தவாறே அலுவலகம் இருக்கும் தெருவிற்குள் நுழைந்தவன் என்ன நினைத்தானோ, சடாரென்று கியரை ரிவர்ஸுக்கு மாற்றிப் பின் லெக்ஸஸை வளைத்து திருப்பியவன் வேறு வழியில் வாகனத்தைச் செலுத்தினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆர்யனின் லெக்ஸஸ் நின்றது அவனது இல்லத்தின் வாயிலில்.

காரில் இருந்து இறங்கியவன் வீட்டிற்குள் நுழைய, எப்பொழுதும் நள்ளிரவு கடந்த பின்பே வீட்டிற்குத் திரும்பும் கணவன் அன்று அதிசயமாய் மதியமே வந்திருப்பதில் ஆச்சரியப்பட்டவளாய் அவனைப் புன்முகத்துடன் வரவேற்றாள் அவன் மனைவி சீதாலெட்சுமி.

"என்னங்க, அதிசயமா இருக்கு.. மதியமே வீட்டுக்கு வந்திருக்கீங்க?"

"சாப்பிட்டுட்டியா?"

"இல்லை, இனி தான் சாப்பிடணும்."

"சரி, எனக்கும் எடுத்து வை.."

வெகு நாளைக்குப் பின் கணவன் வீட்டில் மதிய உணவை உண்ணப் போகும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தவள் அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் சமையலறைக்குள் ஓட்டமும் நடையுமாக நுழைய, பணிப்பெண் ஜெயந்தியை அழைத்தவன் தங்களின் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு பணித்தான்.

அதற்குள் உண்டிகளை டைனிங் டேபிளின் மேல் அடுக்கி வைத்த சீதா அவனுக்குத் தட்டினை எடுத்து வைக்க, இருக்கையில் அமர்ந்தவனின் கண்கள் அவனது மனையாளின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

அவன் தன்னையே உடலிற்குள் உள்ளிழுத்துக்கொள்வது போல் பார்ப்பதை அறியாது உணவினைப் பரிமாறியவள் அவன் இன்னமும் உண்ணாததைக் கண்டு நிமிர, சட்டெனத் தலைக் குனிந்தவன் உண்டியை எடுத்து வாயில் வைத்தான்.

"நீங்க வருவீங்கன்னு தெரியாதில்லையா, அதான் எங்களுக்கு மட்டும் சமையல் செய்தோம். சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும், கீரைக் கூட்டும் மட்டும் தான், போதுமா?"

“ம்ம்ம்” என்று மட்டும் கூறியவன் உணவினை அருந்தியவனாக அவளை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாது உண்ணுவதிலேயே கவனமாக இருக்க, பார்த்து பார்த்து அவளும் அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருக்க, மனையாளின் கரம் பற்றினான்.

"என்னங்க?"

"நீயும் சாப்பிடு.."

"நீங்க முதலில் சாப்பிடுங்க.. ஏதோ அத்திப்பூத்த மாதிரி இப்படி மதியம் வீட்டுக்கு வந்திருக்கீங்க. உங்களுக்குப் பரிமாறுவதை விட்டுட்டு நான் சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா?"

"மப்ச்.. பரவாயில்லைடி, உட்காரு.."

அவளின் கையை இறுக்கப் பற்றி இழுத்தவனாய் தன்னருகில் அவளை அமரச் செய்துவிட்டு அவளுக்கும் தட்டு எடுத்து வைத்து அவனே சாதத்தைப் பரிமாற, எப்பவும் சுடுதண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டது போல் ஓடிக் கொண்டே இருக்கும் கணவனின் இந்தக் கனிவான செய்கையில் பெண்ணவளின் கண்கள் பனித்தன.

அவளது முகத்தைப் பார்த்தவன் நீர்திரையிட தன்னையே இமைக்காது பார்த்திருப்பவளைக் கண்டு என்ன என்பது போல் புருவங்களை ஏற்றி இறக்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் தானும் உண்ண ஆரம்பித்தாள்.

"சீதா.."

"ம்ம்ம்."

"எதுக்கு இப்போ இந்தக் கண்ணீர்?"

"ம்ப்ச், அதெல்லாம் ஒண்ணுமில்லை."

"நான் கேபினட் மினிஸ்டரா ஆகறதுக்கு முன்னாடி வரை நாம ரெண்டு பேரும் எத்தனையோ தடவை ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கோம், அப்ப எல்லாம் இது மாதிரி நான் உனக்குப் பரிமாறினதே இல்லையா, என்ன?"

"ஆனால் இப்ப எல்லாம் உங்களுக்கு என்கிட்ட பேசவே நேரமில்லைங்கிற மாதிரி ஓடிட்டே இருக்கீங்களா? அதான் திடீர்னு இப்படி மதியம் வந்ததும் இல்லாமல் எனக்கும் சாப்பாடு எல்லாம் எடுத்து வைக்கிறதைப் பார்த்ததும் பழைய நியாபகம் வந்துடுச்சு."

இடது கரத்தால் கன்னங்களைத் தாண்டி வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே கூற, அவளது சாதத்திற்குச் சாம்பாரை ஊற்றியவாறே, "குழந்தையைப் பார்த்துக்க ஜெயந்திக்கிட்ட சொல்லிட்டேன்.. நீ நம்ம ரூமுக்கு வா.." என்றான்.

"ஏங்க, என்னாச்சு?"

"என்னாச்சுன்னா? என் கூட நம்ம ரூமூக்கு நீ வரதுக்குக் காரணம் எதுவும் இருக்கணுமா, என்ன?"

பட்டெனத் தெறித்த அவனது வார்த்தைகளில் கோபம் விரவியிருந்தது.

"இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்? திடீர்னு இந்நேரத்துல வீட்டுக்கு வந்திருக்கீங்க. குழந்தையையும் பார்த்துக்கச் சொல்லி ஜெயா அக்காக்கிட்ட சொல்லிட்டு என்னைக் கூப்பிடுறீங்க, அதான் கேட்டேன்."

"அதெல்லாம் ஒன்னுமில்லை. சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டு வா.."

கூறியவனாய் தானும் உண்டு முடித்துவிட்டு எழுந்தவன் கையை அலம்பிவிட்டு தங்களின் அறைக்குச் செல்ல விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏற, கணவனின் இன்றைய செய்கைகள் சீதாவிற்கு விசித்திரமாகவே பட்டது.

கணவனின் களையான முகம் இன்று களையிழந்து காணப்பட்டது போலும் இருந்தது.

ஏதோ ஒன்று அவனை வாட்டுகின்றது என்பது புரிபட ஏனோதானோவென்று சாப்பாட்டைக் கொறித்துவிட்டு அனைத்தையும் ஒழுங்குப்படுத்தியவள் வேக வேகமாய் மாடிக்கு சென்றாள்.

அங்குக் கணவனைத் தங்களின் அறையில் காணாது பால்கனிக்கு வர, ஸோஃபாவில் அமர்ந்தவனாய் சிகாரைப் பிடித்தவாறே தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தவனது தோற்றம் மேலும் ஐயறவை ஏற்படுத்தியது.

அவனுக்கு அருகில் சென்று அதே ஸோஃபாவில் சில இடைவெளிகள் விட்டு அமர்ந்தவளாய், "என்னங்க, என்ன ஆச்சு? ஏன் ஏதோ ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் கனிவுடன்.

ஒரு விநாடி அவளின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தவன், “ஏன் இதைக் கிட்ட வந்து கேட்கக் கூடாதா?” என்றான்.

புன்முகத்துடன் அவனை மேலும் நெருங்கி அமர, பிடித்திருந்த சிகாரை மேஜையில் இருந்த ஆஷ்டிரேயில் வைத்தவன் மனைவியின் தோளில் சாய்ந்து கொண்டான்.

அவனின் செய்கையில் அவளுக்குத் தெரிந்து போனது, அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாத ஒன்று நிகழ்ந்திருக்கின்றது.

ஏனெனில் ஷிவ நந்தன் ஆர்யனைக் கைது செய்தப் பொழுதுக்கூட அவன் இவ்வாறு துவண்டுப் போகவில்லை. இதையெல்லாம் கடந்து வரும் துணிவும் தன்னம்பிக்கையும் இல்லாதவன் அரசியல் வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது என்று தெம்பாகச் சொன்னவன்.

அதே போல் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அனைத்து பழிகளையும் உடைத்தவனாய் ஜெயத்துடன் புன்னகை முகமாய் வீட்டிற்குத் திரும்பி வந்தவன்.

ஆனால் இன்று??

நெடு மூச்சுவிட்டவளாய் அவனின் தோளை வளைத்துப் பிடித்துத் தானும் அவன் தலைமேல் தலைசாய்க்க, நீண்ட நேரம் அப்படியே அமர்ந்துக் கொண்டிருந்தவன் திடீரென்று கேட்டான்.

"சீதா, எனக்கும் வருணுக்கும் இடையேயான அலையன்ஸ் [alliance] பற்றி, ஐ மீன் எங்களுக்கு இடையில் இருக்கும் உறவு பற்றி நீ என்ன நினைக்கிற?"

"உங்களுடைய பிஸ்னஸ் பார்ட்னர்ஷிப் பற்றிக் கேட்குறீங்களா?"

"இல்லை, அதைத்தவிர."

"எனக்குத் தெரிஞ்சு உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது நட்பு அல்ல, ஆனால் அதையும் கடந்து வேற ஒண்ணு இருக்கு, ஒரு பற்றுன்னு [bond] கூடச் சொல்லலாம். ஆரம்பத்தில் நான் கூட வருணுக்கு உங்களால் ஏதோ ஒரு ஆதாயம் இருக்கிறதாலத் தான் உங்களுடன் நட்பு பாராட்டுறாருன்னு நினைச்சேன். ஆனால் அவர் எப்படி அவங்களுடைய நிறுவனங்களுக்கு CEO-வாக ஆனார், எப்படி இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய ஸ்தாபனங்களை ஒற்றை ஆளா நிர்வகிக்கிறாருன்னு கேள்விப்பட்டதும், ஆதாயம் அவருக்கு இல்லை, ஆனால் அவரால் உங்களுக்குத் தான்னு எனக்குப் புரிஞ்சது.

அதே போல் அவருக்கும் உங்களுடைய அரசியல் செல்வாக்கு அப்பப்ப பக்கபலமா இருக்குன்னு கேள்விப்பட்டதுமே உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது நட்பு இல்லை, வெறும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மட்டும் தான் இந்த உறவுன்னு நினைச்சேன்.

ஆனால் கடந்த கொஞ்ச காலமா உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது, எல்லாத்தையும் தாண்டி ஒண்ணு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். அது என்னன்னு எனக்குச் சரியா சொல்லத் தெரியலை, ஆனால் நீங்க ஒருவரை ஒருவர் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுத்துட மாட்டீங்கன்னு மட்டும் தெரியும்."

மனையாளின் விளக்கத்தைக் கேட்டவன் அவளின் தோளில் சாய்ந்தவாறே அவளை ஏறிட்டு நோக்க, அவனது முன்னுச்சியில் புரண்டிருக்கும் முடிகளை மென்மையாய் ஒதுக்கியவளாய் மென்முத்தம் பதித்தவள், "சொல்லுங்க, உங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையா?" என்றாள்.

"சரியா தெரியலை சீதா, ஆனால் இனி வரும்னு மட்டும் மனசுக்கு தோணுது?"

"ஏன் திடீர்னு?"

"உனக்குத் துர்காவை, ஐ மீன் துர்க ரூபினியைத் தெரியும் தானே."

"ஆமா, ஷிவாவின் அத்தைப் பொண்ணு. எங்க கிராமத்துக்கு போகும் போது அப்பப்ப அவளைப் பார்த்திருக்கேன்.”

“அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா?”

“ம்ம்... அவளைக் கல்யாண மேடையிலேயே யாரோ கடத்திட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனால் பாவம், சின்ன பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு வேற."

"அவளை யாருக் கடத்திட்டுப் போனதுன்னு தெரியுமா?”

“ம்ஹும். நீங்க சொல்வீங்கன்னு பார்த்தேன், ஆனால் அதைப் பற்றி நீங்க பேசவே இல்லை. அதனால் விட்டுட்டேன்.”

“அவளைக் கடத்தினது வருண்.."

திடுக்கென்று தூக்கிப் போட்டது பெண்ணவளுக்கு.

"என்னங்க சொல்றீங்க? வருணா அந்தப் பொண்ணைக் கடத்தினது?"

"ம்ம்ம்.."

"ஏங்க?"

"ஷிவ நந்தனைப் பழிவாங்கத் தான்.."

இந்தப் பூவுலகத்தில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ மனிதர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்று எண்ணியவளுக்கு வியக்கவும் திகைக்கவும் மட்டும் தான் முடிந்தது.

கடந்த கால வாழ்க்கை விநாடிகளுக்குள் அவளின் மனக்கண் முன் தோன்றியது.

ஷிவாவின் மீது தான் இளம் வயதில் கொண்ட நேசமும், அவனது அத்தை மகளை அவனுக்கு மணமுடிக்க அவர்கள் வீட்டில் முடிவெடுத்தது தெரிந்ததும் அவனை அடியோடு மறந்ததும் நிழல்காட்சிகளாய் மானசீகமாக ஒளிர்ந்தன.

"ஷிவா வருணை அரெஸ்ட் பண்ணினார் தான், இல்லைன்னு சொல்லலை. ஆனால் அதுக்காக ஒருத்தரைப் பழிவாங்க இப்படி ஒரு சின்னப்பொண்ணைக் கடத்துவாங்களா? ஆம்பளைங்களுக்குள்ள பகை இருந்தால் அதை அவங்களுக்குள்ளே தீர்த்துக்கிறது தானே சரி. ஏன் பெண்களைப் பகடைக்காயா மாத்துறாங்க?"

"அது அவங்கங்களுடைய சூழலைப் பொறுத்தது."

"என்ன பெரிய சூழல்? ஷிவா வருணை அரெஸ்ட் பண்ணியது வருண் செய்தக் குற்றத்துக்காக. அதுக்கு அவர் ஷிவாவிடம் நேரடியா மோதியிருக்கணும். அதைவிட்டுட்டு இதென்ன பொண்ணுங்களை இடையில் இழுக்குறது. இப்போ வருணை பழிவாங்க ஷிவா வருணுக்கு நிச்சயமான பொண்ணைத் தூக்கிட்டு போனார்னா?" என்றவள் சட்டென நிறுத்தி,

"ஏங்க அந்தப் பொண்ணு பேரு என்னன்னு சொன்னீங்க, சிதாரா தானே. வருணுக்கும் சிதாராவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது தானே? வருணை அரெஸ்ட் பண்ணிய காரணத்தை வச்சு அவங்க கல்யாணம் நிற்காது இல்லை?” என்று அடுக்கடுக்காக வினவினாள்.

ஆனால் அவளின் அத்தனை கேள்விகளுக்கும் அவளின் கணவன் கொடுத்த பதில், "தெரியலை சீதா." என்பது தான்.

“ஏங்க உங்களுக்குத் தெரியாமல் வருணுக்கும் கல்யாணம் நடக்குமா?”

“அதான் தெரியாதுன்னு சொல்லிட்டேன் இல்லை. அது அவனுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட முடியாது, அது அவனுக்கும் பிடிக்காது.”

“கல்யாண விஷயத்துல கூடவா?”

“யெஸ்.”

"சரி அதைவிடுங்க, திடீர்னு வருணைப் பற்றி ஏன் கேட்குறீங்க, அதைச் சொல்லுங்க.."

"யாரோ என்னையும் வருணையும் பிரிக்கத் திட்டமிடுகின்ற மாதிரித் தெரியுது, ஆனால் அது யாராக இருக்கும்னு தான் தெரியலை. அது கண்டிப்பா, வருணுக்கும் எனக்கும் துர்காவிற்கும் தெரிந்த ஆளாகத்தான் இருக்கணும்.”

“உங்க மூணு பேருக்கும் தெரிந்த ஒரே ஒருத்தர்..” என்று நிறுத்தியவள், சற்று அகல விரிந்த கண்களுடன்,

“ஏங்க ஷிவாவுக்குத் தான் உங்க மூணு பேரையும் தெரியும். ஆனால் ஷிவா ஏன்? வருணை அவர் அரெஸ்ட் செய்தார், அதற்குப் பழிவாங்கத்தான் அவர் துர்காவைத் தூக்கிட்டுப் போனாருன்னு சொல்றீங்க. இதுக்கு இடையில் நீங்க எப்படி? உங்களுக்கும் அவருக்கும் இடையில் பிரச்சனைகள் இருக்கு, ஆனால் இதில் துர்கா எப்படி?" என்றாள்.

அவளது கேள்விகள் அனைத்துமே மிகச் சரியானவை தான்.

ஆனால் ஷிவா வருணிடம் இருந்து துர்காவைக் காப்பாற்றித் தான் கூட்டிச் செல்வானே ஒழிய, இவ்வாறு கடத்திக் கொண்டு போவதற்கு அவன் அறிவீலியா?

அப்படி என்றால் இந்த நாடகத்தின் பின் இருக்கும் சூத்திரதாரி யார்??

வருண் தேஸாய், ஷிவ நந்தன், ஆர்ய விக்னேஷ் ஆகிய மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், அழகாய் மறைந்திருந்து எவரோ காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

‘Who is that Invisible player?’

அது அவர்களில் ஒருவரா அல்லது வேற்று மனிதன் எவனுமா?

ஒரு வேளை வருணே துர்கா காணாமல் போனது மாதிரி திட்டங்கள் தீட்டி அதனில் என்னைப் பலிகடா ஆக்க முயற்சிக்கின்றானா? எனக்கும் ஷிவ நந்தனிற்கும் இடையில் பகையை வலுக்கச் செய்கின்றானா?

அவ்வாறு நினைப்பதற்கே வெகு முட்டாள்தனமாக இருந்தது.

ஆயினும் அனைவருக்குமே புரியாத புதிராக இருந்தன அதுவரை நடந்தேறிய சில விஷயங்கள்!!

அதன் பலன் மண்டையே வெடிக்கும் போல் இருந்தது ஆர்யனுக்கு.

மனைவிக்குப் பதில் கூறாது மௌனம் காத்தவன் என்ன நினைத்தானோ சிறிது நேரத்திற்குப் பிறகு, "சீதா பெட்ரூமுக்கு போகலாமா?" என்றதில், கணவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

"என்னடி அப்படிப் பார்க்குற?"

"மணி இப்போ என்ன தெரியுமா? ரெண்டு மணி.."

"இருந்தால் என்ன? இதுக்கெல்லாம் நேரம் காலம் இருக்கா, என்ன?”

“எதுக்கு?”

“ம்ம். நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் முடிஞ்சிருக்குன்னு நியாபம் இருக்குதுல்ல?”

“சரி, அதுக்கு?”

புன்முறுவலுடன் வினவியவளின் கீழுதட்டை இறுக்கப்பிடித்தவன், “எனக்கு இப்போ நீ வேணும், அவ்வளவு தான்.." என்றான் கரகரக்கும் குரலில்.

“குழந்தை..”

“அதான் ஜெயந்தியைப் பார்த்துக்கச் சொல்லிட்டேன் இல்ல? நீ முதல்ல வா..”

கூறியவனாய் எழுந்தவன் அவளைச் சட்டென இரு கரங்களிலும் ஏந்த, நாணத்தில் பெண்ணவளின் உச்சி வகிட்டுக் குங்குமத்தை விட அவளின் அழகிய வதனம் மேலும் செம்பவளமாய்ச் சிவந்தது.

என்னத்தான் திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தாலும், இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தாலும் இன்னமும் கணவனின் தொடுகையில் உருகிக் கரைந்தவளைக் கண்டு ஆர்யனுக்கும் அவ்வளவு ஆசை சுரந்தது.

அன்றை நாளில் அவள் அவனின் கவலைக்கும் குழப்பத்திற்கும் வடிகாலாய் மாறினாள்.

ஆனால் அவனது கலக்கத்திற்கான பதில் தான் ஆர்யனுக்கு அவ்வளவு எளிதாய் கிட்டவே இல்லை.

*****************************

கட்சிரோலி கானகத்தில் இருந்து துர்கா திரும்பி வந்து இத்துடன் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.

எவ்வளவோ முறை ஷிவா கேட்டும் வருணைப் பற்றி ஒரு தவறான வார்த்தைக் கூட அவள் உச்சரிக்கவில்லை.

தந்தை சஞ்சீவ் தேஸாயின் அதிகப்படியான நேர்மைப் பிடிக்காததினாலே அவருக்கே தெரியாமல் பல தந்திரங்களும் பல்வேறு நுட்பமான சூட்சுமங்களும் செய்து, அவருக்குப் பாத்திரமானவனாகப் பல வருடங்கள் நடித்தவன் வருண்.

அதே நம்பிக்கையின் பெயரில் தங்களுடைய அனைத்து நிறுவனங்களின் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்படைக்கவிருந்தவர், ஏதோ ஒன்று சந்தேகப்படும் படியாக அவனிடம் கண்டதினால் தானே அவரது திட்டத்தை அப்படியே நிறுத்தினார்.

ஆயினும் அவரால் ஒரு விரல் கூட அசைக்க முடியாதளவிற்கு, இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே, வெகு சாமர்த்தியமாய்த் திட்டமிட்டு அவர்களின் தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவன் அவன்.

என்ன தான் இந்த இந்திய தேசம் மட்டும் அல்லாது பல நாடுகள் அவனைச் சிறந்த இளம் தொழிலதிபனாகக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நேர்மைக்கு எதிரானதாகவே இருந்ததே.

அப்படிப்பட்டவன் ஒரு இளம் பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் ஏறக்குறைய இரு மாதங்களாக அடைத்து வைத்திருக்கின்றான், ஆனால் அவளை நெருங்கக்கூட இல்லை என்றால் நம்ப முடியுமா?

அதே சமயம் பெண்கள் விஷயத்தில் வருண் எப்படி என்று அவனின் ஆதி முதல் அந்தம் வரை துருவி கொண்டிருக்கும் எனக்குத் தெரியுமே.

ஷிவாவின் காவல் மூளை பல கோணங்களில் ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்து.

இப்படியான ஒரு நாளில்,

"இதுக்கு மேல் என்கிட்ட வேற எதுவும் நீங்க கேட்டீங்கன்னா ஏதாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போறதைத் தவிர எனக்கு வேற வழித் தெரியலை மாமா.” என்று துர்கா கதறியதில் ஷிவா குழம்பித் தான் போனான்.

“துர்கா, உன் நிலைமை எனக்குப் புரியுது, ஆனால்?”

“ஆனால் என்ன மாமா? நீங்க என்கிட்ட கேள்விகள் கேட்கிறதைப் பார்த்தால் ஏதோ கைதிகளிடம் போலீஸ் விசாரணை பண்ற மாதிரி இருக்குது. உங்களுக்கு அவர் மேல கோபம் இருக்கலாம், அதுக்காக என்னை இப்படிக் குடைஞ்சு எடுத்தால் நான் என்ன பண்றது?”

"வருண் உன்னைக் கடத்திட்டு போயிருக்கான் துர்கா. உன்னை ரெண்டு மாசமா அடைச்சு வச்சிருக்கான். அதை மறந்துடாத.."

"எப்படி மாமா மறக்கும்?"

"அப்படின்னா நான் கேட்குற கேள்விகளுக்குப் பதில் சொல்லு.."

"எனக்குத் தெரிஞ்சவரை எல்லாத்தையும் சொல்லிட்டேன்."

"இல்லை துர்கா.."

"இதுக்கு மேல என்கிட்ட என்ன மாமா எதிர்பார்க்குறீங்க?"

“வருணை நான் நெருங்கணும் துர்கா. அதுக்கு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.”

“முடியாது மாமா.”

“முடியாதுன்னா, ஏன் முடியாது?”

ஏறக்குறைய அதட்டுவது போல் அதிகாரத் தொணியில் அவன் கேட்டதில் அவளின் கண்ணீர் கரை புரண்ட வெள்ளம் போல் கன்னங்கள் கடந்து வடிந்தது.

“மா.. மா.. மாமா. தயவு செஞ்சு எ.. எ.. என்னை விட்டுடுங்க."

திக்க ஆரம்பித்துவிட்ட அவளின் கதறலும், தன்னைக் கண்டு அரண்டுப் போய் நிற்கும் அவளின் தோற்றமும் ஷிவாவை வருத்தப்படுத்த, இதற்கு மேல் இவளிடம் விசாரித்துப் பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவன் அத்துடன் அவளிடம் கேள்விகள் கேட்பதையே நிறுத்திவிட்டான்.

அதற்கு மேல் அவளை இம்சிக்க விரும்பாது சற்று தள்ளி நகர்ந்தும் போயிருந்தான்.

ஆனால் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாக உறவினர்கள் தன்னைப் பார்த்துக் கேட்கின்றனர் என்று அழுத அன்னை ஸ்ரீமதியிடம்,

“எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலைம்மா. எல்லாரும் என்னிடம் இப்படியே கேள்விக் கேட்டுட்டே இருக்கீங்க.. எங்கேயாவது போய்விட மாட்டோமான்னு இருக்கு. ஏற்கனவே ரெண்டு மாசத்துக்கு மேல எங்கேயோ, யாராலேயோ அடைச்சி வைக்கப்பட்டவள் தானே நான். அதனால் யாராவது கேட்டால் திரும்பவும் என்னை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு வேணா சொல்லிடுங்க..” என்று வெடித்திருந்தவளிடம் இதற்கு மேல் என்ன கேட்பது என்று ஸ்ரீமதியும் விட்டுவிட்டார்.

ஆக, என்ன நடந்தால் எனக்கு என்ன? நான் என் வேலையைச் செய்கின்றேன் என்று கடிகார முட்களும் நகர, நாட்களும் அதன் போக்கில் கடந்து சென்றதில், துர்கா வீட்டிற்குத் திரும்பி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்திருந்த வேளையில் அச்செய்தி காதில் விழுந்தது.

'நின்றுப் போன் தொழிலதிபர் வருண் தேஸாய், அமைச்சர் முகேஷ் சௌஹானின் ஒரே மகள் சிதாராவின் திருமணம் மீண்டும் நடைபெற இருக்கின்றது'

நிச்சயதார்த்த விழா நின்றுப் போனதற்குப் பிறகு வந்த சில வாரங்களில், எத்தனையோ முறை, தானும் ஒரு பெரிய அமைச்சராக இருப்பினும், தன் நிலையில் இருந்து கீழ் இறங்கி வந்த முகேஷ் சௌஹான் திருமணத்தைப் பற்றிச் சஞ்சீவ் தேஸாயிடம் கேட்டிருந்தார்.

ஆயினும் அப்பேச்சை பல முறை தவிர்த்து வந்தார் அவர்.

இந்தத் திருமணப் பேச்சை முதலில் துவக்கியதே சஞ்சீவ் தானே. சிதாரா தன் வீட்டிற்கு மருமகளாகவும், தன் ஒரே மகனுக்கு மணமகளாகவும் வந்தால் அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி உலா வரும் என்று ஆசைப்பட்டவர் அவர் தானே.

அவரே இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசாது அமைதியாகிப் போயிருந்த சமயத்தில் முகேஷ் சௌஹானின் வற்புறுத்தல் அவருக்கு ஒருவித எரிச்சலைத் தந்தது.

இப்பேற்பட்ட பண மோசடி [money laundering] வழக்கில் வருண் கைது செய்யப்பட்டுப் பத்திரிக்கைகளில் அவன் பெயர் அடிபட்டிருந்தாலும் அதை எல்லாம் அசட்டை செய்தவராக, திருமணத்தைப் பெற்றி பேச்செடுத்த சிதாராவின் தந்தையைக் கண்டு சற்றுத் திகைத்திருந்தார் வருணின் தந்தை என்றே சொல்லாம்.

இவர் என்ன மாதிரியான மனிதர்? அதிலும் அரசியலில் பெரும் பெயர் எடுத்திருக்கும் அமைச்சர் வேறு.

ஒருவன் இவ்வளவு பெரிய மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுத் தேசம் முழுவதுமான தொலைகாட்சி செய்திகள், பத்திரிக்கைகள், இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் அவனைக் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்னத்தான் அவன் தன் சாமர்த்தியத்தால் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெளியே வந்துவிட்டாலும் அவனுக்குத் தன் ஒரே பெண்ணைக் கொடுக்க இன்னமும் விரும்பும் இவர் நிச்சயம் இத்திருமணத்தைச் சுய ஆதாயங்களுக்குத் தான் எதிர்பார்க்கிறார் என்று புரிந்து, நிச்சயதார்த்தம் நின்று போன சில நாட்களிலேயே திருமணத்தையும் வேண்டாம் என்று ரத்துச் செய்திருந்தார் சஞ்சீவ் தேஸாய்.

ஆனால் திடீரென்று தானே அறியாத தன் மகனின் திருமணச் செய்தியைக் கேள்விப்பட்டது அவருக்கே அது புரியாத புதிராக இருந்தது.

திடுமெனத் தேசமெங்கும், ‘தொழிலதிபர் வருண் தேஸாய், அமைச்சர் முகேஷ் சௌஹானின் மகள் சிதாரா சௌஹான், இருவரின் நின்று போன திருமணம் விரைவில் நடக்கவிருக்கின்றது’ என்று பரவலாக ஒளிபரப்பட, குழம்பிப் போனவர் அதைப் பற்றி விசாரிக்கும் எண்ணத்துடன் மகனின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தார்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தெற்கு மும்பையில் உள்ள, மில்லியனர்கள் வசிக்கும் மலைப்பகுதி, மலபார் ஹில் [Malabār Hill]

மலபார் மலைப்பகுதியில் அரேபியக்கடலை பார்த்தவாறே கட்டப்பட்டிருந்த தனது பிரம்மாண்டமான கோட்டையினுள் நுழைந்தான் வருண்.

மாளிகையின் நடுவறையில் சுவரில் மாட்டியிருக்கும் அந்தப் பெரிய தொலைகாட்சியில் கண்களைப் பதித்திருந்தாலும், புருவங்களைச் சுருக்கியவராய் அமர்ந்திருந்த தந்தையின் குழப்பத்திற்கான நோக்கம் வருணுக்கும் புரிந்தது.

ஆயினும் வழக்கம்போல் அவரிடம் எதுவும் பேசாது மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கி நடந்தவனின் நடையை நிறுத்தியது "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்ற தந்தையின் குரல்.

என்ன என்பது போல் திரும்பி நோக்கியவனைக் கண்டு "உண்மையா வருண்?" என்றார்.

"எது?"

"தெரியாத மாதிரி ஏன் கேட்குற?”

“என்ன கேட்கிறதா இருந்தாலும் நேரடியா கேளுங்க.”

அவனது கோபத்தையும் எரிச்சலையும் புரிந்துக் கொண்டவராய் தன்னைச் சமன்படுத்த நீண்ட மூச்சுவிட்டவர் அவனின் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தவாறே, “ உனக்கும் சிதாராவுக்கும் திருமணம்னு பேச்சு அடிபடுதே, அது?" என்றார்.

"ஏன், இது பற்றிச் சிதாராவுடைய அப்பா உங்கக்கிட்ட எதுவும் சொல்லலையா?"

அவனின் கூற்றில் சஞ்சீவ் தேஸாயின் கண்கள் இடுங்கின.

"இல்லையே!"

"அப்படின்னா அவர்கிட்டயே கேளுங்க."

"என்ன சொல்ல வர்ற வருண்?"

"இந்தக் கல்யாணத்துல என்னைவிடச் சிதாராவை விட உங்களுக்குத் தான் ஆர்வம் அதிகம். அதாவது இந்தக் கல்யாணத்தோட [Wedding matchmaking] மேட்ச் மேக்கரே நீங்க தானே. அப்படிப்பட்ட உங்களுக்கே இதைப் பற்றித் தெரியலைன்னா நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும்.”

நெடு நாளைக்குப் பிறகு அவரது மகன் அவரிடம் அதிகமாகப் பேசியிருக்கின்றான் என்றால் அது இன்று தான். ஆயினும் என்ன பதில் இது?

“வருண், நீ என்ன பேசறன்னு புரிஞ்சு தான் பேசுறியா?”

“அஃப் கோர்ஸ். உங்களுக்குப் பிறகு அவருக்குத் தான் எங்க கல்யாணத்தில் ரொம்ப ஆர்வம். அதனால் நீங்க எதுவானாலும் அவரிடம் பேசுங்க. என்னை எதுவும் கேட்காதீங்க"

"உன் கல்யாணத்தைப் பற்றி உன்னிடம் பேசாமல் நான் ஏன் அவரைக் கேட்கணும்? சிதாரா உன் மனைவியா வந்தால் நல்லா இருக்குமுன்னு நான் முடிவு செஞ்சது கடந்த காலம். ஆனால் அதற்குப் பிறகு நான் ரத்து செய்த திருமண விஷயத்தைத் திரும்ப ஆரம்பிச்சு இருக்கிறது நீ. நீ தானே இந்தக் கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணினதா எல்லா நியுஸ் சேனல்ஸும் அலறிட்டு இருக்குதுங்க. அப்ப உன்கிட்ட தான் நான் பேசணும்.."

அவரது கூற்றிற்கு ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென நிறுத்தியவனாய் தலையை அசைத்துவிட்டு தன் அறையை நோக்கி செல்ல மாடிப்படிகளில் விடுவிடுவென ஏற, அவனது மனதையும் சில கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தன.

காலை முதல் இதே தகவலை பற்பல ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகளிலும் ஒளிப்பரப்புவதைக் கேள்விப்பட்டுப் பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தான்.

‘யார் இப்படியான ஒரு நியூஸை வெளியிட்டு இருப்பாங்க? இதனால் யாருக்கு லாபம்? அதுவும் நேஷனல் லெவலில் கிட்டத்தட்ட வைரல் ஆகும் அளவுக்கு நியூஸ் வந்திருக்குன்னா, அந்தத் தகவலை வெளியிட்டது நிச்சயம் அந்தஸ்தும் சக்தியும் உள்ளவனா தான் இருக்கணும். அப்படின்னா அது யார்?’

கேள்விகள் படையெடுத்துக் கொண்டிருக்க, வழி நெடுக்கத் தன்னை மறித்து நின்ற நிருபர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் பதிலளிக்காது சாமர்த்தியமாக வந்துவிட்டாலும், தனது திருமணப் பேச்சு தந்த உளைச்சலில் மனம் ஓய்ந்து போனது போல் இருக்க, கட்டிலில் பொத்தென்று விழுந்தவனின் முன் மற்றொரு கேள்வி படர்ந்தது.

'சிதாராவுக்கும் எனக்கும் மேரேஜ்னு நான் தானே முடிவு செய்தேன். ஆனால் இதைப் பற்றி மற்றவர்கள் பேசும் போது ஏன் மனசு இவ்வளவு கனமா இருக்கு?'

புத்தியும் இதயமும் பல வேளைகளில் ஒன்றாய் பயனிப்பதில்லை என்பது போல் அறிவு அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க, அன்று கட்சிரோலி கானகத்துக் குடிலில், தன்னை விட்டுச் செல்லும் தருணத்தில், துர்கா அழுதக் கண்ணீர் அவனுக்குள் வற்றாமல் சிதறிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்த இதயமோ மௌனமாய் மாறிப்போனது.

Love kills intelligence. The brain and the heart act upon each other in the manner of an hour-glass. One fills itself only to empty the other.

— Jules Renard

ஜூல்ஸ் ரெனார்டின் வாசகம் நியாபத்தில் படர, தலைக்குக் கீழ் இரு கரங்களையும் கொடுத்து யோசனையில் ஆழ்ந்தவனின் புத்திக்கும் இதயத்துக்குமான போர் நிறைவடையாது தொடர்ந்ததில், கண்களை மூடினாலும் நித்திரா தேவியும் அவனை நெருங்க மனமின்றி விலகியே போயிருந்தாள்.

சில வேளைகளில் இதயத்திடம் அறிவு தோற்றுப் போகின்றது!

சில நேரங்களில் அறிவு இதயத்தை வென்றுவிடுகின்றது!

நமது வாழ்வும் அதன் பாதையில் விரும்பியோ விருப்பமின்றியோ பயனிக்கத் துவங்குகின்றது!!

************************************************************************

The Grand Roseate Palace.

இந்தியாவிலேயே ஆடம்பரமான நவீன வசதிகள் பல கொண்ட மண்டபம் என்று பெயர் எடுத்திருக்கும் திருமண மண்டபம் அது.

பிரம்மாண்டம் மற்றும் நேர்த்திக்கு பெயர் போன இத்திருமண மண்டபம் ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு விருந்தினர்கள் அமரும் வசதியும் கொண்டது.

அலங்காரங்கள் எதுவுமின்றியே பளபளக்கும் அத்திருமண மண்டபம் அன்றைய நாளில், தங்கமும் சிகப்பும் கலந்த அலங்காரத்தைத் திருமணக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருந்ததில், தேவலோகத்தையும் மிஞ்சிவிடும் வசீகரத்துடனும் பகட்டுடனும் பிரகாசித்ததில், கூடியிருந்த விருந்தினர்களின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது அந்நாள்.

நெடுவரிசையில் மினுமினுத்து தொங்கும் மின் விளக்குகளுக்கு மத்தியில் போட்டிப்போடும் விதமாக, ஸேண்டி ரோஜாக்களும் [sandy roses], சிகப்பு மற்றும் வெள்ளை நிற ஹையாசிந்த் பூக்களும், கண் கவரும் சிகப்பு நிற கார்னேசன் பூக்களும், வெள்ளை மற்றும் சிகப்பு வர்ண பியோனி மலர்களையும், சிகப்பு கேமல்லியா ஜபோனிகா பூக்களையும் அவற்றுடன் இணைத்துச் செயற்கையாகச் செய்யப்பட்ட தங்க நிற மலர்களையும் கொண்டு அழகுற அலங்கரிக்கைகள் செய்திருந்ததில் மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன.

சிகப்பு நிறத்தில் தங்க நிறக் கரைப்போட்ட கம்பளம் மணமேடைக்கு நேர் கீழ் இருந்து பல மீட்டர்கள் விரித்து வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொரு மேஜைகளுக்கு நடுவிலும் பூங்கொத்துகளுக்கு நடுவினில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளிக்கதிர்கள், குழுமியிருந்த விருந்தினர்களின் பட்டாடைகளில் பட்டு அழகாய் மணமண்டபம் முழுக்கவும் சிதறித்தெளித்துக் கொண்டிருந்தது.

பரந்த வண்ணமயமான கண்ணாடி ஜன்னல்கள் திருமணக் கருப்பொருள் வர்ணங்களைக் கொண்டு நெய்யப்பட்டிருந்த திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அவற்றின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு அரங்கம் முழுவதையுமே ஜொலிக்கச் செய்வது போல் ஆங்காங்கு பூக்களின் ராணியான சிகப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜாப்பூக்களைச் சின்னஞ்சிறு இலைகளுடன் இணைத்து பூங்கொத்துகளாகச் செய்து ஜோடித்திருப்பதைப் பார்த்து அங்குக் குழுமியிருந்தவர்களின் உள்ளங்கள் பெரும் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது.

ஆனால் ஒரே ஒருவரின் மனம் மட்டும் இவை எதனிலும் இலயிக்க மறுத்து அங்கும் இங்குமாக அல்லாடிக் கொண்டிருந்தது.

இவள் தான் மணமகள் என்று பெரியோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிச்சயதார்த்த விழா ஏற்கனவே ஒரு முறை நின்று போனது.

அதே போன்றதொரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையுடன் இன்று இத்திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மண்டபத்தைச் சுற்றிலும் பல நூறு தனியார் பாதுகாப்புப் படையினர் [private securities] பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

மணமகளின் தந்தை பெரும் அமைச்சர் என்பதாலும், ராஜபுத்திரர்களின் இனமான அவருக்கு அரசக்குடும்பங்களின் தொடர்பும் இருந்ததாலும், மண்டபம் முழுக்கவும் பிரபல பிரமுகர்களும், அரசுக் குடும்ப வாரிசுகளும் சூழ்ந்திருக்க, ஏனோ பொருள் விளங்காத பதட்டம் ஒன்று பரவியிருந்ததில் ஒவ்வொரு நிமிடமும் திக் திக்கென்றே இருந்தது, பிரத்தியேக அறையில் ஒப்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மணமகளுக்கு.

"என்ன சித்து, இன்னும் கொஞ்ச நேரத்துல கழுத்துல தாலி ஏறப்போகுது. ஆனால் உன் முகம் முழுக்கப் பயம் தான் அப்பிக்கிடக்குது. என்ன ஆச்சு?"

ஹிந்தியும் மராத்தி மொழியும் கலந்து, பாசத்துடன் கேட்கும் அன்னையின் முகம் நோக்கி மெல்ல நிமிர்ந்தவளின் கண்கள் நீரில் பனித்திருக்க, அவளைப் பதைபதைப்புடன் நெருங்கியவர் தாடையை அனுசரணையாய்ப் பற்றினார்.

"உன் பயம் எனக்குப் புரியுது சித்து. ஏற்கனவே நடக்கவிருந்த நல்ல காரியம் தடைப்பட்டது போலத் திரும்பவும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துடுமோன்னு பயப்படற. ஆனால் இந்த முறை அப்படி நடக்க உன் அப்பா விடமாட்டார். நம்ம மாப்பிள்ளையும் விடமாட்டார். பாரு, மண்டபத்தைச் சுற்றிலும் எவ்வளவு பாதுகாப்பு போட்டிருக்காங்கன்னு. எல்லா இடங்களிலும் ப்ரைவேட் செக்யூரிட்டீஸ் நிற்கிறாங்க. இதுல உன் அப்பாவுடைய கட்சி ஆளுங்கன்னு வேற குவிஞ்சிக் கிடக்கிறாங்க. நல்லப்படியா உன் கல்யாணம் நடக்கும். மனச தளரவிடாத. கண்ணைத் துடைச்சுக்க.."

"பாதுகாப்பு எத்தனை இருந்தாலும் அதை எல்லாம் உடைச்சிட்டு மண்டபத்துக்குள்ளேயே வருமளவுக்கு எதிரிங்க தான் இவருக்கு ஏகப்பட்ட பேரு இருக்காங்களே. இதுல இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடக்கிற யுத்தத்துல யாரோட கல்யாணத்தை யார் நிறுத்துறதுன்னு போட்டிப் போடுற மாதிரி போன தடவை ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திட்டாங்க. இதனால் அவங்க பழிவாங்குற இலட்சியம் வேணும்னா நிறைவேறலாம், ஆனால் இதுல பாதிக்கப்பட்டது ரெண்டு பொண்ணுங்கன்னு அவங்க கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. அதுக்குப் பிறகும் சும்மாவா இருந்தாங்க. இன்னமும் தான் யார் யாரை முதலில் அழிக்கிறதுன்னு வெறியோட அலைஞ்சிட்டு இருக்காங்க. அதான்மா, இப்பவும் அது மாதிரி ஏதாவது நடந்துடுமோன்னு.." என்றவளை பேசவிடாது அவளின் வாயை மெள்ள பொத்தினார் சிதாராவின் அன்னை, அமைச்சர் முகேஷ் சௌஹானின் மனைவி.

"அபசகுனமா எதுவும் சொல்லிடாத சித்து. எல்லாம் நல்லப்படியாவே நடக்கும்."

அன்னையின் கூற்றுக்குப் பதிலளிக்காது, 'இவங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலையே' என்று மனதில் நினைத்துக் கொண்டவளாக, கன்னங்கள் தீண்ட இருந்த விழிநீரை உள்ளிழுத்தவள், அலங்காரத்தைத் துவங்கலாம் என்று ஒப்பனை கலைஞர்களுக்கு அனுமதி அளித்தாள்.

மடமடவென மீண்டும் அலங்காரங்கள் ஆரம்பிக்க, ஏற்கனவே விண்ணுலகத் தேவதைகளின் பேரெழிலோடு பிறந்திருந்தவள், இப்பொழுது பேஜ் நிற உடலும் சிகப்பு நிற சரிகை கரையும் [beige and red color] கொண்ட திருமணப் பட்டுப்புடவையில் மென்மேலும் மெருகுக்கூடியதில் நட்சத்திரமாய் மின்னத் துவங்கியதில், ஒப்பனை கலைஞர்களின் கண்களே கூசுவது போன்று இருந்தது.

ராஜபுதினத்தின் பாரம்பரியமான நகைகளில் மணிக்கட்டில் அணியப்பட்டிருக்கும் வளையலுடன் பிணைக்கப்பட்டு, உள்ளங்கையின் மேற்புறத்திற்கு அழகு செய்யும் பெரிய பூ வடிவம் பதித்த, விரல்களுக்கான நகை என்ற பொருளில் அறியப்படும் பஞ்சாங்க்லா (panjangla] நகையையும்,

கழுத்தில் இறுக்கமாகப் பொருந்தும் ராஜபுதன நெக்லஸ் என்று அறியப்படும் 'ஆட்' என்று அழைக்கப்படும் சோக்கர் நெக்லஸையும், மீனாகரி வேலைப்பாட்டால் வடிவமைக்கப்பட்ட [bajuband] என்ற வளையல்களையும், இடுப்பில் அணியும் 'டக்டி' என்றழைக்கப்படும் ரூபியும் வைரமும் பதித்த ஒட்டியானத்தையும் அணிந்திருந்தவள் அச்சுப்பிசகாது ராஜபுத்திர இளவரசியாகவே தோற்றமளிக்க, அவளைச் சுற்றி இருந்த பெண்கள் கூட மயங்க ஆரம்பித்தனர்.

சரம் சரமாய்த் தொங்க விடப்பட்டிருக்கும் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட சிறிய மேடையில் அமர்ந்திருந்த மணமகனின் மனமோ, வேறு விதமான எண்ணங்களுக்குள் சிக்கியிருந்தது.

நிச்சயமாக இத்திருமணத்தை நிறுத்த அவன் வரமாட்டான், ஆனால் இவள்?

தான் வாழ்க்கையில் நினையாத பல நிகழ்ச்சிகள் கனவு போல் நடந்திருக்க, அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாய் இன்றைய திருமணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவனுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்தது.

யுத்த காலங்களில் பெண்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது நாம் அறிந்த ஒன்றுத்தான்.

ஆனால் எங்கள் இருவரின் யுத்தத்தில் அவர்களையும் அறியாது உள்ளிழுக்கப்பட்டிருக்கும் இந்த இரு பெண்களின் நிலையோ இதுவரை யாரும் அனுபவித்திராத விநோதமான ஒன்றாயிற்றே!

புத்தி அதன் வேலையைச் செய்து கொண்டிருக்க, அவனது கரங்களோ புரோகிதர் கூறிக் கொண்டிருக்கும் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தது.

நொடிகள் நிமிடங்களாகக் கடந்து கொண்டிருக்க, "மணமகளைக் கூட்டிட்டு வாங்கோ!" என்ற புரோகிதரின் குரலில் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்க்க, அலங்கார தேராகத் தலைகவிழ்ந்து நடந்து வருபவளின், இன்னும் சில மணித்துளிகளில் தனக்கு மட்டுமே உரியவளாக மாற இருப்பவளின் எழில் கொஞ்சும் தெய்வீக அழகில் சிக்கியவனாய் செய்வதறியாது திகைத்துப் போனான் அம்மணமகன்.

அதற்குள் அவனருகில் அமர்ந்த சிதாரா படபடக்கும் மனதை அடக்கப் பெரும்பாடுப்பட்டவளாகத் தங்களுக்கு முன் எரியும் ஜோதியின் மீதே பார்வையைப் பதிக்க, மந்திரங்களை உதிர்த்துக் கொண்டிருந்த புரோகிதரின் கரம் நாதஸ்வர கலைஞர்களுக்குத் தெரியும் வண்ணம் கையை உயர்த்திச் சைகை காட்ட, "கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்றவரின் கட்டளையில் மங்கல இசை மண்டபமே அதிரும் அளவிற்கு முழங்க ஆரம்பித்தது.

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரதச் சதம்”

என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே இந்த மங்கல நானை உன் கழுத்தை சுற்றி அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன். மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

தலைக்குனிந்து தன் கையால் தாலியை வாங்கக் காத்துக் கொண்டிருப்பவளின் கழுத்தில் முடிச்சுக்களை இட விழைந்தவன் ஒரே ஒரு நொடி தாமதித்து பின் நெடு மூச்சுவிட்டவனாய் நிதானமாய்க் கட்டியவனின் கண்கள், அங்கு விருந்தினர்களின் மத்தியில் முன் வரிசையில் நின்றவாறே விழிகளில் நீர்த்திரையிட மஞ்சள் கலந்த நுனைமுறியாத அரிசியைத் தங்களின் மேல் தூவிய இளம் பாவையவளின் மீது பதிந்து நின்றது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்...

References:

 
Last edited:

Vidhushini

New member
ஷிவா-சிதாரா கல்யாணம் நடந்து, அட்சதை தூவினது துர்காவாக/சீதாவாக இருக்கலாம்.
inbound4216642881039289726.jpg

Mirza brothers are the invisible players. They will become the reason for the unity of the Lions... (Maybe)

Will all the lions hunt down the Mirza brothers together or maybe by alone?

Eagerly waiting for next epi @JB sis🔥
 

Lucky Chittu

New member
Varun thaali kattinathu Durga ku thaane? Kandippa illaina shiv sithara ku thaali kattirukkaan. Waiting for the next epi mam.
 

saru

Member
Siva thazhi kattiyachi
Apo Varun enga
Mun varisail irupadu yar seetha va
Inda moonu peraum vachi game adrathu mirsha brothersa mattume irukka vaipilA
Anda black yara irukum
 
Shiv is the groom… ❣️❣️❣️
Sithara worry pannurathu safety kaga than… already she fell in love… antha Arisi thoovum paavai Durga. 🙈🙈🙈

Aryan ah parthaalum pawama than irukku… avan than antha news ah koduthu iruppano…
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top