JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 15

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 15

Shimla (also known as Simla - the official name until 1972)

சிம்லா என்பது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமுமாகும்.

இன்றைய சிம்லா நகரம் உள்ள பகுதியின் பெரும்பகுதி 18 ஆம் நூற்றாண்டில் அடர்ந்த கானகமாக இருந்தது.

காளியின் அவதாரமான ஷியாமளா தேவியின் பெயரால் இந்தப் பகுதி 'சிம்லா' என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். வெகு உயரமான மலைகளுக்கு நடுவில் உள்ள சிம்லா இந்திய மலை வாசஸ்தலங்களிலேயே பழமை வாய்ந்ததாகும்.

அம்மலைப் பிரதேசத்தின் ஒரு ஓரத்தில், அடர்த்தியான மரங்களுக்கு நடுவில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் வெர்மிலியன் பேர்ட் டிஸ்டில்லரி [Vermilion Bird Distillery]

வெளியில் இருந்த பார்த்தால் அமைதியானதாகவும், கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் மெருகும் நயமுமற்ற பழமையான கட்டிடமாகவும், மனித வாடையே இன்றிக் கைவிடப்பட்டதுப் [abandoned building] போல் தோன்றும் அக்கட்டிடத்தின் மேற்பரப்பு முழுவதுமே புற்களால் ஆன கூரையால் அமைக்கப்பட்டிருந்தது.

பார்ப்பவர்களின் கண்களைக் கவர்வதாக இருக்கக் கூடாது. அதே போல் அதனைக் கடக்கும் மனிதர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்தக் கட்டிடம் அடர்ந்த மரம் செடிகளுக்குள் மறைந்துவிட வேண்டும். வழிப்போக்கர்களையும் வாகனங்களில் செல்வோர்களையும் ஒரு நொடி கூட ஈர்க்கக்கூடாது.

ஆக இந்த நோக்கத்துடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,123 மீட்டர் உயரத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் மாநில தலைநகரான சிம்லாவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட கட்டிடம் அது.

வெளியாட்களுக்குத் தெரியாதளவில் அலை அலையான புல் கூரையுடன், கறைப்படிந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக உள்ளே பார்ப்பதும் கடினம் என்றளவில் கட்டப்பட்டிருக்கும் அந்த மதுபானங்கள் தயாரிக்கப்படும் ஆலை, குளிர்காலங்களில் விரிவடையாத, கோடை காலங்களில் சுருங்காத வலுவான மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தது.

அதனுள்ளே ஐந்து 'செல்'களாகப் பிரிக்கப்பட்டு, மதுபான உற்பத்திச் செயல்பாட்டில் வெவ்வேறு படிகளைக் கொண்டிருக்கும் [brewing process] அளவிற்கு ஒவ்வொரு கலமும் [cell] அமைக்கப்பட்டிருக்க, அக்கட்டிடத்தின் முக்கிய உற்பத்திப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆர்யனின் புத்தி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தது.

மும்பையில் இருந்து விமானத்தில் கிளம்பினால் ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குள் வந்துவிடும் தொலைவில் கட்டப்பட்டிருக்கும் ஆலை அது.

இது போன்ற பல மது ஆலைகள் ஆர்யனுக்கும், வருணுக்கும் சொந்தமாக இருந்தாலும், இந்த ஒரு ஆலை மட்டும் ஆர்யனின் தனிப்பட்ட கவனத்தில் இருந்து வந்தது.

அவ்வாலை ஃப்லேமிங் வெர்மிலியன் பேர்ட் ஸ்பிரிட்ஸுக்குச் [Flaming Vermillion Bird Spirits] சொந்தமானாலும், அப்படி ஒரு கட்டிடம் இருப்பதோ, அங்கு நடந்தேறிக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளோ எதுவுமே வருணுக்குத் தெரியாதவாறு மிகவும் தந்திரமாகச் செயல்படுத்தி வந்திருந்தான் ஆர்யன்.

தொழில் முறையில் கூட்டாளிகளாக இருந்தாலும், ஆர்யனின் அரசியல் பணிகளிலோ, அவனது அந்தரங்க காரியங்களிலோ எக்காலத்திலும் தலையிடாதவன் வருண்.

அதே போல் வருணின் தனிப்பட்ட விஷயங்களிலோ, அவனது தொழில் விவகாரங்களிலோ அனாவசியமாக உட்புகாதவன் ஆர்யன்.

அதுவே இந்தக் கொடிய ஆராய்ச்சிகளை வருண் அறியாது செய்ய ஆர்யனிற்குத் தூண்டுகோலாகவும். உறுதுணையாகவும் இருந்தது.

அதுவும் அல்லாது தொழில்வட்டாரத்தில் முன்னுக்கு வருவதற்கு எப்பேற்பட்ட மோசடிகளைச் செய்வதற்கும் துணிந்தவன் வருண் என்றாலும், இன்றும் நிழல் உலகத்தில் அவனது ஒற்றை விரலுக்கு அசையக் காத்திருக்கும் சக்தி வாய்ந்த மாஃபியா தலைவர்கள் நிறைய இருந்தாலும், மனித உயிர்களை மதிப்பற்றதாக்கும் இவ்வாய்வினை அவன் ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி அறிய நேர்ந்தால் அக்கணமே மதுபான தொழிலில் இருந்தே வருண் வெளியேறவும் வாய்ப்பிருக்கு.

அப்படி ஒன்று நேர்ந்தால், இந்தத் தொழில் மூலம் வரும் வருமானத்தில் பெரிய அடி விழுவது மட்டுமல்ல, அரசாங்கத்தினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் ஆர்யன் சந்திக்க நேரிடும் பொழுது, கை விரித்துவிடக் கூடியவனான வருண் தனக்கு எதிரியாக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

காரணம் இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி தேச மக்கள் அறிய நேர்ந்தால், ஆர்யனின் அரசியல் வாழ்க்கையை மட்டுமல்ல, வருணின் தொழில் சாம்ராஜ்யத்தையே அது அடியோடு சாய்த்துவிடும்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் திடுமென வருணிடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றம் ஆர்யனை பெருஞ்சந்தேகத்திற்கு உள்ளாக்கியது.

இனி தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் எடுத்து வைக்க வேண்டும். எந்த விதச் சந்தேகமும் தன் மேல் வருணுக்கு வந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே சஹானாவின் ஆசையையும் நிராகரித்திருந்தான் ஆர்யன்.

இதனில் வருணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையாகத் துர்காவின் பிரவேசம் வேறு!

"என்ன சார் ரொம்ப யோசனையுடன் இருக்கிற மாதிரி தெரியுது? ஏதாவது பிரச்சனையா?"

இவ்வாய்வில் ஆர்யனின் வலது கைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைமை ஆய்வாளர்களில் ஒருவனான விஷேஷின் கூற்றிற்கு அவனைத் திரும்பிப் பார்த்தான் ஆர்யன்.

"என்ன விஷேஷ் கேட்டீங்க?"

"ஏதோ யோசனையுடன் நீங்க இருக்கிற மாதிரி தெரிஞ்சுது, அதான் எதாவது பிரச்சனையான்னு கேட்டேன். ஆனால் இப்போ நீங்க பேசறதைப் பார்த்தால் அப்படித்தான்னு தோணுது?"

"யெஸ் விஷேஷ்.." என்றவன் அவனிடம் விளக்கத் துவங்கினான், ஆனால் துர்காவை வருண் கடத்தியதையோ, ஷிவ நந்தனிற்கும் வருணிற்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றியோ தெளிவாய் மறைத்தவனாய்.

"ஏற்கனவே நாம் இதைப் பற்றிப் பேசியிருக்கோமே சார், ஒருவேளை வருண் சாருக்குத் தெரிஞ்சுப் போச்சுன்னா என்ன பண்றதுன்னு?"

"யெஸ் விஷேஷ், ஆனால் அப்ப இருந்த சூழ்நிலை வேற, இப்ப இருக்கிற சூழ்நிலை வேற"

"புரியலை சார்."

"கொஞ்ச நாளைக்கு முன் வரை ஒரு வேளை இந்த ஆராய்ச்சியைப் பற்றி வருணுக்குத் தெரிய வந்தால் அவனை எப்படிச் சரிகட்டுறதுன்னு ஒரு திட்டம் போட்டு வைச்சிருந்தேன். இது வெளி உலகத்துக்கேத் தெரியாமல் எப்படி அவனை அமைதியா இருக்க வைக்கிறதுன்னு அதுக்கும் ஒரு திட்டம் தீட்டியிருந்தேன். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் கொஞ்ச நாளா அவன் செய்துட்டு வர்றக் காரியங்கள் எனக்கு அவன் மேல சந்தேகத்தை வரவழைச்சிருக்கு. அவனை நம்பலாமா வேண்டாமா, ஒரு வேளை இந்த விஷயங்கள் வெளிவந்தால் என்னால் அவனை சமாளிக்க முடியுமாங்கிற பெரிய கேள்விகள் இப்போ எனக்குள்ள உருவாகியிருக்கு.."

"அப்படி என்ன நடந்துச்சு சார்? ஏன் அவர் மேல உங்களுக்குச் சந்தேகம் உண்டாகிருக்கு."

"பெருசா எதுவும் நடந்திடலை விசேஷ், ஆனால் எனக்குத் தெரியாமல் வருண் ஏதோ செய்துட்டு வர மாதிரி எனக்குத் தோனுது. எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா நிறையப் பிஸ்னஸஸ் இருக்கு, ஆனால் நாங்க ரெண்டும் பேரும் சேர்ந்து செய்யற பிஸினஸஸ் தான் எனக்கு அதிக வருமானம் கொடுக்கிறதே. அதே போல் என்னுடைய அரசியல் அதிகாரமும், கேபினட் மினிஸ்டர் பதவியும் வருணுக்கு உதவியா இருந்தாலும், தெளிவாச் சொல்லணும்னா அவனை நம்பித்தான் என்னுடைய அரசியல் கோட்டையே நான் கட்டியிருக்கேன். இது மாதிரியான சூழ்நிலையில் அவனுக்கு என்மேல் நம்பிக்கை குறையறதும், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஈடுபட்டு வர செயல்களில் அவன் தனியா முடிவெடுக்கிறதும் எனக்கு ஆபத்து தான். அது மட்டும் இல்லை விஷேஷ்..”

கூறியவன் சற்று நிறுத்த அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்திருந்த விஷேஷ், “வேற என்ன சார்?” என, அதற்கு ஆர்யன் கூறிய பெயர்கள் விஷேஷின் இருதயத்தை ஏகத்திற்கு அதிர்ந்து துடிக்கச் செய்தது.

“மிர்சா ப்ரதர்ஸ்.. யாதவ் மிர்சா அன்ட் கலானி மிர்சா..”

“சார்..”

“யெஸ் விஷேஷ். இனி நாம் ரொம்பக் கவனமா இருக்கணும்..”

வருண் துர்காவைக் கடத்தியதும், இவ்வளவு நாள் அவளை விடாது அடைத்து வைத்திருப்பது மட்டும் ஆர்யனின் மனதினை மூழ்கடித்திருக்கும் அச்சத்திற்கு முழுமையான காரணமல்ல.

இவை அல்லாது ஏதோ வேறு ஒன்று அவ்வப்பொழுது அவனது புத்தியை எச்சரிக்கை செய்யத் துவங்கியது.

அது மிர்சா சகோதரர்களின் சந்தேகத்திற்குரிய சில நடவடிக்கைகள்.

குறிப்பாக இளையவனான கலானி மிர்சாவின் செயல்பாடுகளும், இரகசியத் திட்டங்களும், அவனது வெறித்தனமான ஆட்டங்களும் பல வகைகளில் ஆர்யனின் அரசியலுக்கு இடையூறு செய்யும் வகையில் அமைய ஆரம்பத்திருந்தது.

ஆகத் தான் நன்கு அறிந்த எதிரிகள் ஒரு பக்கம்!

எக்கணம் வேண்டுமானாலும் எதிரியாக மாறிவிடக் கூடிய நண்பன் மற்றொரு பக்கம்!

இதனில் தன்னை எப்பொழுது நெருங்குவது, குருவைப் போன்ற DGP நீரவ் பிரகாஷின் மரணத்திற்குத் தன்னை எப்பொழுது பழிவாங்குவது என்று அடிபட்ட அரிமாவாய்க் காத்திருக்கும் ஷிவ நந்தன் இன்னொரு பக்கம்!

கரணம் தப்பினால் மரணம் என்பது போல் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. அதன் காரணமாகத் தான் ஆர்யன் இன்று சிம்லா வரை வந்திருந்தது.

"இப்ப என்ன செய்யலாம்னு சொல்றீங்க சார்? ஏதாவது மாற்றுத் திட்டம் வச்சிருக்கீங்களா?"

"யெஸ் விசேஷ்."

"என்ன திட்டம் சார் அது?"

தனது கேள்விக்கு விளக்கம் அளிக்கத் துவங்கிய ஆர்யனின் கூற்றினில் அவன் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றான் என்பது விஷேஷிற்குப் புரிந்தது.

ஆர்யனின் பல முகங்களில் அவன் செய்து கொண்டிருக்கும் கொடூரமான ஆய்வினில் அவனது கொடிய முகம் பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும், ஆர்யனையும் தப்பிக்க முடியாத அளவிற்கான சிக்கலில் சிக்க வைக்கக் கூடிய சூழலும் உருவாகிக் கொண்டிருப்பதைக் கண்ட விஷேஷின் அடிவயிற்றில் பயம் புரண்டது.

குழந்தைகளையும், வயதான பெரியோர்களையும், யாருமற்ற அனாதை மக்களையும் அப்பேற்பட்ட மனிதாபிமானமற்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தும் பொழுது வராத கலக்கம், விஷேஷின் வாழ்க்கையில் அன்று வந்தது.

மிகுந்த எச்சரிக்கையுடன் இல்லாவிடின், தான் இந்தப் பூவுலகத்தில் வாழ்ந்ததற்கான சுவடுக்கூட இல்லாத அளவிற்கு எவரையும் அழித்துவிடக் கூடிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தான் சிக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டவனுக்குக் கிலிப் படர்ந்தது.

இனி விநாடிகள் கூட அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அந்த இளம் விஞ்ஞானி விஷேஷ் அன்று அறியாமல் போனான்.

அப்படியும் ஒரு கணம் வரும் என்று!!!

************************************************************

நாட்கள் நகர்ந்தன.

இன்றோடு துர்காக் கடத்தப்பட்டு இரு மாதங்கள் கடந்திருந்த நிலையில், பல வகைகளில் தேடியும் அவளைக் கண்டுப்பிடிக்க முடியாததால் ஏறக்குறைய தன்னையே வெறுத்துவிடும் அளவிற்கு வந்திருந்தான் ஷிவ நந்தன்.

காவல்துறையில் எப்பேற்பட்ட பதவி தனது. அதனில் இரும்பாய் அவனுக்குத் துணை நின்ற நண்பர்கள் வட்டாரமும் சிறந்த காவலதிகாரிகளைக் கொண்டது.

அவர்களின் இரவு பகல் பாராத உதவியுடன் தேசம் முழுவதையும் சல்லடையைக் கொண்டு துலாவுவது போல் தேடுதல் வேட்டை நடத்தினாலும், மாயமாய் மறைந்துப் போன அத்தை மகளைக் கண்டுப்பிடிக்க முடியாது ஆங்காரத்தில் இருந்தான் அவன்.

இதில் இன்னமும் அவன் மேல் நம்பிக்கையை இழக்காதவராய் துர்காவின் அன்னை அவனை அடிக்கடி அழைத்து விசாரிக்க, ஒவ்வொரு முறை அவரிடம் பேசும் பொழுதும் மனதிற்குள் நொந்து போனான்.

என்னால் தானே இவ்வளவும்? ஒரு வேளை நான் வருணின் நிச்சயதார்த்தம் அன்று அவனது வீட்டிற்கே சென்று அவனைக் கைது செய்திருக்காவிட்டால், அவனும் என் திருமண மண்டபத்திற்குள் நுழைந்திருக்க மாட்டானோ? துர்காவையும் கடத்தியிருக்க மாட்டானோ?

என்னைப் பழிவாங்க வேறு ஒரு ஆயுதத்தைக் கைகளில் அவன் எடுத்திருந்தாலும் எடுத்திருக்கலாம்.

அப்படி என்றால் நடந்தவை அனைத்திற்குமே நான் தான் காரணம் என்று மிகுந்த மன உளைச்சலிற்கு அவன் உட்பட்டிருந்த நேரம், அழைத்தாள் சிதாரா.

நேரம்: வியாழக்கிழமை மதியம் 1 மணி.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின் அவளது அழைப்பு.

அதுவும் கடைசியாக அவள் பேசிய பொழுது வெகு கோபத்துடன் அவளிடம் பேசியதும், இனி தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கத்தியதும் நியாபகத்திற்கு வந்தது.

இப்பொழுது எதற்கு அழைக்கிறாள்?

வேண்டா வெறுப்பாய் அலைபேசியை உயிர்ப்பித்தவன், "என்ன?" எனவும், அவனது தொனியில் இருந்த வெறுப்பில், ஆவலுடன் அழைத்திருந்தவளின் அவா கலைந்து போனது.

"எனக்கு இது தேவை தான்?"

"எது?"

"ம்ம், இதோ இப்ப எண்ணெயில போட்ட கடுகு மாதிரி பொரிஞ்சிட்டுப் பேசுறீங்களே, இது தேவைதான்னு சொன்னேன்."

"ம்ப்ச். துர்காவைக் கண்டு பிடிச்சிட்டேனான்னு கேட்பதற்கு என்னைக் கூப்பிட்டிருந்தீன்னா, நான் இன்னும் துர்காவைக் கண்டுப்பிடிக்கலை. ஏன், அவ உயிரோட இருக்காளான்னுக் கூட எனக்குத் தெரியலை.. போதுமா?"

"அதான் தெரியுமே?"

"எப்படித் தெரியும்?"

"அதெல்லாம் எனக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்."

"எரிச்சலைக் கிளப்பாத, சொல்லு, எதுக்குக் கூப்பிட்ட?"

இன்னமும் கோபம் கலையாத குரலில் பேசிக் கொண்டிருப்பவனைக் கண்டு ஆற்றாமையாக இருந்தது பெண்ணவளுக்கு.

"உங்களுக்குப் பொறுமையாவே பேச தெரியாதா ஷிவ நந்தன்.."

"ஏய்.. என்ன பேரை சொல்லி கூப்பிடற?"

"சரி.. மிஸ்டர் ஷிவ நந்தன், போதுமா?"

"கடவுளே, என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிற சிதாரா. ப்ளீஸ், எதுக்குக் கூப்பிட்டன்னு சொல்லு."

"ஆரம்பத்திலேயே இப்படி ஒழுங்கா பேசியிருந்தால் இந்நேரம் சொல்லிருப்பேன் இல்ல?"

மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனாய் வழக்கமான ஸ்டையிலில் சட்டையின் காலரை இழுத்துவிட்டு தலைசாய்த்து நிமிர, அவனின் மெலிதான அரவத்தில் கூட அவனது செய்கையை உணர்ந்துக் கொண்டவளாக,

"சரி சரி, டென்ஷன் ஆகாதீங்க. இப்போ தான் ஒரு விஷயம் கண்டுப்பிடிச்சேன். அதான் உடனே உங்கக்கிட்ட சொல்லணும்னு கூப்பிட்டேன்.." என்றாள் படபடவென.

ஆனாலும் அவள் விஷயத்திற்கு வரவில்லை என்பதில் எரிச்சலின் உச்சத்தை அடைந்தவன், "சிதாரா.." என்று அழுத்தி அழைத்ததில் மூச்சுக்கூட விடாது பேசத் துவங்கினாள்.

"ஏற்கனவே நான் சொல்லிருக்கேன் இல்லையா, எங்க அப்பாவுக்கு வருணைப் பற்றி நல்லாத் தெரியும். அதோட அவரை ஃபாலோ பண்றதுக்கும் ஆட்களை ஏற்பாடு செய்து வச்சிருந்தாருன்னு. அது வருணுக்கும் நல்லாத் தெரியும், அதனால் அவர் முன்னர் இருந்ததைவிட ரொம்ப எச்சரிக்கையா இருக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சது. என் ஃப்ரெண்ட்ஸ் சிலரைக் கூப்பிட்டு எனக்கு உதவி செய்யக் கேட்டிருந்தேன். அவங்களும் நான் சொன்னது போல் வருணை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. அப்ப தான் ஒரு இடத்தில் அவர் இருக்காருன்னு எனக்குத் தகவல் வந்துச்சுன்னா, அதே நேரம் வேற ஒரு இடத்திலேயும் அவர் இருக்காருன்னு சொன்னாங்க. ரொம்பக் குழப்பமாகிடுச்சு. ஆக அவரை மாதிரி ஆட்களை அவர் ஏற்பாடு செஞ்சு உங்களை எல்லாம் குழப்பத்தில ஆழ்த்தி இருக்காருன்னு புரிஞ்சது.”

“அது இப்பத்தான் உனக்குத் தெரிஞ்சதா?”

“இல்லை, அப்பவே கண்டுப்பிடிச்சிட்டேன். அதைப்பற்றி உங்களுக்குக் கால் பண்ணி சொல்லலாம்னு நினைச்சா, அதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே, இதுக்கூடத் தெரியாமல் SSP - ஆக இருக்க முடியுமான்னு நீங்க என்னைத் திட்டுவீங்க, அதான் நான் சொல்லலை.”

“அப்புறம் இப்போ எதுக்குக் கூப்பிட்ட?”

“மற்றவங்களைத் தான் வருணால் ஏமாத்த முடியும். நானும் வருணும் சில முறைகள் தான் சந்திச்சு இருந்தாலும் அவருடைய உடல்மொழிகளும், மேனரிசங்களும் எனக்கு அத்துப்படி. எந்தக் கூட்டத்தில் அவர் இருந்தாலும், அவர் மாதிரியே நாலு வருண் ஒன்றா நின்றிருந்தாலும் இது தான் உண்மையான வருணுன்னு என்னால அடையாளம் கண்டுப்பிடிக்க முடியும்..”

“அதான் தெரியுமே..”

மார் தட்டி பெருமையடிப்பது போல் பேசுபவளின் கூற்று ஏனோ ஷிவாவிற்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவனது குரலில் எரிச்சலும் நக்கலும் விரவியிருந்தது.

“எப்படித் தெரியும்?”

“அன்னைக்குக் கல்யாண மண்டபத்தில் அவ்வளவு பேருக்கு மத்தியிலும், முகத்தை மறைக்க மாஸ்க் [mask] போட்டிருந்தாலும் அவன் கண்ணை வச்சே நான் அவனை அடையாளம் கண்டுப்பிடிச்சிட்டேன்னு பெருமையா சொன்னியே.”

“யெஸ். கரெக்ட்.. அதனால் மற்றவர்களை வச்சு அவரை ஃபாலோ பண்றதைவிட ஏன் நானே தனியா இதுல இறங்கக் கூடாதுன்னு முடிவு செஞ்.."

அவள் முடிக்கவில்லை, "வாட்???" என்று அலறினான் மறுமுனையில்.

அவனது சத்தத்தில் செவிப்பறையே கிழிந்துவிடுவது போல் இருக்க, அலைபேசியைச் சற்றே நகர்த்திக் காதை நன்றாகத் தேய்த்துவிட்டவாறே, "ஐயோ! ஏன் இப்படிக் கத்துறீங்க? என் இயர் ட்ரம்மே ஓட்டையாகிடும் போல் இருக்கு.." என்றாள்.

"படிச்சவ தான நீ? அதுவும் அந்த வருணை பத்தி நல்லாத் தெரியும், பிறகு எதுக்கு நீ இதுல நேரடியா இறங்கிற?"

"ஹலோ மிஸ்டர் ஷிவ நந்தன். அந்த வருணுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா எங்க ரெண்டு பேரு வீட்டுலேயும் பேசி நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்துச்சு, நியாபகம் இருக்கா?"

"சிதாரா. அந்தச் சூழ்நிலை வேற.. இது வேற. இப்ப நீ அவன் கண்ணில் சிக்கினால் என்ன ஆகும்னு தெரியுமில்ல?"

"இட்ஸ் ஒகே. பட், வேற வழியில்லையே. சரி, நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்க, பிறகு பேசுங்க."

"இன்னும் வேற இருக்கா?”

“இனிமேல் தான் நிறைய இருக்கு.”

“சரி, சொல்லு.."

அவள் சொல்ல சொல்ல திகைப்பும் வியப்பும் ஒருங்கே இணைய அருகில் இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான் ஷிவ நந்தன்.

“சிதாரா, நீ சொல்றது எல்லாம் உண்மையா?”

“ப்ராமிஸா..”

“எப்படி இது உனக்குத் தெரிஞ்சது?”

“என்னுடைய புத்திசாலித்தனம் மேல உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலை, அப்படித்தானே?”

“இவ்வளவு பெரிய போலீஸ் ஃபோர்ஸ் சேர்ந்தும் கண்டுப்பிடிக்க முடியாததை நீ எப்படிக் கண்டுப்பிடிச்ச?”

“அதான் சொன்னேனே..”

“ப்ளீஸ் சிதாரா.. ஏற்கனவே சொல்லிட்டேன் என் பொறுமையைச் சோதிக்காதன்னு..”

“சரி சொல்லிடுறேன். மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடாதீங்க..”

“ஏய்..”

“சரி சரி.. அதான் சொல்லிடுறேன்னு சொன்னேன் இல்லை. ஆரம்பத்தில் இருந்து வருணைப் பற்றி எங்கப்பா சொன்ன எல்லா இடங்களிலும் தேடிட்டு இருந்தோம் இல்லையா? ஆனால் எனக்கு என்னவோ எங்க அப்பா ஏதோ என்னிடம் மறைக்கிறாருன்னு மட்டும் தோனிட்டே இருந்துச்சு. ஒரு நாள் யாருக்கும் தெரியாம வருணுடைய வீட்டுக்குள்ளேயே ஏறிக் குதிச்சிட்டேன்..”

“சிதாரா..”

அவனின் அதிர்ச்சி அவனது குரலிலேயே தெரிந்தது.

“யெஸ். வருணுடைய செக்யூரிட்டீஸ் எல்லாமே எங்கப்பாவுக்குக் கொஞ்சம் பழக்கம். அதுவும் நான் அவரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு தெரிஞ்சதில் இருந்தே என் மேல் இன்னும் மரியாதை. அதைப் பயன்படுத்தித் தான் வருணுக்கே தெரியாமல் அவர் வீட்டுக்குப் போனேன். அப்பத்தான் ஒரு விஷயம் எனக்கு அகப்பட்டுச்சு.”

“என்னது?”

“வருணுடைய அப்பாவை கடந்த ஒரு மாசமா அவங்க யாருமே பார்க்கலை. அதே போல் வெளியாட்கள் யாருமே வருணுடைய வீட்டுக்குப் போகலை.”

“அது தெரியும்..”

“ஆமா, ஆனால் அங்க வீட்டில் இருப்பது வருணே இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“அது எப்படிச் சாத்தியம்?”

“வருணுக்கு அது சாத்தியம் மிஸ்டர் ஷிவ நந்தன்..”

“ம்ப்ச். நீ அடங்கமாட்ட.. சரி சொல்லு..”

“அதற்குப் பிறகு திரும்பவும் என் அப்பாக்கிட்ட தான் போனேன். அவரைக் குடைஞ்செடுத்ததில் ஒரு விஷயத்தை அவரையும் அறியாது அவர் சொல்லிட்டார். அதாவது ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு இருக்கும் போதுன்னு வச்சிக்கங்களேன். ஒரு முறை வருண் ஒரு இடத்தை வாங்கி அதில் ரிசார்ட் கட்டுறதா முடிவு செஞ்சிருக்கார். எங்க கல்யாணம் ஆனதுக்குப் பிறகு அதுக்கு என் பேரையும் வைக்கிறதா எங்க அப்பாவிடம் சொல்லிருக்கார். ஆனால் எங்க நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடியே அந்த ப்ளானை அவர் ட்ராப் பண்ணிட்டாராம். என்ன காரணும்னு அவர் என் அப்பாவிடமும் சொல்லலை. என் அப்பா அந்த இடத்தைப் பற்றிச் சொன்னதுமே உடனேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. எப்படியோ தேடி அந்த இடத்தைக் கண்டுப்பிடிக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி கண்டும் பிடிச்சேன். ஆனால் அந்த இடம் பல ஏக்கரில் இருந்தது, ஆனால் அங்க எந்த ரிசார்ட்டும் கட்டப்படலை. பட் ஒரே ஒரு வீடு மட்டும் இருந்தது.”

அவளின் கூற்றில் ஏதோ புரிவது போல் இருந்தது ஷிவ நந்தனிற்கு.

பாம்பின் கால் பாம்பு அறியும்!

கபடமான வேலையை ஒருவன் செய்வது மற்றவர்களுக்குப் புரியாமல் போனாலும், அவனைப் போன்ற மற்றொரு கபடதாரிக்குப் புரிந்து விடும் என்ற அர்த்தம் கொள்ளும் இப்பழமொழிக்கு ஏற்ப, ஒருவருக்கும் தெரியாத வருணைப் பற்றிய ஒரு விஷயம் அமைச்சர் முகேஷ் சௌஹானிற்கு மட்டும் தெரிந்திருக்கின்றது.

பல பிரபலங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற மர்மமான வகையில் மறைவாகப் பதுங்கித் தங்கும் இடங்கள் [hideout] இருப்பது புதிதல்ல.

அந்தக்காலத்திலேயே அரசர்களும், அந்தப்புற பெண்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் யுத்தங்கள் மூளும் நேரத்தில் தப்புவதற்காக சுரங்கப்பாதை அமைத்து, அதன் முடிவில் ஒருவரும் அறியாத வகையில் பாதுகாப்பான பதுங்கிடங்களை அமைத்திருந்தது பற்றிக் கேள்விப்பட்டதில்லையா, என்ன?

ஆக, கடந்த சில வாரங்களாகத் வருண் தங்கி இருந்த வீடு அதுவாகத் தான் இருக்க வேண்டும்.

“சிதாரா.. நீ அந்த இடத்துக்குத் தனியா போனியா?”

“ஆமா.”

“வருணுக்கு நீ எங்கப் போனாலும் தெரியுமே..”

“யெஸ். ஆனால் நான் இந்தியாவிலேயே இல்லைங்கிற மாதிரி செட் பண்ணிட்டு தான போனேன்.”

அவளது துணிச்சலும் சாமர்த்தியமும் ஒரு பக்கம் பாராட்டுதலுக்குரியது என்று தோன்றினாலும், ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி அரசியலையும் அதனுடன் கூட்டனி சேர்த்து ஆட்சிப் புரிந்து கொண்டிருக்கும் ஒருவனை, ஒரு இளம் பெண், அதுவும் தன்னந்தனியாக இது போன்ற துப்பறியும் வேலைகளில் ஈடுபட்டவளாய் தொடர்வது எவ்வளவு பெரிய ஆபத்து என்ற திகைப்பையும் ஷிவ நந்தனிற்கு உருவாக்கியது.

“உனக்கு எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்தது?”

“அதை அப்புறமா சொல்றேன் மிஸ்டர் ஷிவ நந்தன், முதலில் நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடுறேன். நீங்க குறுக்கால் பேசாம இருங்க.”

“சத்தியமா உன்னைப் போல ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை.”

“அதான் தெரியுமே. சரி, கேளுங்க. நான் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைக் கண்காணிச்சேன்னு சொன்னேன் இல்லையா? அப்பத்தான் அங்க இருந்து ஹெலிகாப்டர் போறது தெரிஞ்சது. ஆனால் அதில் யார் போறாங்கன்னு எனக்குத் தெளிவாத் தெரியலை. ஸோ, நான் வீட்டுக்கே திரும்பாம அங்கேயே கிடந்தேன். அப்போ நேற்று ஒரு ஹெலிகாப்டர் போச்சு, ஆனால் அது வேற ஹெலிகாப்டர். அது திரும்பவும் இன்னைக்குக் காலையில் தான் வந்துச்சு. ஸோ, எனக்கு என்னவோ அந்த ஹெலிகாப்டரில் போறதும், திரும்ப அந்த வீட்டுகே வரதும் உண்மையான வருணுன்னு தோணுது. அதான் உங்களைக் கூப்பிட்டேன்."

அவள் கூறுவது புரிந்தது.

இக்காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தான் செய்து கொண்டிருக்கும் நிழல்காரியங்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவும் வருணைப் போன்ற ஆட்கள் இதுமாதிரியான திட்டங்களைத் தீட்டுவதும், இருப்பிடங்களை வைத்துக் கொள்வதும் உண்டு தான்.

ஆயினும் தன்னைப் பழிவாங்கவென்று துர்காவைக் கடத்தியவன் இவ்வளவு பெரும் முயற்சிகளையும், அவனது அன்றாட வாழ்வையே மாற்றக்கூடிய திட்டங்களையும் தீட்டியிருப்பான் என்பதை ஷிவ நந்தனால் நம்பவே முடியவில்லை.

அதிலும் அவன் இவ்வாறு செய்திருப்பான் என்பதைத் தனது போலிஸ் மூளையே கண்டறியாது போன நேரத்தில், சிதாரா கண்டுப்பிடித்திருப்பதில் ஆச்சரியம் மிகுந்தது.

ஆனாலும் அவனது உள்ளம் வேறு ஒரு விஷயத்திற்காகத் தவித்தது.

அவனது அமைதி குழப்பத்தைக் கொணர, "என்ன சார் சத்தமே காணோம்." என்றாள்.

"ரெண்டு தடவை ஹெலிகாப்டர் அங்கிருந்து போறதைப் பார்த்தன்னு சொல்றல்ல, ரெண்டுமே நைட் தானா?"

ஏனோ இக்கேள்வியைக் கேட்கும் பொழுது ஷிவ நந்தனின் இதயம் பலமாகத் துடித்ததைச் சிதாராவும் கேட்டாளோ என்னவோ அவளது மனமும் வாடியது.

காரணம் அவனது கேள்வியின் அர்த்தம் ஒரு பெண்ணாக அவளுக்கும் புரிந்தது.

"நான் அவரை ரெண்டு முறைத் தான் அப்படிப் பார்த்தேன் சார். அதற்கு முன் அவர் அது போலப் போயிருக்கலாம், ஐ மீன் நைட் போகாமல் பகலில் கூடப் போயிருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாமல் அவர் துர்காவை வச்சிருக்கிற இடத்திற்குத் தான் போனாருன்னு இன்னமும் நமக்குத் தெரியாது.. அன்ட் ஆல்ஸோ அது உண்மையில் வருண் தானான்னுக் கூட எனக்கு இன்னும் தெரியலையே.."

“அப்புறம் எப்படி இவ்வளவு திட்டமா சொல்ற?”

“You can't connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something—your gut, destiny, life, karma, whatever. Steve Jobs சொன்னது. கேள்விப்பட்டதில்லையா?”

[நீங்கள் எதிர்நோக்கும் புள்ளிகளை இணைக்க முடியாது; பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவற்றை இணைக்க முடியும். எனவே உங்கள் எதிர்காலத்தில் புள்ளிகள் எப்படியாவது இணைக்கப்படும் என்று நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் எதையாவது நம்ப வேண்டும் - உங்கள் உள்ளம், விதி, வாழ்க்கை, கர்மா, எதுவாக இருந்தாலும் - ஸ்டீவ் ஜாப்ஸ்]

அதற்கு மேல் என்ன விதமான விளக்கம் அவனுக்குக் கொடுப்பது என்பது அவளுக்கும் புரியவில்லை.

நெடு மூச்சுவிட்டுத் தன்னைச் சமன் படுத்திக் கொண்டவனாக,

"சரி சிதாரா, இனி நான் பார்த்துக்கிறேன். முதல்ல இந்தத் துப்பறியும் வேலையை நீ நிறுத்து. இது வரை நீ அவன்கிட்ட மாட்டாமல் இருக்கிறதே ரொம்ப அதிசயம்." என்றான் எச்சரிக்கும் தொனியில்.

"இல்ல சார், அவருக்கு நிச்சயம் நான் கண்காணிச்சுட்டு இருக்கிறது தெரியாது."

“எது, வெளிநாட்டிற்குப் போயிட்டதா நீ செட் பண்ணினேன்னு சொன்னியே. அதை நம்பி அவன் உன்னை விட்டுட்டான்னு சொல்ல வர்றியா?”

“அப்படி எல்லாம் இல்லை.”

"பின்ன எப்படி?"

"என்ன சார், சீனியர் சூப்பிரண்டு ஆஃப் போலீஸ் நீங்க. இது கூடத் தெரியாதா?"

"ம்ப்ச், நீ எப்பவுமே இப்படித்தானா?"

"சரி, சரி, திரும்பவும் பொறுமையைப் பறக்க விட்டுடாதீங்க.. ஒரு வேளை அவருக்கு இந்நேரம் தெரிஞ்சிருந்தா அவர் திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்திருக்கவே மாட்டாரே. அதை வச்சு தான் சொன்னேன்."

“அது வருணான்னே தெரியலைன்னு சொன்ன.”

“சார். இப்ப என் பொறுமைப் பறக்கிற மாதிரி இருக்கு சார்.”

கெஞ்சுகிறாளா அல்லது கோபப்படுகின்றாளா என்று தெரியாத தொனியில் அவள் புலம்ப, ஷிவ நந்தனும் சற்றே இறங்கி வந்தான்.

அவள் கூறுவது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.

அவள் தன்னைக் கண்காணிப்பது தெரிந்தே கூட வருண் ஹெலிகாப்டரில் சென்றிருக்கலாம். அல்லது ஒரு வேளை அது வருணாகவே இல்லாதும் இருக்கலாம்.

ஆக எதுவாக இருந்தாலும் துர்காவைக் கண்டுப்பிடிப்பதற்கு ஒரு சிறு நூல் கிடைத்திருக்கின்றது என்பதை உணர்ந்தவனாய் மேலும் சிதாராவிடம் சில விவரங்கள் விசாரித்தவன் அவள் கூறிய இடத்தில் அவளைச் சந்திக்கத் தனது வாகனத்தைச் செலுத்திய அதே வேளை, தான் இந்நாள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் இருந்து முதன் முறையாக வெளியேறி காட்டிற்குள் ஓடிக் கொண்டிருந்தாள் துர்கா.

அவளுக்குப் பின்னால் பல மீட்டர்கள் தொலைவில் அடர்ந்த மரங்களையும் செடிகளையும் கடந்து, புதர்களின் மீது ஏறி இறங்கி சரியான பாதைகளற்ற அந்தக் கானகத்தில், அசுர வேகத்தில் விரைந்து வந்து கொண்டிருந்த ஜீப்பில் அமர்ந்திருந்த வருணின் முகத்தில் ஆங்காரமும் ஆத்திரமும் தெறித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது நேரம்: வெள்ளிக்கிழமை விடியற்காலை, 4 மணி.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..


You can't connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something—your gut, destiny, life, karma, whatever.

-- Steve Jobs

நீங்கள் எதிர்நோக்கும் புள்ளிகளை இணைக்க முடியாது; பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவற்றை இணைக்க முடியும். எனவே உங்கள் எதிர்காலத்தில் புள்ளிகள் எப்படியாவது இணைக்கப்படும் என்று நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் எதையாவது நம்ப வேண்டும் - உங்கள் உள்ளம், விதி, வாழ்க்கை, கர்மா, எதுவாக இருந்தாலும்

- ஸ்டீவ் ஜாப்ஸ்
 
Last edited:
Aryan…
Already Kalani Mirza smelled you… Sahana is behind this… 😑😑😑

Shivu and Sithara 🥰🥰🥰
This pair is very interesting..
Sithara’s bravery will make Shivu to fall for her… 🥰🥰🥰
Finally Shivu is closed to Durga’s hideout…

Omg…!!! Durga escaped 🫣🫣🫣
Enraged Varun… 🫤🫤🫤

Will she run away??? 😢😢😢
 

Vidhushini

New member
துர்காவைப் பத்தின சிறு துப்பு கிடைச்ச நேரத்தில், அவளின் தப்பிக்கும் முயற்சியும், வருணின் ஆக்ரோஷமும் என்ன அனர்த்தங்களை விளைவிக்குமோ?

'ஏற்கனவே தெரிந்த எதிரி, எப்போது வேண்டுமானாலும் எதிரியாய் மாறப்போகும் நண்பன்' - ஆர்ய விக்னேஷ் சாம்ராஜ்ய சரிவின் ஆரூடமோ?

Interesting epi @JB sis🔥
 

Lucky Chittu

New member
Varun Durga va thappikka vitruvaana illai meendum sirai edupaana. Shiva ku sithara mulama vazhi kedaichalum vidai ennavo? Waiting for the next epi mam.
 

saru

Member
Lovely update dear
Aaathadi sivu ke tuff kudukura ha ha
Randu perum nalla pair
Sivu ivalaum un department la serthuvitru

.adeiii aaari seirathu sadarana visayama
Anubavikama eppudi
Varun kandipa kallati viduvanu
Vivesh ku payam varuthu

Adeii druga eduku risk edutha..
Varun kovama varaan
Sivu durga thedi Anga
Kannamoochi aaatam mudiyapoda
Durga mirsha gang kita maata porala
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top