JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 18

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் - 18

நேரம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவுக் கடந்து 1 மணி

"எதுக்கு லேண்ட் பண்ணணும்? கொஞ்சம் உயரமா [higher altitudes] பறந்தா டர்பியுலன்சை அவாய்ட் பண்ணலாமில்லையா?"

கண்களை இன்னும் திறக்காது, படபடவென அடித்துக் கொள்ளும் இதயத்துடன், தனது கையே உடைந்துவிடும் அளவிற்கு இறுக்கிப் பிடித்திருந்த சிதாராவின் பயம் ஷிவாவிற்கு நன்றாகப் புரிந்தது.

"அவாய்ட் பண்ணத்தான் முதலில் முயற்சி பண்ணினார். பட், அவரால் முடியலை. அதான் கீழே பாதுகாப்பா இறக்க முயற்சி பண்றார்."

"இங்க கட்சிரோலி சிட்டியில் அவருக்குத் தெரிஞ்ச ப்ரைவேட் ஏர்போர்ட் இருக்கு, அங்க தான் லேண்ட் பண்ணணும். அங்க இருந்து நாம ஃபாரஸ்ட் ஆஃபிஸர்ஸ் உதவியோட காட்டுக்குள் போகலாமுன்னு பைலட் அங்கிள் சொன்னாரே. ஆனால் இப்பவே இறங்கலாமுன்னு சொன்னால், இங்க ஜெட் தரையிறங்குற அளவுக்கு runway [ஓடுபாதை] எல்லாம் இருக்காதே.."

"இது எமெர்ஜென்ஸி லேண்டிங் சிதாரா.."

அவன் கூறி முடித்ததுமே அதுவரை இறுக்க மூடியிருந்த கண்களைத் திறந்தவள் ஜன்னல் வழியே வெளியே பார்க்க, பார்த்த காட்சி ஏற்கனவே பயந்துப் போயிருந்தவளின் அச்சத்தைப் பன்மடங்காக அதிகரித்தது.

கீழே பெருங்காடு!!

நீண்ட ஊசிகள் அங்குமிங்கும் முளைத்திருப்பது போல் புள்ளி புள்ளியாய் கண்களுக்குத் தெரியும் மரங்களையும், மரங்கள் அல்லாத பகுதிகளைக் கரும்பச்சை நிறப் போர்வையைக் கொண்டு போர்த்தியிருப்பது போல் தோன்றும் புதர்களையும் கண்டவளுக்குச் சில்லிட்டது.

"கீழ ஃபாரஸ்ட் மாதிரி இருக்குது. கட்சிரோலி சிட்டி மாதிரியே தெரியலையே..”

“இல்லை. இது சிட்டி இல்லை. கட்சிரோலி ஃபாரஸ்ட்..”

“ஃபாரஸ்டுல எங்க, எப்படி லேண்ட் பண்ணுவார்?"

“கட்சிரோலி ஃபாரஸ்ட் பல ஸ்கொயர் கிலோ மீட்டர் அளவு பெருசு சிதாரா. எப்படி, எங்க லேண்ட் பண்ணணுங்கிறதை பைலட் பார்த்துக்குவார். உன் சீட் பெல்டை டைட்டன் பண்ணிக்கோ. எதுக்கும் தயாராய் இரு.."

கூறியவனாய் தானும் பெல்டை இறுக்கிய ஷிவா அவளுக்கும் உதவி செய்ய, அடுத்து வந்த நிமிடங்களில் காற்றின் பெரும் கொந்தளிப்பில் சிக்கிய அந்தச் சிறிய விமானம் அங்குமிங்கும் அலைமோதியவாறே தரை இறங்க முயற்சித்தது.

ஆயினும் விமானியின் திறமையும் அனுபவமும் அங்குப் பலனளிக்கவில்லை.

ஏதோ வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று காற்றுக்குள் சிக்கி சுழன்றவாறே தரையைத் தொட முயற்சிப்பது போல் தாறுமாறாக ஆடியது விமானம்.

அடுத்த ஐந்து நிமிடங்களில், அந்தச் சிறிய விமானத்தின் மீது பலத்த காற்று வீசியதால் விமானம் குலுங்க ஆரம்பிக்க, முடிந்தவரை பாதுகாப்பாக அதனைத் தரையிறக்க விமானி முயன்றும், அரக்கன் போல் சுழலும் காற்று அதை அனுமதிக்கவில்லை.

பயத்தில் அலறியவளாகச் சிதாரா வெளியே பார்க்க, மரங்களும் செடிகளும் ஜன்னலின் வழியே அவளை நோக்கி விரைந்து வருவதைப் போல் தோன்றியதில், பேரழிவு நிகழப்போகின்றது என்ற நிதர்சனம் பெண்ணவளுக்குப் புரியத் துவங்கியது.

நடப்பது, நடக்கப் போவது இரண்டையுமே உணர்ந்து கொண்ட ஷிவா சட்டென்று தனது சீட் பெல்டை கழற்றியவன், அவளின் சீட் பெல்டையும் கழட்ட, அதையே உரக்க கத்திக் கூறினார் விமானியும்.

"Unlatch your seat belts and evacuate the jet."

அவரின் கூக்குரலில் விதிர்விதிர்த்துப் போனவளாய், "ஷிவா, ஜெட்டை விட்டு வெளியேறச் சொல்றாரே. எப்படி வெளியேறுவது? எனக்குப் பயமா இருக்கு ஷிவா.." என்றவாறே அலறியவள் அவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்ட நேரம், சொல்லி வைத்தார் போன்று விமானத்தின் ஒரு பக்கச் சுவற்றில் இருந்த ஜன்னல் கதவு பிய்த்துக் கொண்டு போனது.

அது மட்டுமா? அதனில் சிதாராவிற்கு அருகில் இருந்த இருக்கையில் அவள் வைத்திருந்த அவளது கைப்பையும் காற்றின் வேகத்தில் அனாயசமாகப் பறந்து போனது.

இம்மாதிரியான சூழ்நிலையில் அவளுக்கு என்ன ஆறுதல் கூறுவான்?

அவனும் கெட்டியாய் அவளைப் பிடித்துக் கொண்டவனாய் அவளது தலையைத் தனது மார்பில் புதைத்துக் கொள்ள, ஓடு பாதையில்லாத அவ்விடத்தில் தரையிறங்க முடியாது தவித்த அவ்விமானம் சரியாக அடுத்த இரு நிமிடங்களில் சுற்றிலும் நெருப்புப் பொறி பறக்க, ஒரு முறை ஏறக்குறைய தலைகீழாகப் பறப்பது போல் நன்றாக சாய்ந்து பறந்து, பின் மரங்களின் மேலும், மரக்கொப்புகளின் மீதும் மோதியதில் பாகங்கள் உடைந்து சிதறி விழ, பரிதாபமான தோற்றத்துடன் இலை தழைகளால் மூடப்பட்ட தரையைப் படீரென்ற சப்தத்துடன் தொட்டது.

அனைத்தும் சில மணித்துளிகளில் நடந்து முடிந்துவிட்டது.

உருக்குலைந்துக் காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்த விமானத்தின் உருவம் முழுவதுமே மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் இடையிலும் சிக்கியிருக்க, விமானத்திற்குள் இருந்த மூவரின் நிலையும் விநாடிகள் சில சொல்வதற்கில்லாத அளவில் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

விமானத்தை உடைத்து உள் நுழைந்திருக்கும் பெரும் கொம்புகளில் சிக்கியதில் ஏகப்பட்ட அடிகள் உடலில் பட விமானி பரிதாபமாய்க் காணப்பட்டார் என்றால், அலறிக் கொண்டிருக்கும் பெண்ணவளைக் காப்பாற்றும் நோக்கோடு அவளைத் தனக்குள் இருத்தி அவள் மேல் கவிழ்ந்தவாறே, மறு கையால் எங்கும் நகர்ந்துவிடாது இருந்த இருக்கையை இறுக்கிப் பிடித்தவனாய் அமர்ந்திருந்த ஷிவாவின் கரங்களிலும், முதுகிலும் கொப்புகள் கீறியதில் காயங்கள் பட்டு இரத்தம் வழியத் துவங்கியது.

ஏதோ ஒரு அகோரமான கனவு கண்டது போல் இருந்தது மூவருக்குமே.

ஒரு சில கணங்கள் உடம்பில் பட்ட அடியின் வேதனைத் தெரியவில்லை.

ஒருவழியாக நிகழ்வுக்கு வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்க்க, நடந்தது நிஜமா? இல்லை நாம் மரணித்துவிட்டோமா? இப்பொழுது இருப்பது மேலோகத்திலா? என்பது போன்றான உணர்வில் மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் சிதாரா.

"ஆர் யூ ஆல்ரைட்?"

ஷிவாவின் கேள்விக்கு அமர்ந்தவாக்கிலேயே அவனது மார்பில் இருந்து முகத்தை விலக்கியவள் அவனை ஏறிட்டு நோக்க, அப்பொழுது தான் கவனித்தாள், அவனது கரங்களில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருப்பதை.

"ஐயோ! உங்களுக்கு அடிபட்டிருக்கு, இரத்தம் வழியுது.."

தானும் தன் கரங்களைக் குனிந்துப் பார்த்தவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனாய் அவளின் தோள்களைப் பிடித்தவாறே, "உனக்கு ஒண்ணும் அடிப்படலையே?" என்றான்.

தனக்கு அடிபட்டிருக்கிறதா இல்லையா என்ற உணர்வே இல்லாது அமர்ந்திருந்தவள் மெல்ல எழ, அவளைப் பாதுகாப்பு அரண் போல் ஷிவா மறைத்திருந்தாலும் ஆங்காங்கு வெளிப்பட்டிருந்த அவளின் தேகத்திலும் இலேசான கீறல்களும் காயங்களும் பட்டிருந்ததில் சிறிது எரிச்சலும் வலியும் ஏற்பட ஆரம்பித்தது.

“ஷ்ஷ்..” என்று முனகியவளாய் எழுந்து நிற்க அவளே கவனியாததை அப்பொழுது தான் கவனித்தான் ஷிவா.

மரக் கொப்புகளில் சிக்கிய அவளது சுடிதார் தாறுமாறாய் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்ததை.

அவளிடம் எதுவும் கூறாது மெள்ள அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் தோள் வளைவிற்குள் வைத்துக் கொண்டவாறே விமானியின் அறைக்குள் நுழைய, அங்கு அவர்கள் கண்ட காட்சியில் இருவருமே திக்பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார்கள்.

தலையில் இருந்து இரத்தம் வழிய, இருக்கைக்குக் கீழ் கிடந்தார் விமானி.

உடனேயே அவரிடம் ஓடியவன் அவரது ஸ்வாசத்தை ஆராய, உயிர் இருக்கின்றது என்பதை அறிந்ததும் தான் ஷிவாவிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

"உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை. ஆனால் மயங்கி இருக்கார்.."

கூறியவன் அவரை எழுப்பும் முயற்சியில் ஆழ, அக்கம்பக்கத்தை விழிகளால் சுற்றிப் பார்த்தவளுக்கு, காரிருள் சூழ்ந்திருக்கும் அடர்ந்த கானகத்தில் ஆகாயத்தைப் பிளந்து கொண்டு வளர்ந்திருப்பது போல் நிற்கும் மரங்கள் பேய்க் கூட்டம் ஒன்று நிற்பதைப் போன்று பெருந்திகிலை வார்த்தது.

மெல்ல அடி எடுத்து வைத்தவளாய் ஷிவாவை நெருங்கியவள் அவனுடன் சேர்ந்து தானும் அமர, ஷிவாவின் பெரு முயற்சியால் நிமிடங்கள் பல கடந்து கண் விழித்தார் விமானி.

ஆயினும் வழிந்து கொண்டிருக்கும் இரத்தம் அவரது சக்தியை விரைவிலேயே வடித்துவிடும் என்பதை உணர்ந்தவனாய் சுற்றும்முற்றும் பார்த்தான்.

”எமர்ஜென்ஸி மெடிக்கல் கிட் [airplane's emergency medical kit] எங்க இருக்கு சிதாரா?”

பொதுவாக விமானங்களில் அவசர மருத்துவப் பெட்டியை கடைசி வரிசை இருக்கைகளுக்குப் பின்னால் அல்லது முதல் வகுப்பில் மேல் பகுதியில் பெட்டிகள் வைக்கும் ஒரு இடத்தில் [overhead bin] வைத்திருப்பார்கள்.

ஆனால் உருக்குலைந்துக் கிடக்கும் இந்தச் சிறிய விமானத்தில் அதை எங்குப் போய்த் தேடுவது என்று சற்று யோசித்தவன் அவருக்கு ஒத்தாசைகள் புரிந்தவாறே முதலுதவி பெட்டி எங்கு இருக்கின்றது என்று வினவ, திருதிருவென்று விழித்தவளைக் கண்டு அவனுக்கும் பச்சாதாபமாகிப் போனது.

“சரி, இவரைப் பார்த்துக்க..”

கூறியவனாய் சிதறிக் கிடக்கும் விமானத்தின் பாகங்களுக்கு இடையில் தேடியவன் ஒருவழியாய் மருத்துவப் பெட்டியைக் கண்டுப்பிடித்தவனாய் அவர் தலைக்காயத்திற்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தான்.

ஓரளவிற்கு வழிந்து கொண்டிருக்கும் இரத்தமும் கட்டுக்குள் வர, சூழ்நிலையின் விகாரத்தைப் புரிந்துக் கொண்டவராய் விமானியும் தெம்பெல்லாம் திரட்டி எழ, அவருக்கு கீழ் அவரது அலைபேசி நொறுங்கிக் கிடப்பதை கண்ட ஷிவாவின் முகம் கலக்கத்தைச் சுமந்தது.

ஏனெனில் விமானம் ஒரு முறை அநியாயத்திற்குச் சாய்ந்து பறந்து பின் நிமிர்ந்த வேளையில் அவனது அலைபேசியும் அவனது பாக்கெட்டில் இருந்து விழுந்ததை அவன் கவனித்து இருந்தான்.

விமானம் தரையைத் தொட்டு மெள்ள தன் அதிர்வை நிறுத்தியதும் அவனது கண்கள் அலைபேசியைத் தான் தேடியது.

ஆனால் விமானம் என்ற ஒரு பொருள் இருப்பது போன்றே தெரியாதளவிற்கு மரங்களுக்குள் சிக்கி சிதைந்து போய் இருக்கும் அந்தச் சிறிய ஜெட்டிற்குள் எங்கு அவனது அலைபேசியைத் தேட முடியும்?

இதனில் சிதாராவின் கைப்பையும் அலைபேசியுடன் விமானத்தின் உடைந்த கதவு வழியாகப் பறந்து, காற்றின் வேகத்தில் பல மைல்களுக்கு அப்பால் போய் விழுந்திருந்ததே.

ஆக, தங்களுக்கு ஆபத்து, உதவ வாருங்கள் என்று ஒரு ஜீவனையும் அழைக்க இயலாத இக்கட்டான நிலை.

அணிந்திருந்த சட்டையின் காலரை இழுத்துவிட்டவனாய் தலையைச் சாய்த்தவாறே "வூஃப்.." என்றவனாய் விமானத்தை விட்டு கீழே குதித்த கணம், தாங்கள் சிக்கியிருப்பது எத்தகைய காடு என்பது அந்த ஆண்மகனுக்கும் தெள்ளெனப் புரிந்தது.

கட்சிரோலி கானகத்தைப் பற்றிப் படித்திருக்கின்றான்.

ஆனால் அதையே நேராக, அதுவும் இம்மாதிரியான சூழ்நிலையில், நள்ளிரவில் பார்ப்பதற்குக் கடும் கொடூரமாக இருந்தது.

எப்படியாவது இங்கு இருந்து சென்றுவிடு என்று புத்தி உரைக்க, விமானத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் சிதாரா இறங்குவதற்குக் கைகளை நீட்டினான்.

அவனது கரங்களுக்குள் வாகாகப் புகுந்துக் கொண்டவளின் இடையைப் பற்றியவன் அவளைக் கீழே இறக்க, அவர்களைத் தொடர்ந்து மெள்ள இறங்கினார் விமானியும்.

இறங்கியவரின் கண்கள் பதிந்திருந்த இடத்தினைப் பார்த்த அனைவரது உள்ளமும் மீண்டும் கடும் அதிர்ச்சியில் மூழ்கியது.

"Oh my God"

இரகசியமான குரலில் விமானிக் கூற, அவரின் பார்வை நிலைத்திருக்கும் இடத்தை நோக்கித் திரும்பிய ஷிவா அதிர்ந்தான் என்றால், அவனை வெகு அருகில் நெருங்கி நின்றிருந்த சிதாராவிற்கு அக்காட்சியைக் கண்டதும் உயிர் மீண்டும் மேலோகத்தினை நோக்கி பறந்தது போல் இருந்தது.

அடர்ந்த புதர்களுக்கு அருகில் செடிகளுக்கு இடையில், கீழே ஒரு மனித உருவம், சிதைந்து சின்னாப்பின்னமான நிலையில் கிடந்தது.

"ஐயோ!"

வீறிட்டு அலறியவளை இழுத்து தனக்குள் புதைத்துக் கொண்ட ஷிவா அவளின் முகத்தைத் தன் நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டான்.

"ஏதோ மிருகம் அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கு.."

அவனது கூற்றுக்கு, "யெஸ், அப்படித்தான் இருக்கு ஷிவா.." என்று விமானியும் பதிலுரைக்க, மெல்ல குனிந்துப் பார்த்தவனுக்குப் பெண்ணவளின் தேகத்தின் உதறல் வேதனையைத் தந்தது.

"ஒரு நிமிஷம் இரு சிதாரா.."

கூறியவனாய் இன்னமும் மெல்லிய தேகம் நடுங்க தனக்குள் அழுந்தி புதைந்து விசும்பிக் கொண்டிருக்கும் சிதாராவை சற்று விலக்க, அவள் மறுத்து மென்மேலும் அவனது மார்பு வழியாக அவனது உடலுக்குள்ளேயே நுழைந்துவிடுவது போல் தன்னை அழுத்திக் கொண்டாள்.

சட்டென விமானியை நோக்கியவன் அவரைத் தனக்கு அருகில் வருமாறு தலையசைத்து அழைக்க, அவர் நெருங்கியதும் அவளை நிதானமாகத் தன்னிடம் இருந்து பிரித்தெடுத்து அவரிடம் கொடுத்தவன் சில அடிகள் தொலைவில் கீழே கிடந்த அந்தச் சடலத்தை நெருங்கினான்.

மனிதனா இல்லையா என்று தெரியாதளவிற்கு ஏறக்குறைய பிண்டங்களைப் போல் உருக்குலைந்துக் கிடந்த அச்சடலத்தின் அருகில் நின்றவன் ஒரு முறை இருவரையும் திரும்பிப் பார்த்துவிட்டு, ஒருகாலை மடித்துக் குத்துகாலிட்டு அமர்ந்தான்.

அவனின் செய்கைகளை விமானியின் கை வளைவிற்குள் அடங்கியிருந்த சிதாரா கண்களைத் திரை போல் மறைத்திருக்கும் கண்ணீரைத் துடைத்தவளாய்ப் பார்த்திருக்க, அடுத்து ஷிவா கூறிய வார்த்தைகளில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"ஏதோ மிருகம் அடிச்சுப் போட்ட மாதிரி தான் தெரியுது. ஆனால் ரொம்ப நேரத்துக்கு முன்னாடி நடந்திருக்கிற மாதிரி தெரியலை, இன்னும் இரத்தம் காயலை."

அப்படி என்றால் அந்தக் கொடிய மிருகம் இங்கு அருகில் தான் எங்கோ இருக்கின்றது!!

அநியாயத்திற்கு உடல் நடுங்க, விமானியை இறுக்கப் பற்றிக் கொண்டவள், "அங்கிள், எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.." என்றாள்.

அழுகையில் குரல் தழுதழுத்தது!

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு மேல் அவர்களின் ஆஸ்தான விமானியாய் அவர் பணி புரிந்து வருகின்றார்.

பத்து வயதில் அவளைச் சந்தித்திருந்தவருக்கு எப்பொழுதுமே அவள் சிறு குழந்தை தான்.

"ஷிவா, இங்க ரொம்ப நேரம் இருக்கிறது ஆபத்து. எப்படியாவது இங்க இருந்து நாம் வெளியேறணும்."

ஒரு வேளை மிருகம் தங்களுக்கு அருகில் பதுங்கி இருந்தால் என்ற அச்சத்தில் பல திக்குகளையும் பார்த்தவாறே அவர் கூற, அவரை ஆமோதிப்பது போல் தலையசைத்து மெள்ள எழுந்தவனுக்குள் தற்பொழுது தோன்றிய கேள்வி, நாம் கட்சிரோலி கானகத்தின் எந்தப் பகுதியில் சிக்கி இருக்கோம் என்பது தான்.

குனிந்து தன் மணிக்கட்டைப் பார்க்க, அந்த இரவிலும் [Nite Alpha Watch] நேரத்தை அழகாய் காட்டிய கடிகாரத்தின் முட்கள் மணி ஒன்று முப்பது என்று காட்டியது.

"நாம் கிளம்பினப்போ கிட்டத்தட்ட மணி பதினொன்னு. இப்போ மணி ஒன்றரை. அப்படின்னா நாம் கட்சிரோலி காட்டின் எந்தப் பகுதியில் இருக்கோம்?”

“சரியா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வந்திருந்தால் கணிக்க முடியும் ஷிவா. அதுவும் இல்லாமல் ஃபாரஸ்டைக் கடந்து தான் நாம் இறங்க வேண்டிய சைட் இருக்கு. பட், டர்பியுளன்ஸில் சிக்கியதில் ஜெட் கொஞ்சம் திசைமாறி இருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் கண்டிப்பா ஃபாரஸ்ட் ஆரம்பிச்ச இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி தான் ஜெட் விழுந்துச்சு.”

“அப்படின்னா இப்போ எந்தப் பக்கம் போறதுன்னு தெரியலையே.”

"யெஸ் ஷிவா. ஆனால் இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் எல்லா இடமும் கொஞ்ச நாளா அதிகளவில் நடமாடிகிட்டு இருக்குன்னு கேள்விப்பட்டோமே. இந்தச் சூழ்நிலையில் நாம இப்படி நிற்கிறதும் ரொம்ப ஆபத்து."

"அங்கிள், ஜெட் ரொம்பச் சிதைஞ்சிருக்கா? அதுக்குள்ள போய் உட்கார்ந்துக்கலாமா?'

அக்கணம் வரை வாய்த் திறக்காது பேயறைந்தது போல் நின்றிந்தவள் மெல்லிய குரலில் வினவ, அவளின் சிறு பிள்ளைத்தனமான கேள்வியில் அவள் மேல் இரக்கம் தான் பிறந்தது ஆடவர்கள் இருவருக்குமே.

"ரொம்பச் சிதைஞ்சிருக்கு சித்து. அதுக்குள்ள பாதுகாப்பாக உட்கார்ந்துக்கிற மாதிரியான பகுதின்னு எதுவுமே இல்லை."

"அப்படின்னா இங்க இருந்து எப்படி அங்கிள் போறது?"

அதே கேள்வித்தானே இரு ஆண்களுக்கும்.

ஆழ இழுத்து மூச்சினைவிட்ட ஷிவா,

"வேற வழியில்லை சிதாரா. காட்டோட எல்லை எங்க இருக்குன்னு தேடித்தான் போகணும்." என்றான்.

"இப்படியே நடந்தா?"

"ஆமா.."

"ஐயோ! மிருகங்கள் ஏதாவது வந்ததுன்னா?"

"சேன்ஸஸ் இருக்கு, ஆனால் வேற வழி இல்லை."

"இங்கேயே எங்காவது மறைஞ்சிருந்துட்டு, கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் போகலாமா?"

மீண்டும் அதே சின்னப்பெண் போன்ற குழந்தைத்தனமான கேள்வி.

இதில் பெரிய டிடெக்டிவ் போன்று கடந்த ஒரு மாதமாக வருணைக் கண்காணிக்கும் துப்பறிவாளர் பணி வேறு. ஆனால் கேள்வியைப் பார்?

வழக்கமான நேரம் என்றால் கேலியாக ஏதாவது பதிலைக் கூறியிருப்பான். ஆனால் தற்பொழுதைய சூழ்நிலையே வேறு.

ஆண்களுக்கே அதிர்ச்சியளிக்கக் கூடிய கோர அசம்பாவிதங்களுக்குள் சிக்கியிருப்பவள்.

பெரும் விமான விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்து நடுக்காட்டிற்குள் மாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இதோ கண்களுக்கு எதிரே கொடிய வனவிலங்கினால் கொல்லப்பட்டுக் கிடக்கும், ஆணா பெண்ணா என்று கூடப் பிரித்தரிய முடியாதளவிற்கான மனித உடல் வேறு.

இச்சமயத்தில் அவளது கேள்வியும் நியாயமாகவே படவே,

"இங்க மறைஞ்சு இருக்கிறதுக்கு எங்க சிதாரா இடம் இருக்கு? இங்க இருந்து கிளம்பறது தான் நல்லது." என்றான் பொறுமையுடன்.

"எப்படிப் போறது இந்த இருட்டுக்கு..?”

அவளதுக் கேள்வி முடிவதற்குள் அவனது வலதுக் கையில் அணிந்திருந்த கருப்பு நிற ப்ரேஸ்லெட்டில் பதிந்திருக்கும் விளக்கு ஒளியைப் உயிர்ப்பிக்கவும், சட்டென பேச்சை நிறுத்தினாள்.

"இதில் வர்ற கொஞ்சம் வெளிச்சத்தை வச்சு ஏதாவது பாதைத் தெரியுதான்னு பார்த்துட்டே போகணும். வா.."

அவளது கையைப் பற்றியவன் இதற்கு மேல் இங்கு நின்று கொண்டு பேசுவது அறிவார்ந்த செயலல்ல என்பது போல் நடக்கத் துவங்க, ஷிவாவை உரசியவாறே நடந்தவளின் கண்கள் மட்டும் நான்குபுறமும் சுற்றிக் கொண்டே இருந்தது.

"அதான் நாங்க பார்த்துட்டே வரோம் இல்ல. நீயும் ஏன் எல்லாப் பக்கமும் பார்த்துட்டே வர? முன்னாடி பார்த்து வா. கிழே விழுந்துடாத."

அன்பாகக் கூறினானா அல்லது அதட்டினானா என்றே தெரியாதளவிற்கான தோரணையில் கூறவும், பெண்ணவளுக்கும் வழக்கம் போல் கோபம் எட்டிப் பார்க்கச் செய்தது.

வெடுக்கென்று அவனைவிட்டு நகர்ந்தவள் விமானிக்கு அருகில் சென்று நடக்க, ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு ஷிவா தன் நடையைத் தொடர, விநாடிகள் நிமிடங்களாகக் கடந்ததே ஒழிய கானகத்தின் எல்லையை மட்டும் அவர்கள் கண்டு பிடித்தபாடில்லை.

பிறப்பில் இருந்தே துணிவிற்குப் பெயர்போன ஷிவா காவல்துறையில் சேர்ந்த அன்றில் இருந்து எத்தனையோ கொலை வழக்குகள், பெரும் புள்ளிகளின் பயங்கிர மிரட்டல்கள், மிர்சா சகோதரர்கள் போன்ற 'டான்' களின் அச்சுறுத்துதல்கள் என்று பழக்கப்பட்டவன்.

ஆயினும் ஆனானப்பட்ட ஷிவாவின் உள்ளமே சற்றுக் கலக்கத்தில் தான் இத்தருணம் ஆழந்திருந்தது என்று சொல்லலாம்.

காரணம் தான் மட்டுமல்ல, தன்னுடன் விமானியும், பெண் ஒருத்தியும் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பும் இப்பொழுது அவன் கையில் உள்ளதே.

நேரம் செல்ல செல்ல சந்திரனின் ஒளியும் மரங்களுக்கு இடையில் ஆங்காங்கு பளீரென்று புக ஆரம்பிக்க, அதன் உதவியைக் கொண்டு வேகமாக நடந்தால் விரைவில் வெளியேறிவிடலாம் என்று எண்ணிய ஷிவா அதனைத் தெரிவிக்க விமானியை நோக்கித் திரும்பியவன், அப்பொழுது தான் நன்றாக கவனித்தான்.

தனக்கும் விமானிக்கும் அடுத்து நடந்து வந்து கொண்டிருந்த சிதாராவின் ஆடை அலங்கோலமாகக் கிழிந்துத் தொங்கிக் கொண்டிருப்பதை.

ஏற்கனவே அதனை அவன் விமானத்திற்குள்ளேயே பார்த்து இருந்தாலும் இப்பொழுது சந்திரனின் வெளிச்சத்தில் அப்பட்டமாய் அவளது மேனி கிழிந்த துணிகளுக்கு இடையில் வெளிப்பட்டிருந்ததில் திகைத்துப் போனான்.

ஆயினும் அதனை வெளியில் சொல்லாது எதேச்சையாக அவளுக்கு அருகில் சென்று நடப்பது போல் நடந்தவன், அவளின் கரம் பற்றித் தனக்கு அருகில் இழுத்துக் கொண்டான்.

அவனின் இந்தத் திடீர் செய்கையில் மேலும் அவனை ஒண்டிக் கொண்டவளாக, "ஏதாவது மிருகம் வந்துடுச்சா?" என்று அரண்டு போய்க் கேட்க, இல்லை என்பது போல் தலையசைத்தான்.

பிறகு ஏன் இப்படி இழுத்தான் என்பது போல் அவனைப் பார்த்தவள் அவனுடன் இணைந்து நடக்க, சற்றுத் தூரம் சென்றவுடன் விமானி கவனிக்காத வகையில் அவளின் முகம் நோக்கி இலேசாகக் குனிந்தான்.

"சிதாரா.."

"ம்ம்ம்." என்றவளாய் அவனை நிமிர்ந்துப் பார்க்க, ஒரு முறை பார்வையை மட்டும் உயர்த்தி விமானியைப் பார்த்தவன் அவர் தங்களைக் கவனிக்காது தீவிரமாக மிருகங்கள் எதுவும் வருகின்றதா என்ற நோக்குடன் சுற்றமும் கண்காணித்துக் கொண்டு வருவதைக் குறித்துக் கொண்டு, அவளது செவிகளை நோக்கி மேலும் குனிந்தான்.

"என்னுடைய ஷர்ட்டும் கிழிஞ்சுத்தான் இருக்கு, பட் இப்போதைக்கு உனக்கு அது போதும். ஒகே-வா?"

"எதுக்கு?"

"விளக்கமா சொன்னாத்தான் புரியுமா?"

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே எனக்குப் புரியலை.. இங்க அப்படி ஒண்ணும் குளிரலையே.."

”சத்தியமா சொல்றேன், உன்னைப் போல ஒருத்தியை நான் பார்த்ததே இல்லைடி.”

“அதான் தெரியுமே, ஆனால் இப்ப ஏன்?”

"ஏன்டி.. குளிருச்சுன்னா மட்டும் தான் ட்ரெஸுக்கு மேல இன்னொரு ஷர்ட் போடுவாங்களா?"

"பிறகு எதுக்குக் கேட்குறீங்க? உங்க ஷர்ட் எனக்கு எதுக்கு? நான் ப்ளேனிலேயே பார்த்தேன், அதுவும் கிழிஞ்சு பரிதாபமா தொங்கிட்டு தான் இருந்துச்சு. அந்த ஷர்ட்டை வச்சு நான் என்ன செய்யப் போறேன்?"

அவன் வெகு இரகசியமாகத் தானே கேட்டான், ஆனால் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் நீண்ட விளக்கத்தைக் கொடுத்து விமானிக்கும் ஷிவாவின் எண்ணத்தைத் தெளிவாய் விளக்கிவிட்டாள் பேதை.

அவர்களை ஒரு முறைத் திரும்பி பார்த்த விமானி சிறிது முறுவலித்துவிட்டு வேறு பக்கம் பார்க்க ஆரம்பிக்க, "ம்ப்ச்.. உன்னைக் கொஞ்சம் குனிஞ்சிப்பாருடி.." என்றான் சலிப்புடன் பற்களைக் கடித்துக் கொண்டு.

என்ன கூறுகின்றான் என்பது போல் புருவங்களைச் சுருக்கியவள் குனிந்துப் பார்க்க, பெண்ணவளின் தேகம் முழுவதும் வெட்கத்தால் சுருண்டு போனது.

"ஐயோ!"

நடப்பதை நிறுத்திவிட்டு கத்தியவளாக இரு கரங்களையும் கொண்டு மார்புக்கு குறுக்கால் கட்டிக் கொண்டு நிற்க, "ம்ம், இப்போ கத்து.. சொல்லு என் ஷர்ட் வேணுமா, வேண்டாமா?" என்றான் வேண்டுமென்றே நக்கலாக.

தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்த்தவாறே மௌனமாக நிற்பவளுக்கு முன் நின்றவன் தனது சட்டையைக் கழட்டி அவளிடம் கொடுக்க, ஏகப்பட்ட இடங்களில் கிழிந்துத் தொங்கும் அந்தச் சட்டையை வைத்து என்ன செய்வதென்று குழம்பித் தான் போனாள்.

ஆயினும் வேறு வழியில்லை.

அதனை வாங்கியவள் அணிவதற்குத் தகுதியில்லாத அளவிற்குக் கிழிந்து இருக்கும் சட்டையை மார்பில் போர்த்திக்கொள்ள, அவளின் எண்ணம் புரிந்தவனாய்,

"வேற வழியில்லை, நாம் ஏதாவது ஊர் பக்கம் போய்ச் சேரும் வரைக்கும் நீ இதை வச்சு தான் உன் மானத்தைக் காப்பாத்திக்கணும்..” என்றவன் அவள் தன்னை மருண்டு விழித்துப் பார்ப்பதைக் கண்டு, “ஐ மீன் போர்த்திக்கணும்..வா.." என்றவாறே நடக்கத் துவங்கினான்.

அவன் கூறியும் அவள் அவனைப் பின் தொடரவில்லை.

இவ்வளவு நேரம் இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன். விபத்து நடந்தது தான், ஆனால் ஆடை இப்படிக் கிழிந்திருப்பது தெரியாதளவிற்கா இவனுடன் இணைந்து நடந்து வந்திருக்கின்றேன்.

நாணமும் கூச்சமும் மேனியை கூச செய்ய, தலை குனிந்து நின்றிருப்பவளைக் கண்டு திரும்பிப் பார்த்தவனாய் மீண்டும் அவளின் அருகில் வந்தவன், "இதுக்காக இப்படி நின்னுட்டே இருக்கப் போறியா?" என்றான்.

மீண்டும் அதே அதட்டும் அதிகாரத் தொனி.

இவனுக்கு அன்பாகவே பேசத் தெரியாதா என்பது போல் அவனை ஏறிட்டு நோக்க, அவமானத்தில் முகம் சிவக்க, விழவா வேண்டாவா என்பது போல் நீர் மணிகள் விழிகளில் ததும்ப நின்றவளைப் பார்த்தவன் தானும் சற்று இறங்கி வந்தான்.

"ஹேய், இப்போ எதுக்கு இந்த அழுகை?"

ஆனால் அவளிடம் அதற்கும் பதிலில்லை.

அவளைத் தன் தோள் வளைவிற்குள் கொணர்ந்தவன்,

"சிதாரா, ப்ளேன் க்ரேஷ் ஆனதில் இருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை நாம் இருட்டுக்குள்ள தான் இருந்தோம். இப்போ நிலா வெளிச்சத்தில் தான் தெரிஞ்சது, அதான் சொன்னேன். உடனே என் ஷர்ட்டையும் மேல போர்த்திக்கிட்டல்ல. பிறகு ஏன் இந்தளவுக்கு வருத்தப்படுற.. வா.." என்றான் சற்று தனிவான குரலில்.

"ஒரு பொண்ணுக்கு அவ ட்ரெஸ் கிழிஞ்சிருக்குன்னு தெரியறதுக்கு வெளிச்சம் வேணுமா? அந்த உணர்வுக் கூட இல்லாமல் இவ்வளவு நேரம் இருந்திருக்கேன், நான் என்ன பொண்ணு? ஏற்கனவே என்னைக் கெட்டப் பொண்ணுங்கிற ரேஞ்சுக்கு நீங்கள் கிண்டல் பண்ணுவீங்க. இப்ப அதை ப்ரூவ் பண்ற மாதிரியில்ல நான் நிற்கிறேன்."

குரல் தழுதழுக்க, தன்னைத்தானே குத்தலாகக் கேட்டுக் கொண்டவளை மேலும் தனக்குள் அழுத்திக் கொண்டவன்,

"நாம இருக்கிற சூழ்நிலை அப்படி.. நீயாவது இந்தளவுக்கு ஷாக்கில் இருந்து சீக்கிரம் வெளி வந்திருக்க. அதுவே பெருசு. இதுவே துர்காவா இருந்தால் ப்ளேன் க்ரேஷ் ஆனதுலேயே மயக்கம் போட்டு விழுந்திருப்பா, இன்னும் எழுந்திருச்சிருக்கக் கூட மாட்டாள்." என்றான் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக.

‘துர்கா’ என்ற பெயரை விளிக்கும் பொழுது ஷிவாவின் இதயத்திலும் சுருக்கென்று தைத்தது தான்.. ஆயினும் சின்னவளின் முகம் தெளியாததைப் போல் இருக்க, நடந்தவாறே அவளின் செவிகளின் புறம் சாய்ந்து,

"உன் ட்ரெஸ் கிழிஞ்சிடுச்சுன்னு நீ இவ்வளவு வருத்தப்படுற, ஆனால் உன் பைலட் அங்கிளோட ட்ரெஸ்ஸைப் பாரு. அதைப் போட்டிருக்கதுக்குப் பதில் அவர் அதைக் கழட்டி எரிஞ்சிடலாம்.." என்றான்.

முதல் முறை அவன் நகைச்சுவையாகப் பேசினாலும், சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்கவே அவன் அவ்வாறு பேசுகின்றான் என்பது புரிந்தாலும், ஏனோ முறுவலிக்கக் கூட அவளால் இயலவில்லை.

நெடுமூச்சுவிட்டவளாக இத்தோற்றத்தில் அவனுடன் நெருங்கி நடக்க மனம் இடம் கொடுக்காது கூச்சத்துடன் அவனைவிட்டு சற்று விலகி நடக்க, அவளின் உள்ளம் புரிந்து தானும் இசைந்தவன் அமைதியாகச் செல்ல, மணித்துளிகள் சில கடந்து திடுமென மரங்களின் மீது அவ்விருளுக்குள் கலந்து மறைந்திருந்த பறவைகள் படபடத்து கலைய ஆரம்பித்ததில் மூவருக்குமே திக்கென்று இருந்தது.

ஒருவேளை நமது அரவத்தில் தான் அவ்வாறு சலசலக்கின்றனவோ என்று எண்ணிய ஷிவாவிற்கு, அடுத்த நிமிடம் அவை ஒரே நேரத்தில் விருட்டென்று பறக்கத் துவங்கியதில் பெரும் அபாயம் ஒன்று தங்களின் வெகு அருகில் இருக்கின்றது என்பது புரிந்தது.

தன்னைவிட்டு சில அடிகள் பின்தங்கி நடந்து வந்து கொண்டிருந்த சிதாராவைத் திரும்பிப் பார்த்தவன் தன் நடையை நிறுத்திக் கொள்ள, அவனின் செய்கையில் அவளுக்கும் தங்களின் பயங்கற நிலைப் புரிந்தது.

கண்கள் அகல விரிய அவனைப் பார்க்க, கூரிய பார்வையால் அனைத்துப் பக்கங்களையும் அலசியவன் அவளை நோக்கி கையை நீட்ட, நொடி நேரம் கூடத் தாமதிக்காது ஓடி வந்து அவனுக்குள் புகுந்துக் கொண்டாள்.

அதற்குள் விமானியும் அவர்களை நெருங்கி வந்து நின்றவர்,

"மிருகம் ஏதோ அருகில் இருக்கிற மாதிரி தெரியுது ஷிவா. அதான் இப்படிப் பறவைகள் எல்லாம் பற.." என்றவரை முடிக்கவிடவில்லை ஷிவா.

"ஷ்ஷ்ஷ்.." என்றவன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டவனாய் தீட்சண்யமான கண்களுடன் ஓர் இடத்தில் பார்க்க, ஒரு நிமிடம் ஷிவாவின் இதயமே தன் துடிப்பை நிறுத்தியது போன்று இருந்தது.

காட்டு ஓநாய்.. ஒன்றல்ல, பல.

அதிலும் ஒநாய்களின் வேட்டையாடும் திறனையும், கூட்டமாக வேட்டையாடும் அதன் தந்திரங்களையும் நன்றாக அறிந்திருந்த ஷிவாவின் மூளையில், காயங்கள் பட்டு தமக்கு அருகில் நின்றிருக்கும் விமானியையும், தங்களுக்குள் பலம் குறைந்தவளான சிதாரவையும் எவ்வாறு இந்த ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றுவது என்பதற்கான சிந்தனைகள் சட்டென அலைபாயத் துவங்கியது.

கூட்டமாகவே வாழும் பழக்கத்தைக் கொண்ட ஊனுண்ணி வகையைச் சார்ந்த ஓநாய்கள் வேட்டையாடும் முறையில் ஒரு நேர்த்தியும் தந்திரமும் இருக்கும்.

எப்போதும் 'U' வடிவ முறையில் கூட்டமாக வேட்டையாடும் ஓநாய்கள், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றன.

ஒருமுறை குறி வைத்து விட்டால் சிங்கத்தின் பார்வையில் மட்டுமல்ல, ஓநாயின் பார்வையில் இருந்தும் தப்பிக்கவே முடியாது என்பது நாம் அறிந்திருக்கும் விஷயம்.

போகும் பாதையறியாது, ஆங்காங்கு இலைதழைகளுக்கு ஊடாகத் தெரியும் நிலவு வெளிச்சத்திலும், அவனது கையில் உள்ள ப்ரேஸ்லெட்டில் எரியும் சிறிய ஒளியின் உதவியாலும் சிரமப்பட்டுத் தான் அவர்களே நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதில் இவ்வாறு திடீரெனக் கூட்டமாக எதிர்பட்டிருக்கும் காட்டு ஓநாய்களிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது??

மூளை சடசடவெனத் திட்டமிட, மிக மெதுவான குரலில்,

"Pilot, wolves instinctively attack the weakest of the pack. அதனால் நீங்க சிதாராவிற்குப் பின்னாடிப் போய் நில்லுங்க. நான் உங்களுக்கு முன்னால் நிற்கிறேன். ஏன்னா இவ தான் இப்போதைக்கு இந்த ஓநாய்களைப் பொறுத்தவரை ரொம்பப் பலவீனமானவ." என்ற வேளையில் திக் திக் என்று சிதாராவின் மனம் பதைபதைக்கத் துவங்கியது.

ஒரே நாளில் எத்தனை எத்தனை விபரீத சம்பவங்கள்!

மெள்ள அடியெடுத்து வைத்தவராக விமானி சிதாராவின் பின்புறம் சென்று பாதுகாப்பாக நின்று கொள்ள, ஏறக்குறைய அவர்கள் இருவரையும் மறைக்கும்படியாக அரணாக நின்று கொண்டான் ஷிவா.

"இப்போ என்ன செய்யறது ஷிவா? நாம் ஓடினால் தான் இவை நம்ம விரட்டும்."

"யெஸ் பைலட். அதுவும் இந்த இருட்டுக்குள்ள நம்மால் அதுங்களைவிட வேகமாகவும் ஓட முடியாது." என்றவன், சற்றே பின்னால் தலைசாய்த்து, "சிதாரா, தலையைத் தாழ்த்தி கொஞ்சம் குனிந்து நிற்கிற மாதிரி நில்லு.." என்றான் கிசுகிசுப்பாக.

எதற்கு என்று தோன்றினாலும் காவல்துறையில் மிகப்பெரிய பதவி வகிப்பவன், காரணமின்றி எதுவும் கூற மாட்டான் என்று நினைத்தவளாய் தலையைக் கவிழ்த்தவாறே நின்றாள்.

"பைலட், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பின்னால் நடங்க. ஜாக்கிரதை, பின்னால் என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாது, எதிலும் தடுக்கி கீழ விழுந்துடாம எச்சரிக்கையுடன் நடங்க. சிதாரா, நீயும் தான்."

அவனது கட்டளைக்கு அடிபணிவது போல் அடி மேல் அடி எடுத்து வைத்து இருவருமே நடக்க, அவர்களுடன் இணைந்து ஷிவா நடக்கவும், அதுவரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஓநாய் ஒன்றின், ஆரஞ்சு பச்சை மற்றும் ஆம்பர் நிறம் கொண்ட கண்களில் பளபளப்பு ஏறியது.

அவர்களின் அசைவில் மெள்ள அடியெடுத்து வைத்த அந்த ஓநாய் அவர்களை நோக்கி நடந்து வர, சில்வண்டுகளின் இரைச்சலைத் தவிர வேறு எந்த ஒரு ஓசையும் கேட்காத அந்தக் கானகத்தின் மயான தோற்றத்தில், அவ்விரவு நேரத்திலும் பளபளக்கும் அதன் கண்கள் பெரும் திகிலை சிதாராவிற்குக் கொணர்ந்தது.

தான் பின்னால் நகர நகர, தன்னுடன் இணைந்து நடக்கும் ஷிவாவின் சட்டையல்லாத முதுகைப் பிடித்துக் கொண்டவள் தடதடக்கும் மேனியுடன் நடக்க, முன்னால் வந்து கொண்டிருந்த ஓநாயை தொடர்ந்து மற்ற ஓநாய்களும் அவர்களை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்தன.

முதலில் வந்தது தான் தலைமை ஓநாய் போல்.

"ஷிவா, அது நம்மைப் பார்த்து தான் வருது.." என்றாள் தொண்டைக்கு மேல் எழும்பாது குரலில்.

"Just keep calm and stay balanced, Sithara. And keep walking carefully backwards."

[அமைதியாகவும், சமநிலையுடன் இரு, சிதாரா. கவனமாகப் பின்னோக்கியே நட]

கூறியவனாய் வெகு எச்சரிக்கையுடன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த, நீண்ட தொலைவிலுள்ள இலக்கைக் கூட மிகத் துல்லியமாய் தாக்கும் இலகுரக ரிவால்வரை [ revolver ] மெதுவாக எடுத்தவாறே தயாராக இருக்க, மெள்ள வந்து கொண்டிருந்த முதல் ஓநாய் சட்டென்று தன் வேகத்தை அதிகரித்து அவர்களை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்ததில் அரை விநாடிக்கும் கீழான நேரத்தில், அசுர வேகத்தில் அதனைச் சுட்ட ஷிவாவின் அதிரடியில், அது தொப்பென்று கீழே சரிந்தது.

அது விழுந்துக் கிடந்த இடத்தை அனைத்து ஓநாய்களும் திரும்பிப் பார்க்க, அதி விரைவாய் தனக்குக் கீழ் காய்ந்துக் கிடந்த பெரிய மரக்கிளையை எடுத்த ஷிவா, கையில் கட்டியிருக்கும் ப்ரேஸ்லெட்டின் மூலமாக எரி நெருப்பையும் பற்ற வைத்தவன் கிளையை நெருப்பூட்டினான்.

அவர்களின் நல்ல நேரம் அது உடனே பற்றிக் கொண்டது.

அவர்களை நோக்கி வரும் மற்ற ஓநாய்களின் முன் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் கிளையை அசுர வேகத்தில் ஆட்ட, இருட்டுக்குள் சுடர்விட்டு எரியும் நெருப்புக்கும் அதன் புகைக்கும் அஞ்சிய ஓநாய்கள் பின்வாங்க ஆரம்பித்தன.

அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்களின் கால்களுக்கு அருகில் கிடந்த மரக்கிளைகளையும் கட்டைகளையும் எடுத்தவராய் ஷிவாவின் நெருப்புப் பந்தத்தைக் கொண்டு தானும் நெருப்பை வாங்கிக் கொண்ட விமானி ஓநாய் கூட்டத்தின் மேல் விசிறத் துவங்க, அவை ஓட்டம் பிடித்தன.

சில நிமிடங்களில் அங்கு அவை இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.

அதுவரை அடைத்திருந்த ஸ்வாசத்தை நிதானமாய் வெளியிட்ட விமானி, "எல்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்." என்றார்.

விநாடிகள் நேரம் பேசாது நின்ற ஷிவா பிறகு அவர்களை நோக்கித் திரும்பியவனாக,

“நாம தரையிரங்கப் போறது இங்க கட்சிரோலியில் இருக்கிற ப்ரைவேட் ஏர்போர்ட்டுன்னு சொன்னீங்க. ஆனால் அது இப்ப எந்தப் பக்கத்தில் இருக்குதுன்னே தெரியலை. இந்தச் சூழ்நிலையில் இதுக்கு மேல இப்படி நடக்கிறது பாதுகாப்பும் இல்லை.." என்றான்.

"அப்போ என்ன செய்யறது?"

"இங்க ஏதாவது மரத்திற்கு மேல் ஏற வேண்டியது தான். விடியற வரைக்கும் இங்கேயே இருப்போம். கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் கிளம்புவோம். அதான் இப்போதைய நம்ம சூழ்நிலைக்கு ஸேஃப்.."

அவனது கூற்றினை ஆமோதிப்பது போல் தலையசைத்த விமானியும் தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் பார்க்க, அவர்களின் வலதுப் புறம் பெரிய மரம் ஒன்று இருந்தது.

"பைலட். இதில் ஏறிக்கலாம்.” என்ற ஷிவா சிதாராவின் புறம் திரும்பியவனாய், “சிதாரா, உன்னால் முடியுமில்லையா?" என்றான்.

என்ன மரத்துல ஏறுவதா? என்பது போல் அவனைத் திரும்பிப் பார்த்தவள் முடியாது என்பது போன்று மறுப்பாய் தலையசைத்தாள்.

“இப்போ வேற வழியில்லை. நீ ஏறித்தான் ஆகனும்.”

“எப்படி ஏறுறது?”

"நான் ஹெல்ப் பண்றேன்."

இவ்வாறு மிருகங்களுக்கு மத்தியில் நிலத்தில் நிற்பதற்குப் பதில் மரத்தில் ஏறியாவது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நொடிகள் நேரம் யோசித்தவள் "ம்ம்ம்" எனவும், அவளையும் அழைத்துக் கொண்டு சென்ற ஷிவா முதலில் விமானியை மரத்தில் ஏற பணித்தான்.

காயங்களுடன் தடுமாறி ஷிவாவின் உதவியுடன் அவர் ஏறி முடித்ததும், "ம்ம், ஏறு.." என்றவனாய் அவளின் வெற்றிடையைப் பற்ற, அச்சூழலிலும் அவளுக்கு மயிற்கூச்செறிந்தது.

தயங்கி நின்றுத் திரும்பிப் பார்த்தவளை,

"அதான் வேற வழியில்லைன்னு சொல்றேன்ல. அந்த ஓநாய்கள் திரும்ப வந்தாலும் வந்துடும், அதற்குள் மேலே ஏறு.." என்று கூறியதில், ஓநாய் என்ற வார்த்தையைக் கேட்டதற்குப் பிறகு துணிவுடன் நிற்பதற்கு அவள் என்ன முட்டாளா?

அச்சத்தில் தட்டுத்தடுமாறி ஏற ஆரம்பித்தாள்.

அவளுக்கு உதவியவனாக அவள் ஏறியதும் தானும் ஏற, மரத்திற்கு ஒரு புறமாய் விமானி அமர்ந்து கொள்ள, அவரை விட்டு அடிகள் பல தள்ளி மறுபுறம் இருந்த கிளையில் சிதாராவும், ஷிவாவும் அமர்ந்துக் கொண்டனர்.

இயற்கையாகவே மரக்கொப்புகளாலும் பெரிய கிளைகளாலும் அவற்றைச் சுற்றிலும் தழைகளைக் கொண்டும் மரவீடு [treehouse] போன்று அமைந்திருந்த அந்த இடத்தில் வாகாக அமர்ந்துக் கொண்டவளின் சிந்தனை முழுவதும், எப்படியும் கீழே மட்டும் விழுந்து விடக்கூடாது என்பதிலேயே தான் இருந்தது.

அவ்வப்பொழுது கீழே இருட்டுக்குள் புதைந்திருந்த நிலத்தை நோக்கியவளாய் அமர்ந்திருந்தவளின் நோக்கம் புரிந்துக் கொண்டவனாக, "எதுக்கும் என்னை நெருங்கி உட்கார். என்னைப் பிடிச்சிக்கிட்டாலும் பரவா." என்றவன் முடிக்கவில்லை.

படக்கென்று அவனை நெருங்கி அமர்ந்தவள் அவனது கரத்தினைத் தன் இரு கரங்களையும் கொண்டு வளைத்துப் பிடித்துக் கொள்ளும் வேளையில், அந்தோ பரிதாபம் அவள் மானத்தை மறைத்திருந்த ஷிவாவின் சட்டை கீழே விழுந்தது.

"அச்சச்சோ!"

அலறியவளாகக் கீழே எட்டிப் பார்க்க, அவளின் அலறலிலும் அவள் இருந்த நிலை ஷிவாவிற்குக் குறுஞ்சிரிப்பையே வரவழைத்தது.

“ரொம்ப எட்டிப் பார்க்காத. கீழே விழுந்துடப் போற.”

“அப்புறம் உங்க ஷர்ட்?”

“உங்க ஷர்ட் கிழிஞ்சு பரிதாபமா தொங்கிட்டு இருக்கு, அந்த ஷர்ட்டை வச்சு நான் என்ன செய்யப் போறேன்னு சொன்ன?"

“ம்ப்ச். இப்ப அதுவும் இல்லாமல் எப்படி?”

செவ்வானமாய்ச் சிவந்து போய் ஒளிரும் கன்னியவளின் கூச்ச முகத்தை அந்த நிலவு வெளிச்சத்திலும் பார்த்தவன் சட்டையை எடுத்து வரலாம் என்ற எண்ணத்தில் கீழே இறங்கப் போகச் சட்டெனப் பிடித்துத் தடுத்தாள்.

"இல்ல, வேணாம். திடீர்னு அந்த ஓநாய்கள் எங்க இருந்தாவது வந்துடுச்சுன்னு ஆபத்து."

"நான் என்ன கீழே நின்னுட்டேயேவா இருக்கப் போறேன். இரு வந்துடுறேன்."

“இல்ல, ப்ளீஸ் பரவாயில்லை. நான் சமாளிச்சுக்கிறேன்.”

“இட்ஸ் ஒகே..”

கூறிவனாய் மீண்டும் இறங்க எத்தனிக்க, "அதான் வேண்டாம்னு சொல்றேனுல்ல.. பொண்ணு நானே பரவாயில்லைங்கிறேன், உங்களுக்கு என்ன?" என்றாள் வெடுக்கென.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பேசாது வாயை மூடிக்கொள்ள, பேச முனைந்தவன் பேசாது அமைதியாவிட்டதைக் கண்டு அவன் என்ன கூற வருகின்றான் என்பதைப் புரிந்துக் கொள்ளாது,

"பொண்ணு உனக்குத்தான் வெட்கமில்லை, எனக்கு இருக்குன்னு சொல்ல வர்றீங்களா?" என்றாள் தெள்ளத்தெளிவாகத் தவறான அர்த்தம் புரிந்து கொண்டு.

அவளை ஒரு விநாடித் திரும்பிப் பார்த்து முறைத்தவன் வார்த்தைகள் எதனையும் உதிர்க்காது அமைதியாக இருந்துவிட, அவனது அமைதி உறுத்தியதில்,

“நினைச்சேன்.. நீங்க அப்படித்தான் சொல்ல வந்திருப்பீங்க.. என்னைச் சொல்லணும். ஓநாய் வந்தாலும் பரவாயில்லை ஷர்ட்டை எடுத்துட்டு வாங்கன்னு சொல்லாமல் உங்களைக் கீழ இறங்க விடாமல் தடுத்தேன் பாருங்க, என்னைச் சொல்லணும்..” என்றாள் தலையை இலேசாகத் தட்டியவளாய்.

“இனி நீ சொன்னாலும் நான் கீழ இறங்க மாட்டேன். நீ திரும்பத் திரும்ப ஓநாய் ஒநாய்னு சொல்றதைக் கேட்டதில் இப்ப எனக்கே பயமா இருக்கு..”

“பயமா? உங்களுக்கா? அதை நான் நம்பணும்..”

“யெஸ்..”

அவன் பொய் கூறுகின்றான் என்று தெரியும், இருந்தும் விடாது அவனது வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கிக் கொண்டே இருந்தாள்.

“அப்படின்னா, வச்சிருக்கத் துப்பாக்கியை வச்சு அந்த ஓநாய்கள் எல்லாத்தையும் சுட்டிருந்தால் இப்போ அதுகளை நினைச்சுப் பயப்பட வேண்டியது இல்லை தானே? இதுல என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டு.”

“ஒகே, இதை இப்ப நான் சொல்லியே ஆகணும்.”

“எதை?”

“ஒரு நேரம், என்னடா இந்தப் பொண்ணு இவ்வளவு ப்ரில்லியண்டா இருக்காளேன்னு பாராட்டத் தோணுது. மறு நேரம் இவ இருபத்தி அஞ்சு வயசுப் பொண்ணா இல்லை சின்னக் குழந்தையான்னுக் கேட்கத் தோணுது.”

“அப்படியே நீங்க என்னைப் பாராட்டிட்டாலும்? சரி அப்படி என்ன நான் சின்னக் குழந்தை மாதிரி பேசினேன்.”

“இதோ, இந்த மாதிரி கேள்விக் கேட்குறியே, இதுவே சொல்லுதே..”

“ம்ப்ச். என்னன்னு தெளிவா சொல்லுங்க..”

“என்கிட்ட இருந்தது ஒரு ரிவால்வர் தான். அதிலேயும் எட்டுக் கேட்ரிஜஸ் [தோட்டாக்கள்] தான் போட இருக்கும். அதே போல இந்தக் காட்டில் நாம பார்த்தோமே அந்த ஒநாய்கள் மட்டும் வசிக்கலை. ஏகப்பட்ட மற்ற கொடிய மிருகங்களும் இருக்கு. எல்லாத்தையும் நான் வச்சிருக்கிற இந்தப் ரிவால்வரை வச்சு கொன்னுட முடியுமா? எமெர்ஜென்ஸிக்குன்னு நான் சில கேட்ரிஜஸ் வச்சிருக்கணும். இப்ப புரியுதா?”

“ஏன் எட்டு கேட்ரிஜஸ் மட்டும் எடுத்து வந்தீங்க.. எத்தனை என்கவுன்டர்ஸ் பண்ணிருக்கீங்க? இதுக் கூட தெரியாதா?”

“நான் இன்னைக்கு வருணை என்கவுன்டர் பண்ண வரலை. அதுவும் இல்லாமல் நீ இப்படிக் காட்டுக்கு கூட்டி வருவன்னு எனக்கு எப்படித் தெரியும். உன் காரில் ஏறின உடனேயே கேட்டேன், நாம எங்கப் போறோமுன்னு. அப்பவே சொல்லிருந்தின்னா இன்னும் கேட்ரிஜஸ் எடுத்து வந்திருப்பேன். ஆனால் அதைவிட்டுட்டு இப்ப என்னைக் குறை சொல்ற.”

வருணை என்கவுன்டர் பண்ண வரலை என்ற வார்த்தைகள் ஏனோ பெண்ணவளுக்குப் பிடிக்கவில்லை என்று அவளது முகச்சுழிப்புக் கூறியது.

அதனை ஷிவாவின் புத்தியும் குறித்துக் கொண்டது.

“நான் உங்களைக் குறை சொல்லலை. ஆனால் இப்படி அந்தரத்துல தொங்குற மாதிரி மரத்து மேல உட்கார்ந்திருக்கிறதுல சரியா நான் திங்க பண்ணலை, அவ்வளவுதான். அதுக்காகக் குழந்தை அப்படி இப்படின்னுப் பேசாதீங்க..”

"அப்போ நீயும் பெரிய பொண்ணு மாதிரி பேசு.."

அவனது பதிலில் அவள் அவனைப் பார்வையால் எரித்துவிடாமல் இருந்ததே அதிசயம்.

இளையவர்களின் உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த விமானி கண்களைச் சற்று மூடி பின்னால் இருந்த பெரிய மரத்தண்டில் தலை சாய்க்க, அந்த விகாரமான சூழலிலும் சண்டையிடும் பெண்ணவளையும், தனது உயர் பதவியையும் மறந்தவனாய் ஏட்டிக்கு போட்டியாய் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த இளம் காவலதிகாரியையும் நினைத்து அவரின் உதடுகளும் புன்னகையில் நெளிந்தன.

அரிமாக்களின் வேட்டை

தொடரும்!

References

Plane Crash - Sample Video -


What is turbulence? Is it dangerous for small planes?

Turbulence is one of the most unpredictable of all the weather phenomena that are of significance to pilots. Turbulence is an irregular motion of the air resulting from eddies and vertical currents.

Airplanes are designed to withstand rough conditions and it is rare for aircraft to incur structural damage because of turbulence. But turbulence can toss passengers and crew members around, potentially causing grave injuries. In extreme turbulence, the airplane is tossed violently about and is impossible to control. It may cause structural damage.

கொந்தளிப்பு என்றால் என்ன? சிறிய விமானங்களுக்கு இது ஆபத்தானதா?

விமானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து வானிலை நிகழ்வுகளிலும் கொந்தளிப்பு மிகவும் கணிக்க முடியாத ஒன்றாகும். கொந்தளிப்பு என்பது சுழல் மற்றும் செங்குத்து நீரோட்டங்களின் விளைவாக காற்றின் ஒழுங்கற்ற இயக்கமாகும்.

விமானங்கள் கடினமான சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் கொந்தளிப்பு காரணமாக விமானங்கள் கட்டமைப்பு சேதத்தை அடைவது அரிது. ஆனால் கொந்தளிப்பு பயணிகள் மற்றும் பணியாளர்களைச் சுற்றி வளைத்து, கடுமையான காயங்களை ஏற்படுத்தும். தீவிர கொந்தளிப்பில், விமானம் கடுமையாகத் தூக்கி எறியப்பட்டு, கட்டுப்படுத்த இயலாது. இது கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தலாம்

Mayday! Mayday! Mayday! :
It's the call that no airplane pilot or ship's captain ever wants to have to make. Why? Because it means trouble. Big trouble! Mayday is an emergency procedure word used internationally as a distress signal in voice-procedure radio communications.
Mayday got its start as an international distress call in 1923. It was made official in 1948. It was the idea of Frederick Mockford, who was a senior radio officer at Croydon Airport in London. He came up with the idea for “mayday" because it sounded like the French word m'aider, which means “help me."
 
Last edited:

Selvi

Member
Maam, to be truth, I can't continue reading throughout each chapter in one go. I need to take small breaks and complete it. It's too good and scary what's next and my heart beats faster every moment. I still enjoy reading, never say die!
 
Oops… It was dreadful…. 😨😨😨
Wow… Amidst the thrilling events, Shivthara are getting closer… 🙈🙈🙈

That dead body must be Sasidharan… Tit for tat…

Will these trio find Durga or will Varun?
 

Vidhushini

New member
விமானிக்கு ஷிவா-சிதாரா பிணைப்பில் ஏதோ தீர்க்கமா உணருறார் போல; அதான் சன்னமா சிரிக்கிறார்.

Interesting @JB sis.
 

Lucky Chittu

New member
Yes mam waiting for Durga and Varun pair. Ivunga pairum nallarkku but always Varun Durga pair super. Thanks for explaining us about turbulence and mayday and katchiroli forest, wolves lives in group and their attack like that mam. Waiting for the next epi mam.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top